www.gamblinginsider.ca

23 December 2016

இது Facebook தவ வாழ்வு! - Mano Red


Facebookல் அன்றைய 
Search ராசிப்படி
People you may knowவில் 
Add Friend வரிசையில் வந்தாள்.
Requestகளை ரசித்து ஏற்பாள்போலும்
Cancel இன்றி விண்ணப்பத்தை
Accept செய்து
ஆதரவுக் கரம் நீட்டினாள்.
அன்றிலிருந்து
Timelineல் 3Gயுடன்
தவ வாழ்வுதான்!
What's on your mindல்
வாய்க்கு வந்ததைப் பதியும்
அவளது பதிவுகளுக்கு
நான்குமுறை Love buttonஐயும்
ஓரிருமுறை Wow buttonஐயும் தட்டுவதுண்டு.
அவ்வப்போது சில photoக்களை
Uploadடுவாள்.
Liveல் ஏற்றும் மொக்கை Videoக்களுக்கு
Like கேட்பாள்.
Commentகளுக்கு தவறாமல்
கண்ணடிப்பாள்.
Messengerல் என்னுடைய கவிதைக்கு
Awesome சொல்லும் நாட்களில்
ஆவேசமாக நானும் அதிகம் எழுதுவதுண்டு.
என் Statusஐ பதியாத நாட்களில்
Poke செய்து
போக்குக் காட்டுவாள்.
நான் Check in செய்யும் இடங்களுக்கு
தானும் செல்ல வேண்டுமென்பாள்.
"Fake idஆ நீ" என்று நான் கேட்டபோது
"போடா பேக்கு" என்றவள்
இப்போது எங்கு சென்றாளோ?
அவளுடைய
On this day பதிவுகளை உண்டு
இன்றும் பசியாறுகிறேன்.😍😍

சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் இருக்கிற உறவு! - Mano Red



அவனைத் தேடி பிரயோஜனம் இல்லை
அவனைத் தேடுவதிலும் தப்பில்லை.
என் முதுகிலேறி
பாவப் பயணம் செய்திருக்கிறான்.
எனக்குள் இருந்த
மிருகத்தை இழுத்து
வீதியில் விட்டவன்
கடவுளை இழுக்கையில்
கை கழுவிப் போயிருக்கிறான்.
தனிமை என்கிற தவத்தில்
கண் மூடும் கணம் பார்த்து
நிமிரத் துடிக்கும்
நாயின் வாலாக
இமை துருத்தி
எனை வருத்தியிருக்கிறான்.
காதலில் காமம் பழகி
காமம் கழிந்து
காதல் துளிர்க்கையில்
காதல் தவிர்த்து காமம் மட்டும் உணரென்று
காறி துப்பியிருக்கிறான்.
கிழிந்த சட்டைக்காரனின்
ஒட்டிய வயிறு காணும்போதெல்லாம்
அதன் மீதேறி
அம்மண சம்மணம்போட்டு
கவளச் சோறு தின்றவன்
எச்சில் கையால் மனிதம் ஓட்ட
எத்தனிக்கும்போது
மரணிக்கத் துடித்திருக்கிறான்.
அவனுக்கும் எனக்குமான உறவு
பல்லின்மேல் நாக்கு படாத
பகட்டு வார்த்தைகள் போல,
சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும்
இடையில் இருக்கும் வெற்று பிம்பம்!

உடையாத நீர்க்குமிழி! - Mano Red


அவனை நீங்கள் அடிக்கடி பார்ப்பதுண்டு!
அவனைக் கடக்கும்போது உங்களில் சிலர்
ஊனமாகிப் போவதுண்டு.
அவனை நீங்கள் அல்ல
உங்களைப்போல் உன்மத்தர்கள்
ஆயிரம்பேரை தினம் அவன் கடக்கிறான்.
கறுப்புப் பணத்திற்கு எதிரான
தர்மயுத்தத்தை வியக்கும் நீங்கள்
தர்மத்தை என்றாவது வியந்ததுண்டா?
‘எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள்...’
என்ற பகடியுடன்
வங்கி வாசலில் காத்திருக்கிறீர்கள்.
அதற்கு எதிர்ப்புறம் எவ்வித எதிர்ப்புமின்றி
அவனும் பிச்சை கேட்கிறான்
இப்போது அவனைக் கடந்து
ஒரே ஒரு மனிதன் செல்கிறான்!

01 December 2016

தங்கைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! - Mano Red



தங்கைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! (26.11.16) 😍 😍😍
-
சிசேரியன் என்பதால், 'பிறந்தது' என்பதைவிட வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன் உறவுமுறை அக்காக்களும், தோழிகளும் சிசேரியன் பிரசவத்தினால் பட்ட கஷ்டம் பார்த்து, “நான் சுகப்பிரசவத்தில்தான் பிள்ளை பெற்றுக்கொள்வேன்” என்று அடம்பிடித்தவளாக தாயாகத் தயாரானாள். இதுல நான் ஏதாச்சும் சொல்லணுமே, "38 வயசுல உலக அழகியா இருந்த ஐஸ்வர்யா ராயே சுகப்பிரசவத்துலதான் குழந்தை பெத்துகிட்டாங்க, உனக்கு 25 வயசுதான ஆகுது" என்றேன். அவளும் அதற்கேற்றவாறு சரியான உணவு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, நடைபயிற்சி, சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்வது என்று நடைமுறைப்படுத்திக் கொண்டாள். எல்லாம் சரியாக இருக்க, இரண்டு நாட்களுக்கு முன் பிரசவ வலி வந்து, ஊரின் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். எந்தப் பெண்ணுக்கும் தொடர்ச்சியாக பிரசவ வலி எடுக்காது. 45 விநாடிகள் வலி எடுத்தால் அடுத்த 3 நிமிடங்களுக்கு வலி இருக்காது. மீண்டும் 45 விநாடிகள் வலி, 3 நிமிடங்கள் வலியின்மை என்று தொடரும் வலி மிகுந்த தருணத்தில் அந்த 3 நிமிடங்கள் மட்டுமே வலியில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியுமாம்!

