www.gamblinginsider.ca

14 February 2017

காஸ்மிக் காதலிக்காக...- Mano Red



என் காதலெனும்
Parallel உலகில் வாழும்
பேரழகியே!
காற்றிலிருந்தோ
வானத்திலிருந்தோ
வந்திறங்கு.
உன்னால் காண முடியா
உணர முடியா காதலை
பல பரிமாணங்களில்
பிம்பமாக்கியிருக்கிறேன்.
மின் காந்த அலைகளைவிட
உன் கண் காந்த அலைகள்
கொடிதெனத் தெரிந்தும்
நான் அனுப்பிய
சங்கேதக் குறியீடுகளில்
இதய சங்கதிகள்
சங்கீதமாய் ஒலிப்பதை
உணர்விகளால் கேட்டுணர்.
உன் சார்ந்த புனைவுகளை
கருப்பொருளாக்கி
காதல் பௌதீகம் எழுத
காஸ்மிக் கதிர்களால்
கவிதைத் தூது விடுகிறேன்.
கழிவிரக்கம் காட்டினால்
ஒளி ஆண்டுகள் தாண்டி
பால்வீதி வழியே
பால் முகம் காண
ஓடோடி வருவேன்.
நியூட்ரினோ அறைக்குள்
நியூட்டன் விதி தேடாதே
உன் விதியும்
என் விதியும்
காற்று புகா வெற்று அறையில்
கனமில்லா கணத்தில் எழுதப்பட்டதா?
நட்சத்திரங்களாயிரம் சூழ வலஞ்செய்து
நிலவுகள் தோரணம் நாட்ட
கனவுகளின் வழியே எழுதப்பட்டதல்லவா!
கேளடி என் கண்மணியே
உன் காலடி தொட
காலப்பயணம் செய்ய
தயாராகிவிட்டேன்
யுகங்களை எண்ணிக்கொண்டிரு! 😍😍

சமீபத்திய சங்கடங்களில் இருந்து... - Mano Red



அலறல் இல்லாத
பெருஞ்சத்தத்துடன்
முனகிக்கொண்டிருந்தது
சமீபத்திய வலி.
அரிவாள்மணையால் அறுத்தது போக
மிச்சமிருந்த
செஞ்சோற்றுக் கடன்கள் எல்லாம்
கூர் தீட்டிய வாளால்
இன்னும் சோகமாக நறுக்கப்பட்டன.
.
செய்நன்றி கொண்டவனை
கொல்வதற்கு ஏதுவாக
துரோகத்தில் நாணேற்றி
அன்பில் அம்பெய்து
சாய்ந்து ஒடிந்து விழ வைக்க
தாரை தப்பட்டைகள்
தாறுமாறாக முழக்கப்பட்டன.
.
பூப்பெய்திய பஞ்சோந்தியின்
முதுகுப் புற வண்ணங்களை
பூக்களாக எண்ணி
பூஜைக்காகக் கோத்தெடுப்பது போல,
மாண்புமிகு நினைவுகளை
மாலையாக்கி அணியும் நேரத்தில்
நற்குணத்தின் குறியீடுகள்
ரத்தம் சிந்தி அழிக்கப்பட்டன.
.
சதைக்கு மேல் வளர்ந்த
கால் நகத்தின்
இடது ஓரத்தில்
துருத்திக் கொண்டிருக்கும்
நகக் கீற்று வழியாக
ஒழுகும் அழுக்கு ரத்தமாக,
தழுதழுக்கும் உயிரோசை
ஓர் ஓரத்தில் புலம்பிக் கொண்டிருக்க,
வேசமிடும் பாசம் வேறு வழியாக
புத்திக்குள் நுழைந்து
அன்புக்கு இன்னும் அதிகமாக
படியளக்க ஆரம்பித்துவிட்டது.

களம் புகுந்தோம்! - Mano Red



சல்லிக்கட்டு பார்த்ததில்லை
மல்லுக்கட்ட அமர்ந்திருக்கிறோம்;
புல்லுக்கட்டு சுமந்ததில்லை
துள்ளிக்கிட்டு சேர்ந்திருக்கிறோம்.
.
வன்முறையில்லை
மென்முழக்கமிட்டோம்;
குடித்துக் கும்மாளமிடவில்லை
தன்னொழுக்கம் காத்தோம்;
பண்பாடு காக்கவே
ஒன்றுபட்டுக் களம் புகுந்தோம்.
.
சங்க காலம் தொட்டு
விளையாடி வரும் எங்களின்
சங்கை அறுக்கத் துடிக்கும் சட்டமே
உன் சங்கு கடிப்போமே தவிர
சிதறியோட மாட்டோம்.
.
தாத்தா காலத்துப் பாரம்பரியம்
‘பீட்டா’ உனக்கெப்படிப் புரியும்.
ஏறு தழுவுதலையா
சித்ரவதை என்கிறாய்?
தமிழர் தெருவில் வந்து பார்
ஆரத் தழுவி வளர்ப்பது தெரியும்.
.
நாங்கள் வளர்க்கும் காளைதான்
எங்கள் குலசாமி.
அவன் இறந்து போனால்
கோவில் கட்டுவோம்;
வீட்டு வாசலில் இடமிருந்தால்
முற்றத்தில் புதைப்போம்;
மாடாக மட்டுமே
அவனைப் பார்க்கும் உங்களிடம்
எங்களில் ஒருவனாக இருந்தவனை
துன்புறுத்தாமல் கேட்கிறோம்.
.
இறுதியில்,
உரிமை மீட்கப் போராடி
கடலுறவு கொண்ட எங்களை
உடலுறவுடன் ஒப்பிட்டீர்கள்.
பொறுமை காப்பதால்
பொறுக்கி அல்ல நாங்கள்
நிரந்தரத் தீர்வுக்காக
அறம் காத்து நிற்போமே தவிர
தரம் தாழ மாட்டோம். 😡😡

உறுப்புகளை உற்றுநோக்கும் கண்கள்! - Mano Red



மூளையை மறைக்க தலையும்
பார்வையை மறைக்க இமையும்
சுவாசம் மறைக்க மூக்கும்
சொல்லை மறைக்க நாக்கும்
அன்பை மறைக்க இதயமும்
உணவை மறைக்க வயிறும்
எலும்பை மறைக்க சதையும்
எல்லாம் சேர்ந்த உயிரை மறைக்க
உடலும் இருக்கும் போது
ஆடை எதை மறைக்கப் போகிறது?
வக்காலத்து வாங்குபவர்களே
வழக்கம்போல் தீர்ப்பு சொல்லுங்கள்
‘வக்கிரம் ஆண்களிடம் அல்ல
பெண்களின் உடையில்தான்’
கவர்ச்சி உடைதான்
கண்ணை உறுத்துகிறதெனில்
கசக்கி எறியப்பட்ட
பள்ளிச் சிறுமிகளின்
மரணங்களைத் தொகுத்து
ஆண்கள் சார்பில்
நூறு பக்கப் புத்தகம் எழுதினால்
மதிப்புரை என்ன தருவீர்கள்?
ஆண்களைப் பற்றிச் சொல்ல
புதிதாக ஒன்றுமில்லை பெண்களே!
இதை நியாயப்படுத்தும் ஆண் வாய்கள்
வெட்கப்பட வேண்டுமே தவிர,
நீங்கள் எதையும்
ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.