அவளுக்கு வலியும் சரியாக ஒத்துழைக்காததால் எல்லாரும் பயந்து சிசேரியன் செய்துவிடலாம் என்றிருக்கிறார்கள். அப்போதும் அவள் மறுத்து மறுநாள் வரை காத்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறாள். நேற்றிரவும் அதுபோல விட்டு விட்டு வலி வர, இந்த வலி சுகப்பிரசவத்திற்கு ஒத்துழைக்காது என்று சொன்ன மருத்துவர்கள், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரவோடு இரவாக அனுப்பி இருக்கிறார்கள். அங்கே இரவு 2மணிக்கு சிசேரியன் செய்து குழந்தையை நல்ல முறையில் எடுத்து இருக்கிறார்கள். நல்லவேளையாக, நல்ல நேரம், ராசி, நட்சத்திரம் பார்த்து குழந்தையை வெளியே எடுக்கலாம் என்று குடும்பத்தினர் யாரும் சொல்லவில்லை. அதுவரை சந்தோஷம்.


இப்போதெல்லாம், தாய்மை அடைவதே பெரிது என்றும், வயது கூடக்கூட பிரசவத்தின் சிரமங்களை பெண்களால் தாங்க முடியாது என்றும் உருவாக்கப்பட்ட நவீன தோற்றங்களால் அதிக பிரசவங்கள் சிசேரியனில் முடிகின்றன. இளம்பெண்களும், சுகப்பிரசவ வலியை (மனித உடல் தாங்கக்கூடிய வலியின் அதிகபட்ச அளவு 45 டெல். ஆனால், சுகப்பிரசவத்தின் போது பெண்ணுக்கு 57 டெல் வரை வலி ஏற்படும். இது, 20 இடங்களில் ஒரே சமயத்தில் எலும்பு முறிந்தால் ஏற்படும் வலிக்குச் சமம்) தாங்க முடியாது சிசேரியன் செய்யலாம் என்று குடும்பத்துடன் ஓ.கே. சொல்லிவிடுகிறார்கள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மருத்துவமனைகளும் இப்போது சுகப்பிரசவத்தில் அதிகம் ரிஸ்க் எடுப்பதில்லை.


இயற்கையின் அழகான ஆச்சர்யம் பிரசவம்! பெண்ணுக்கு இன்னொரு பிறப்பு. சுகப்பிரசவமோ, சிசேரியனோ எதுவாக இருந்தாலும் அவள் பெறும் வலிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. எந்த முறையில் பிரசவித்தாலும், அதனால் பல பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தையும் சகித்தே தன் குழந்தையின் ஆத்மாவுக்கும் உடம்புக்கும் மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்றுக்கொள்கிறாள் ஒரு தாய்! 😍 😍




29 November 2016

அம்மாக்களைப் பெற்ற மகள்கள்! - Mano Red


முதல் குழந்தை பெண் என்றதால்
அம்மாவிடமும் மாமியாரிடமும்
பேச்சு வாங்கி,
அடுத்ததையும் பெண்ணாகப் பெற்றெடுத்து
அத்தனை பேரையும் எதிர்க்கிறாள்!

அப்பாவிற்குப் பிடித்த பெண்ணாக
தனக்கென வைத்திருந்த இடத்தை
மகள் வந்ததும்
விட்டுக் கொடுத்து
விலகி நிற்கிறாள்!

தோற்றுவரும் பொழுதுகளை
தேற்றுவதற்காக
‘பொம்பளப்புள்ள அழக்கூடாதுடி” என்று
அழுது அணைத்து
அன்புச் சூடு பரப்புகிறாள்!

தகப்பன் இல்லாத மகளின்
தனிமை நாட்களை இனிமையாக்க
தன்னை எரித்து
தன்னை உருக்கி
தன்னை வார்த்துத் தங்கமாக்கி
தனியே, மகளை கரை சேர்க்கிறாள்!

காதல் வாழ்க்கை தேடி
கடந்து போனவளிடம்
கணவனுக்குத் தெரியாமல்
கடிந்து பேசி
கனிந்து உருகி
மகள் பெற்றெடுத்த மகள் குரலை
காது வழியே இதயம் அனுப்புகிறாள்!

இப்படித்தான்
மகள்களைப் பெற்ற அம்மாக்களைவிட
அம்மாக்களைப் பெற்ற மகள்கள்
அதிகம் இன்புறுகிறார்கள்!

24 November 2016

காடழிக்கும் காலன்! - Mano Red



மைக்ரோ சிப்புகள் உலகத்தில்
மரப் பட்டைகளைக் காணாத
மரங்கொத்தி
அத்தனை பெரிய அலகை
உடைத்தெறியத் துணிகிறது!
.
இலந்தையும் இலுப்பையும்
கடுக்காயும் வேம்பும்
கம்ப்யூட்டர் வந்த பிறகு
காய்ப்பதே இல்லையென
கிளி ஒன்று சொல்கிறது.
.
வெண்மை நிறப் பூக்களும்
நீண்ட காம்புகளில் காய்களுடன்
உயர வளர்ந்திருக்கும்
பொந்தன்புளி மரம்தான்
அந்தக் காட்டின் மொத்த அழகன்.
அவன் சொல்கிறான்
“மனிதனின் மூதாதையர்
இங்கிருக்கும் மரப் பொந்துகளில்
வாழ்ந்தவர்களாம்!”
.
“காடு இல்லாத ஊரில்
காசு இருக்கும்
மாசு இருக்கும்
உயிர் இருக்காது”
என்று சொன்ன அரசமரம்
ஆற்றாமையால் அழுதுவிட்டது.
.
“இயற்கையை ஊனமாக்கி விட்டு
செயற்கையை வளர்க்க வேண்டுமா?”
காலில் மிதித்துவிட்டு
தும்பிக்கையை அசைத்தவாறு
முறைத்தபடி
தாயிடம் ஓடுகிறது குட்டியானை!
.
“காடில்லையேல் வீடில்லை
என்பதை மறந்து
கொஞ்சம் கொஞ்சமாக அழித்தும்
அழிந்தும் வருகிறீர்கள்” என்று
என்னுடன் பேசிக்கொண்டு வந்த
சிங்கத்திடம் நான் சொன்னேன்
“தன்னுயிர் போல
மண்ணுயிரை நினைக்காத
காடழிக்கும் காலன் நாங்கள்!”


08 November 2016

பெண்ணே! ரௌத்திரம் பழகு - Mano Red




கேள் பெண்ணே கேள்!
இது நகரப் பேருந்தல்ல
நரகப் பேருந்து.
உனக்காகப் பேசும் பெண்ணியவாதிகளை
பேருந்துகளில் தேடாதே!

சீண்ட வரும் சிறு நரிகளை
கவனத்தில் கொள்!
அற்ப சுகம் தேடும் கயவர்கள் கூட்டம்
உன் பின்னால் நிற்கலாம்
அதிர்ந்து விடாமல் ஆத்திரம் கொள்!

“பெண் என்னால் என்ன செய்துவிட முடியும்?”
என்று எண்ணாமல்
ரௌத்திரம் பழகு!
சிறுமை கண்டு பொங்கு!

கைப்பையில் ஊசியை வைத்திரு
ஏதாவது கை 
உன்னை நோக்கி நீண்டால்
பாம்பாக சீறி விஷம் ஏற்று!

கடவுளாக வணங்கிவிட்டு
கையைப் பிடித்திழுப்பார்கள்
கலங்கி விடாதே!
தவறு செய்யும் கள்ளனை
தட்டிக் கேட்க யாரும் வரமாட்டார்கள்
நீ தலை குனியாதே!
மொத்த ஆண்களும் தலை குனியட்டும்.

பெண்ணே! உனக்கு எப்போது 
தைரியம் வருகிறதோ
உனக்காக பெண் ஒருத்தி எப்போது
ஓடி வருகிறாளோ
பெண்களுக்குள் ஒற்றுமை எப்போது 
ஓங்கி நிற்கிறதோ
அன்றுதான் பெண்ணே 
முழுமையாகப் பாதுகாக்கப்படுவாய்!

25 October 2016

கதவுகளுக்கு இடையில்... - Mano Red


பண்டிகை நாட்களிலெல்லாம்
கதவுகளைக் கழுவி
பூவுடன் பொட்டுவைப்பது
அம்மாவுக்குப் பிடிக்கும்!

அப்பாவுக்கும் கதவுக்கும்
அப்படியொரு பந்தம்!
அவர் திறக்கும் அழகே
அவர் வரவைச் சொல்லிவிடும்!

மச்சு வீட்டின் நிலைப்படி
சிறிதாகவே இருக்கும்.
மன்னர் வந்தாலும்
குனிந்துதான் நுழைய வேண்டும்
இருந்தாலும்
கூன் விழுந்த பாட்டிக்கு
அந்தக் கவலையில்லை!

வேகமாக வளர வேண்டுமென
வருகையிலும் போகையிலும்
கதவைப் பிடித்து தொங்குவது
அண்ணனின் வழக்கம்!

கதவில் ஏறி ஆடுவது மட்டுமே
என் விளையாட்டு.
துருப்பிடித்த காரணத்தால் வரும்
‘க்ரீச்... க்ரீச்...’ சத்தம் கேட்டு
ஓடிவரும் தாத்தாவுக்கு
என்னைத் துரத்துவதுதான் பொழுதுபோக்கு!

தாழ்ப்பாளைத் திருகிக்கொண்டே இருக்கும்
தங்கையால்தான் வீட்டில்
அடிக்கடி பிரச்னை வருகிறது
என்ற நம்பிக்கையும்
கதவுகளுக்கிடையே இருந்தது!

இப்போதும் கதவு திறக்கிற சத்தம்
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
‘இந்த நேரத்தில்
எந்தக் கதவு திறக்கிறது’ என்று
நானும் விழித்துவிடுகிறேன்!

19 September 2016

எனதருமை ஆர்கானிக் காதலி! - Mano Red


கீழிருந்து மேல் நோக்கி
விழும் அருவியொன்று
அவளது உள்ளக்கிடப்பிலிருந்து
என் பொருட்டு
எப்போதும் பாயும்.
காந்தப் பார்வையால்
வட தென் துருவங்களை
புருவ அசைவில்
எனக்கெதிராகத் திசை திருப்புவாள்!
இயற்கைக்கு நேரெதிராக
விளையாடுவதெல்லாம் புதிதல்ல
அவளுக்கு!
இப்படித்தான் ஒருநாள்
பிரபஞ்சத்தை
காதல் பஞ்சத்தில் ஆழ்த்த
மொத்தக் காதலையும்
உறிஞ்சி எனக்களித்தாள்!
திணறிக் களித்த
கணம் கரைவதற்குள்
முத்தத் தொகுப்பொன்றை
மூச்சு முட்டப் பரிசளித்தாள்!
நல்லபடியே எல்லாம் கடந்துவர
அவள் நட்டதும் பூத்த
ஆர்கானிக் ரோஜாவிலிருந்து
பூவொன்று எனக்காகப் பறிக்கப் போனவள்
முள் குத்திய பெருவலியில்
அணு அணுவாகச் சிதறி
கதறி அழுதபோது
எனதாகிய என்னுடல்
ஆலகால விஷம் கலந்த
பாற்கடலாகித் தவிப்பதில்
என்ன அநியாயம்
இருந்துவிடமுடியும்?!

வாழ்தலின் அவசியம்! - Mano Red


கிரிக்கெட் ஸ்கோர் போர்டு 
கண்டு பழகியவர்களுக்கு
இறந்தவர்களின் எண்ணிக்கை 
குறிக்கப்பட்டிருந்த பலகை
விநோதமாகவே காட்சியளித்தது.

மூக்கு எது, வாய் எது என்றவாறு
கூழாகி நொறுங்கிக் காட்சியளிக்கும்
முகங்களைவிட
கதறி அழும் உறவுகளின் முகங்கள்
கண்ணீரை வேகமாக
ஊற்றெடுத்தன.

நாசியிலிருந்து
பிரிக்க முடியாத
பிணவாடையைக் கடந்து
சற்றும் நகர முடியவில்லை.
அந்த வாடை
உடையில் இருந்தா
உடம்பில் இருந்தா
காற்றில் இருந்தா
எங்கே ஒட்டிக்கொண்டிருக்கிறது
என்றும் தெரியவில்லை.

அலறல்களும் அழுகுரல்களும்
புலம்பல்களும் சாபங்களும்
காதில் தொடர்ந்து கேட்க,
மீண்டும் மீண்டும்
உரிமைகளைப் போராடி மீட்கவே
எங்களில் இன்னொருவன்
தீக்குளிக்க
தயாராகிக் கொண்டிருக்கிறான்!

வாழ்தலுக்கான அவசியம்
அதீதமாகச் சித்தரிக்கப்படும்போது,
அவன் செல்லும் இடமெல்லாம்
மரணமும் துரத்தி வருகிறது!


வள்ளியின் தாலி அறுப்பு! - Mano Red


முகம் முழுக்க மஞ்சள் பூசி 
பெரிய குங்குமப்பொட்டு வைத்து
மஞ்சள் குங்கும ஈரம் காய்வதற்குள்
வலிந்து அழித்தனர்.

தலை நிறைய பூ வைத்து
பூ வாசம் மூக்கேறும் முன்
அறுத்து வீசினர்!

கை நிறைய வளையல்களுடன்
கொலுசு மெட்டி அணிவித்து
அடுத்த நொடியே உடைத்து நொறுக்கினர்.

பின்பு கதறி அழச்சொன்னார்கள்
அவளும் கதறி அழுதாள்
அந்த அழுகை துக்கத்தினால் அல்ல
பலபேர் பார்க்க
தாலி அறுத்த அவமானத்தில்
வந்த அழுகை!

கையாலாகாத கணவன் கொடுத்தது
தாலி மட்டுமே!
பூ பொட்டு வளையல் எல்லாம்
பிறந்த வீடு கொடுத்தது.
குழந்தைப் பருவம் முதல்
அவள் சுமந்து வந்த உரிமைகளை
அழிக்கவும் அறுக்கவும் உடைக்கவும்
யார் உரிமை தந்தது?

மனதிற்குள் கொதிப்புடன்
தாலி சுமந்த பாவத்திற்காக
சமாதியின் மீது பூக்களை
தூவிக்கொண்டிருந்தாள் வள்ளி!



மகளதிகாரம் 2 - Mano Red


அலாரம் வைத்ததுபோல்
நடுராத்திரியில் அழுது
கொட்டாவி விடுவதைக்கூட
கவிதையாகச் சமைத்து
மதிப்பெண் குறைவுக்கு
பென்சிலைக் குற்றவாளியாக்கி
புதிய நபர்களுக்கெல்லாம்
‘டாட்டா’ சொல்லி விடைபெற்று
கதையில் பலியான மானுக்காக
“பாவம்” என்று ‘உச்’ கொட்டி
அமாவாசை நிலவை
டார்ச் அடித்துத் தேடி
பெரியவளாகிறேன் என்று சொல்லி
இடுப்பில் சிறுகுடம் சுமந்து
இப்படி எல்லாத் திசைகளிலும்
பிம்பங்களைப் பொருத்தி
வீடுஉலா வரும் மகளே
உன் ஃபோட்டோக்களிலும்
பால் வாசம் வீசுகிறது!

கடவுளின் கெமிஸ்ட்ரி! -Mano Red


தீச்சுழல் நறுக்கி
பெரும்பிளம்பின் வாய்வழியே
நடுவூடாகத் தெரியும்
மின் தொடைகளில்
ஒரு வைராக்கிய சங்கீதம்!
இச்சைகளின் இரவுகளை
பிச்சையெடுக்க
மீளாத் துயரின் நவரசங்களில்
எச்சில் வடிய
நாக்கு ஒன்று தலைகீழ்
தொங்குகிறது.
அச்சமயம் ஆதி இருளொன்று
கடவுளின் முந்தானை பிடித்து
அய்யோவென கூவி
காதலுக்கு அழைத்தபோது
கடவுளின் காதல் வேதியியல் பாதியில்போனது
வீதியில் நிற்கும்
குடுகுடுப்பைக்காரனிடம்!
-Mano Red

மகளதிகாரம்! -Mano Red



ஏய்... நிஞ்சா, டோராக்களே
டிவியில் விளையாடும் உங்களை
என்றாவது ஒருநாள்
வீதிக்கு இழுத்துச் சென்று
விளையாடப் போகிறாள்
எச்சரிக்கையாக இருங்கள்!
*
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம்
என்பதெல்லாம்
அவளுக்குக் கைவந்த கலை!
*
“ஒண்ணு மூணு ஆறு” என்றபடி
தப்புத் தப்பாக
மழலை மொழியில்
மழைத்துளியை எண்ணுகிறாள்.
சந்தோஷமாகச் சிதறுகிறது
ஏகப்பட்ட மழைத்துளிகள்!
*
“அப்பா... இந்தப் பாப்பா அழகா இருக்குல்ல”
என்றவாறு
கண்ணாடி முன் நின்றுகொண்டு
தலை சாய்க்கிறாள்
தெரிகிறது தெய்வீகச் சாயல்!
*
“அப்பா... A for Appleதானே?”
என்ற மகளிடம்
அல்ல மகளே
உன் அப்பன் தமிழன்
“ஆ என்றால் ஆப்பிள்” என்றேன்.
“ஆப்பிள் தமிழ் இல்லப்பா?” என்றவாறு
தலையில் கொட்டுகிறாள்
தமிழ் இனிக்கிறது!
*
கண்ணை மூடியபடி
எதிரில் ஒளிந்துகொண்டு
வீடு முழுக்கத் தேடச் சொல்கிறாள்
‘பாப்பாவைக் காணோமே’ என்றபடி
உலகம் சுற்றிவருகிறேன்.
*
வீட்டின்
பத்துக்குப் பத்து அறைக்குள்
பல மைல்கள் நடக்கிறாள்.
ஓடப் பழகிவிட்டது
நடை பயிலும் வண்டி!
*
முத்தமொன்று கொடுத்து
திருப்பி வாங்கிவிட்டு
“அப்பா... எச்சிப்பா"
எனத் துடைப்பதுதான்
மகளதிகாரத்தின் உச்சம்!

03 September 2016

எழவுக்குப் போய்ட்டு வரேன்! - Mano Red


ஊரின் எல்லை தாண்டி
ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த
ஒப்பாரிச் சத்தமும்
முற்றத்துக் கூட்டத்தில் கேட்ட
முனுமுனுப்புச் சத்தங்களும்
சாவு வீட்டை
சலசலப்பாக்கி இருந்தது.
அழுதழுது ஓய்ந்தவர்கள் 
காபிக்களிலும் சோடாக்களிலும்
மூழ்கி இருக்க,
கொல்லி தயார் செய்யவும்
கோடித்துணி கிழிக்கவுமென
சாதி வாரியாக 
வேலைகள் ஒருபுறம் 
நடந்துகொண்டிருந்தன.
எல்லாமே முடிந்த
இறுதி ஊர்வலத்திலும்
ஆளாளுக்கு ஒரு கதை பேசி
மாட விளக்கொன்றை 
அணைத்துவிட்டு
வீடு திரும்பும்போது
”எங்க போய்ட்டு வர்றீங்க” என்று கேட்ட
எதிர்ப்பட்டவரிடம்
“எழவுக்குப் போய்ட்டு வரேன்” என்று 
வழக்கம்போல சொல்லிவிட்டு
கால் தேய்த்துக் கழுவியதில் 
கரைந்து ஓடின 
மூன்று தலைமுறை கண்ட
கந்தசாமிப் பாட்டனின் நினைவுகள்!

30 August 2016

மங்கை வார்குழல்! - Mano Red



நறுமணம் தடவி
வகிர்ந்து வாரி மலர்ச் சூடி
வளமிக்க சோழன் நீர்த்துறை
கருமணல் நீண்டதுபோல்
தேன் பாயும் குளிர்ச்சியுடைய
கூந்தல் கொண்டவளே!
உன்னைத் தழுவி
கூந்தல் கொள்ளும்
என் சந்தேகமெல்லாம்
கூந்தல் மணம் பற்றியதல்ல
‘கொங்கு தேர் வாழ்க்கை’ என
மாபெரும் பட்டிமன்றம் நடத்திய
நக்கீர சிவபெருமானின்
மூக்கின் மீதே!

11 August 2016

இல்லீகல் பியூட்டி! ❤ 😍😍 - Mano Red


உன் ப்ரிஸ்மா கண்களால்
ஆயிரம் முறை ஃபில்ட்டர் செய்கிறாய்.
ஒரிஜினலை ஓரங்கட்டிவிட்டு
ஒவ்வொரு எஃபெக்ட் மாற்றும்போதும்
எரிச்சலுடன் முகம் சுளிக்கிறாய்.
க்ராப் செய்கிறாய்
ஃப்லிப் செய்து 
தலைகீழாக மாற்றுகிறாய்.
அலட்டிக்கொள்ளாமல்
கலர் அட்ஜஸ்ட் செய்து
ஃப்ரேம்க்குள் அடங்காத என்னை
போக்குக் காட்டியே
ஃபோகஸ் செய்கிறாய்.
கபாலி டயலாக்போல
ஸ்டிக்கரில்
மீசையையை முறுக்கியும்
மரு ஒன்றை ஒட்டியும்...
இப்படியெல்லாம்
இந்த இல்லீகல் பியூட்டியை
கொலாஜ் செய்வதற்குப் பதில்
கொலை செய்துவிடலாம் நீ! 

05 August 2016

வாசல் கடக்கிறார்! - Mano Red


மசூதி தெருவின் முனையில் 
பாழடைஞ்ச ஒரு ஐயர் வீடு! 
அந்தத் தெருக்காரர்களும் 
அப்படித்தான் சொல்வார்கள்.
தாசில்தாராகப் பழுத்து
பணி ஓய்வுபெற்று
பணக்கார வாழ்க்கையின்
மொத்த ஜீவனையும்
உதவிகள் செய்தே கழித்தவர்
மனைவி மக்களை
எப்போதோ இழந்திருந்தார்.
"ஊசியின் காதில் ஒட்டகங்கள் நுழைந்தாலும்
செல்வந்தர்கள் மோட்ச வாசலைக் கடக்க முடியாது"
என்ற கிறிஸ்துவின் வாக்கை
பொய்யாக்க
உலக சம்பிரதாயப்படி
ஒருநாள் இறந்துபோனார்!

01 August 2016

ஒரு பெரும் போதை! - Mano Red


>>> "தம்பீ... ஒரு உதவி..."
சொல்லுங்க, என்ன?
>>> "கொத்தனார் வேலைக்காக வந்தேன்,
10நாளா வேலை இல்ல, சாப்ட்டு ஒரு வாரம் ஆச்சு..."
சரி. அதுக்கு நான் என்ன செய்யணும்?
>>> "ஏதாச்சும் கொடுத்தா, அம்மா ஹோட்டல்ல சாப்பிட்டுக்குவேன்."
ஓ... யார் கூட வந்தீங்க? எங்க தங்கியிருக்கீங்க?
>>> "எங்க ஊர்ல, நான் பெரிய கொத்தனார். இங்க வேலை தேடி வந்தேன் கெடைக்கல,
பிள்ளைகளும் வீட்ல சேத்துக்கல, எனக்கு ஏதாவதுன்னாகூட கேக்க யாருமில்ல."
அய்யோ! இந்தாங்க, இத வச்சுக்கோங்க.
>>> "நீ நல்லாருக்கணும் தம்பி"
ம்ம்ம்... ம்ம்ம்...
(ஒரு பெரும் போதை எனக்குள் ஏறுவதை உணர முடிந்தது)
இரண்டு அடி நடந்தபிறகு திரும்பி வந்தார்.
>>> "நீ, நல்லாருப்ப தம்பி"
(அவர் சொன்னதெல்லாம் உண்மையோ, பொய்யோ?! என்னால் செய்ய முடியும் சிறு உதவிக்கு இத்தனை கேள்விகள் அவசியமற்றதாக இருந்தாலும், ‘யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டேன்’ என்று முகத்தைச் சட்டெனத் திருப்பும் மனநிலை, சில கேள்விகளுக்குப் பிறகு, ‘உதவிசெய்யலாம்’ என்ற நிலைக்கு மாறிவிடுகிறது.) இது, பாத்திரம் அறிந்து இடுவது அல்ல, கதாபாத்திரம் அறிந்து இடுவது!

30 July 2016

வெஸ்டர்ன் டாய்லெட்! - Mano Red


விடிந்தும் விடியாத பொழுதுகளில்
காலைக் கடன் கழிக்க
மறைவிடம் தேடி ஓடும்
எம் ஊர்க்காரர்களில்,
மேற்கத்திய கலாசாரம்
அனுபவிக்கும்
முதல் தலைமுறையாகிய நாங்கள்
ஒவ்வொருமுறை கழிவுகளை
ஃப்ளஷ் செய்யும்போதும்
பரம்பரை நினைவுகளை
படிமங்களாக்கப் பழகிக்கொள்கிறோம்.

மிஞ்சி இருப்பது... Mano Red


அந்த மிருகத்திடம் 
இன்றும் தோல்விதான்.
நாய் உறங்கி நரி உறங்கி
ஊர் உறங்கியும்
உறங்காத உள்ளத்திற்குள்
கூடுவிட்டுக் கூடு பாய
இருட்டுக்குள் தவழ்ந்து வந்தது.
அனுமதி கேட்காமல்
அதிரப் புகுந்து
மாயத்திரையால்
நிஜத்தை மறைத்து
யுத்தம் தொடங்கியது.
எல்லாம் முடிந்தும்
மிஞ்சி இருக்கும் தனிமையை
பந்தயப் பொருளாக்கி
அது ஆடிய சூதாட்டத்தில்
உயிரைப் பணயம் கேட்ட
அந்த வசியக் குரல் மட்டும்
இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

காதல் கொஞ்சம் தூக்கல்! -Mano Red


என் காதல் வரிகளெல்லாம்
அழத் தெரிந்தவை
காத்திருந்தே
கண்ணீரைத் தத்தெடுத்தவை.
பேனா பிடித்தெழுதுகையில்
நகக் கண்ணில் நுழைந்து
அகக் கண்ணைத் துளைப்பதுபோல
வலி மிகுந்தவை.
இது போன்ற வேதனைகளின்
வேர் நுனியிலிருந்து
உருவிய வரிகளை
வடிகட்டித்தான்
பலமுறை உன் இதயத்தின்
நாக்கை நனைத்திருக்கிறேன்.
படித்து முடித்த பிறகு
“இன்னும் கொஞ்சம் காதல் ரசம்
தூக்கலாக இருந்தால்
நன்றாக இருக்குமே” என்று
நீ சொல்லும்போதெல்லாம்
‘ரத்தம் பிழிந்தே வரிகளை
வார்த்திருக்கிறேன்
முகர்ந்து பார்’ என்று சொல்லி
உன்னை அழ வைக்க
இன்னொரு இதயம் வேண்டுமடி! 

ஆதார் கார்டிலும் அழகி! - Mano Red


அவள் அணிந்துவரும் 
ஆடை நிறம் பொருத்து
கண்களின் நிறம் மாறுவதால்
நம்புங்கள் அவள் அழகியென.
தந்தையின் விரல் பிடித்து
அதிகம் நடந்தவள்போலும்
வேடிக்கை பார்க்கும் அழகின்
ஒரு ஓர விளிம்பில்
நம்பச் செய்வாள் அழகியென.
பார்க்காதபோது பார்க்கும் கள்ளப்பார்வையை
காட்சிப்பிழையுடன் சேர்க்காமலிருந்தால்
நம்பிவிடுவீர்கள் அவள் அழகியென.
ஒப்பனைகள் இல்லாத அழகுடன்
ஏதோ ஒப்பந்தம் செய்திருக்கிறாள்
திகைத்தபின் நிச்சயமாக நம்புவீர்கள் அவள் அழகியென.
எல்லாவற்றையும் விட
ஆதார் கார்டிலும் அழகாக இருப்பவளை
எப்படி நம்பாமல் போவீர்கள் அழகியென!

13 July 2016

கார்பைடு கல்லாக மாறிய தொழில்நுட்பம்!



"உலகம் முழுவதும் வயர்லெஸ் வசதி நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவொரு மூளையைப் போல செயல்பட ஆரம்பிக்கும். அப்போது நடைமுறைகள் அனைத்துமே நிஜத்தின் ஒருமித்த நிலையின் துகள்களாகச் செயல்படும்" இதைக் கூறியவர் அமெரிக்காவில் தற்போது தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் யாரோ ஒரு ஹைடெக் விஞ்ஞானி அல்ல. தொழில்நுட்பம் தவழத் தொடங்கிய காலத்தில் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் புரட்சி செய்த நிக்கோலா டெஸ்லா. அவர் 1926ஆம் ஆண்டிலேயே இப்போது நடக்கும் நிகழ்வுகளைக் கூறியிருந்தார்! இது ஆச்சரியமாக இருந்தாலும் அவர் ஒரு தீர்க்கதரிசிதான். அது ஒருபக்கம் இருக்கட்டும். நடப்பு உலகத்திற்குள் லாகின் செய்வோம்.
ஃபேஸ்புக்கில் நண்பர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை, ‘காதலிக்க மறுத்ததால் பெண்ணின் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிய நபர் கைது’ என்பது போன்ற செய்திகள் இன்றைக்குத் தலைப்புச் செய்திகள். ஆக, பெரும்பாலானவர்களுக்கு மன உளைச்சலையும், அதனால், குற்றங்கள் செய்யக் காரணங்களையும் சப்ளை செய்வது, இணையதளம் என்னும் ‘வினையதளம்’. இப்படி, பழியை அதன்மீது போட்டுவிட்டு வழக்கம்போல அதன்மீதேறி அமர்ந்துகொள்பவர்களாக இருக்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்னால் கிராமத்தில் “பனங்காட்டுப் பக்கம் போகாதே, முனி அடிச்சிடும்என்று சொல்லி சிறுவர்களையும் பெண்களையும் பயமுறுத்துவர். அப்படிச் சொல்லியதற்கு காரணம் அவர்கள் தனியாகப் போகக்கூடாது என்பதுபோல எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதுபோல, ஃபேஸ்புக், வாட்ஸப் பக்கம் போகாத முகமூடி அணிந்த போலியான நபர்கள் உன்னைப் பின் தொடர்வார்கள்என்று இந்தக் காலத்தில் பயம்காட்டுவது அவசியமாக இருக்கிறது.

மகாபலியை ஆட்கொள்ள திருமால், தசாவதாரத்தில் ஒன்றான வாமன அவதாரம் எடுத்துச் சிறிய உருவில் வந்து, உலகை இரண்டடியால் அளந்து, 'இன்னும் ஓர் அடி எங்கே?’ என்று கேட்பதாகக் கதை இருக்கும். அதே கதைதான், நம்மை ஆட்கொள்ள வந்திருக்கும் தொழில்நுட்பமும். இன்டர்நெட் என்னும்  அவதாரத்தில் உலகைக் கைகளுக்குள் சுருக்கி “இன்னும் வேறு ஏதாவது மிச்சம் இருக்கிறதா?” என்று நம் எல்லாரையும் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

நவீன வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது தொழில்நுட்பம். அதற்குள் தங்களை இணைத்துக்கொள்ளும் இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் தனிமையை விரும்பி ஏற்கின்றனர். வீட்டுக்கூடத்தில் பெற்றோருடன் தூங்கும் வழக்கம் மாறி, தனி அறைக்குள் நுழைந்தபோது, தொழில்நுட்ப பூதமும் தன் பங்குக்கு, தனக்குள் இளைஞர்களை இழுக்க ஆரம்பித்தது. அந்த பூதம் கட்டமைத்திருக்கும் மெய்நிகர் வாழ்க்கைக்குள் அவர்கள் வாழத் தொடங்கியபோது கிடைத்த ஒரே நண்பன் இணையதளம். தினசரி நிகழ்வுகளில் அவர்கள் சந்திக்கும் தோல்விகளையும் ஏமாற்றத்தின் குமுறல்களையும் கொட்டித்தீர்க்கும் வடிகாலாக இணையதளங்கள் தரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். அங்குதான், ஆறுதலுக்காக முகமறியாத முகநூல் நண்பர்களைத் தேடினர். நம்முடன் நடமாடும் மெய்யான உறவுகளைவிட மெய்நிகர் உறவுகளிடம் நெருக்கமான நட்பில் இணைந்தனர். இதற்கெல்லாம், தனிமை ஒரு காரணம் இல்லையென்றாலும் இதற்காகவே தனித்திருக்கப் பழகுகின்றனர். அவர்களுக்கென ஒரு பொய்யான மெய் உலகத்தை உருவாக்கி அதன் உறுப்பினர்களாக மாறி, ‘அழுதாலும் அங்கேதான், சிரித்தாலும் அங்கேதான் என்று வாழ்கின்றனர். சாப்பிடுவதற்கு அம்மா அழைக்கும்போதே ‘தொழில்நுட்ப கோமா நிலையில் இருந்து மீள்வதுபோல வெளியே வருகின்றனர்.

அதற்குள்ளாக, தனிமை உணர்வு தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கும். நல விசாரிப்புகளின் செய்திப் பரிமாற்றங்களோடு ஆரம்பித்து, புகைப்படப் பரிமாற்றத்தில் சற்றே தடுமாறி, முகம் பார்த்துப் பழகிய பின்பு இன்னும் நெருக்கமாகி வளர்ந்திருக்கும். குறுந்தகவல்களின் போக்கு பெருந்தகவல்களாக மாறி ஒருவருக்கொருவர் நேரில் சந்திப்பதை நோக்கி முழு வீச்சில் இயங்கத் தொடங்கியிருப்பர்.

இதில் சினிமாவின் பங்களிப்பைச் சாதாரணமாகக் கடந்து வர முடியாது. எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று காட்டுகிறார்களோ அதைவிட அதிகமாக எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அதையும் வெளிச்சமாகக் காட்டுகிறார்கள். எதிர்பாலினத்தை எப்படிக் கவர்வது என்பதில் ஆரம்பித்து, சம்மதம் கிடைக்கவில்லையெனில் ஸ்கெட்ச் போட்டு எப்படித் தீர்த்துக்கட்டுவது என்பதுவரை தெள்ளத் தெளிவாகக் காட்டிவிடுகிறார்கள். ‘புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தனி கார்டு போட்டு, படம் முழுக்க ஊதித் தள்ளுவதைக் காட்டும்போதே அதன் லட்சணம் என்னவென்று அறிவார்ந்தவர்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால், இந்த அப்பாவி இளைஞர்களுக்கு? இவற்றின் மீதெல்லாம் கால் வைத்துத்தான் இளமை தன் பயணத்தை ஜாக்கிரதையாகக் கடக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் சறுக்கினாலும் வேறு உலகிற்கான பாதைக்குள் இழுத்துச் சென்றுவிடும். எது ஒன்று விரும்பத் தகாததாக இருக்கிறதோ அதை விரும்புவதுதான் இளமையின் ரகசியமாகவும் இருக்கிறது இங்கே!

‘அவசரத்திற்கு மொபைல் போன்’ என்பது மாறி, ‘அவசியத்திற்கு மொபைல் போன்’ என்றாகிவிட்ட நிலைமையில் சில தேவைகளுக்காக மட்டுமே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தில் எப்போதும் முகத்தைப் புதைத்துக்கொண்டு இருக்காமல், அக்கம் பக்கம் இருப்பவர்கள் மீதும் குடும்ப உறவுகள் மீதும் அன்பு செலுத்தப் பழகவேண்டும். அப்படிப் பழகும்போது, கை விரல்கள் அமைதிகொள்ளும்; கழுத்து சற்று நிமிரும்; கண்களுக்குள் புது வெளிச்சம் பாயும்; காலை, மாலை பரஸ்பர வணக்கத்திற்காக வாட்ஸப் தேவை இருக்காது; “சாப்பிட்டாயா, குளித்தாயா என்ற நல விசாரிப்புகள் தேவைப்படாது; முக பாவனைச் சித்திரங்களுக்குள்
நம்முடைய எண்ணங்கள் தொலையாது; அனுப்பிய தகவலுக்குப் பதில் கிடைக்கவில்லை என்ற கவலை இருக்காது; யாருடைய குறுந்தகவலுக்காகவும் காத்திருக்கும் அவசியம் இருக்காது.
மாறாக, நம்மைச் சுற்றி இயங்கும் வாழ்க்கையை ரசிக்கலாம்; சூரிய வெளிச்சம் முகத்தில் படருவதை உணரலாம்; பழ வண்டியில் அடுக்கியிருக்கும் பழங்களின் விதவிதமான வண்ணங்களைக் காணலாம்; பனிபடர்ந்த புல்லின் மென்மையை விரல்களால் தொடலாம்; நம்மைக் கடந்து செல்லும் மனிதர்களின் முகங்களைப் பார்க்கலாம்; இவையெல்லாம் சாதாரணமான காட்சிகளாக இருந்தாலும் அதிலிருந்தும் புத்துணர்ச்சி பெற்று நம்மை நாமே மன உளைச்சல்களிலிருந்து மீட்டெடுக்கலாம். இணையதள அனுபவத்தைவிட இந்த அனுபவம் புதுமையாகவே இருக்கும்!


பிஞ்சில் பழுக்க வைக்கும் கார்பைடாக மாறியிருக்கும் தொழில்நுட்பத்தைக் கொஞ்சம் ஒதுக்கிவைப்போம். ‘புதிய நண்பர்கள் தேட தொழில்நுட்பம் வேண்டாம், சிறு புன்னகை போதும், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருமே நம் நண்பர்கள்தான் இதை உணர்ந்தால் நம்மைச் சுற்றியிருக்கும் நுட்பமான உறவுகள் நமக்குப் புரியவரும்!