www.gamblinginsider.ca

29 March 2013

விமர்சனங்களின் போதைக்கு ஏங்கும் கவிஞன்..!!



எதிர்பார்ப்புகளின் ஏகப்பட்ட 
முகங்கள் மாறுவேடத்தில்...!!! 

ஆள் அரவமற்ற அத்துவான காட்டில் 
ஒரு நாள் பொங்கலுக்கு தவமிருக்கும் 
அய்யனார் சாமி...!! 

யாரும் வராத பொட்டல் பூமியில், 
தேநீர் கடை போட்டிருக்கும் 
யாரோ ஒருவன்..!! 

சோறூட்ட அம்மா வருவாள் 
என ஏங்கி தவிக்கும் 
அனாதை சிறுமி..!! 

இருளில் ஒற்றை பனை மர அடியில், 
தன்னை விலை பேச காத்திருக்கும் 
விலை மாது..!! 

எந்த கவலையுமின்றி 
பிணங்களின் வரவை நோக்கும் 
புதிய சுடுகாடு..!! 

குறை சொல்ல கூட ஆளில்லையே 
என கண்ணீர் சிந்தும், 
உருவமில்லா ஓவியம்.!! 

வரமாட்டார் என தெரிந்தும், 
வரவில்லையென புலம்பும் 
கடவுள் பக்தன்..!! 

ஒருநாளாவது யாரும் தன்னிடம் 
எதுவும் கேட்க கூடாதென நினைக்கும், 
அதிசய ஆண்டவன்..!! 

விளையாட யாருமின்றி துடிக்கும் 
இடித்தாலும் சிரித்து வந்த 
தெருமுனை உரல்..!! 

யாரும் அமரவில்லையென 
ஒற்றை காலில் நிற்கும், 
நிழலில்லா இருக்கைகள்..!! 

நன்றாக இல்லை என்ற போதும், 
விமர்சனங்களின் போதைக்கு ஏங்கும் 
ஒன்றுமறியா கவிஞன்..!!


27 March 2013

உன்னால் கசக்கப்பட்ட காகிதம் நான்..!!


பள்ளிகூட குழந்தை நீ, 
உன்னால் கிழிந்த புத்தகம் நான்..!! 

வானவில் வரைந்த வண்ணம் நீ, 
உன்னால் சிதறிய ஓவியம் நான்..!! 

சட்டென பெய்த மழைத்துளி நீ, 
உன்னால் மடிந்த காளான் நான்..!! 

சில்லென வீசிய தென்றல் நீ, 
உன்னால் உடைந்த பலூன் நான்..!! 

ஓங்கி வளர்ந்த மரம் நீ, 
உன்னால் சுவாசம் இழந்த உயிர் நான்..!! 

கூர்மையான அழகிய உளி நீ, 
உன்னால் உடைந்த சிற்பம் நான்..!! 

மகிழ்ச்சி கொண்டாடும் இதயம் நீ, 
உன்னால் அடங்கிய துடிப்பு நான்..!! 

முட்கள் நிரம்பிய பூச்செடி நீ, 
உன்னால் கிழிந்த சிறு இலை நான்..!! 

உயர பறக்கும் பருந்து நீ, 
உன்னால் இறக்கை இழந்த பட்டாம்பூச்சி நான்..!! 

எல்லாமறிந்த தண்ணீர் நீ, 
உன்னால் கரைந்த கண்ணீர் நான்..!! 

கில்லாடி கண்ணாடி நீ, 
உன்னால் உடைந்த பிம்பம் நான்..!! 

தேடி எடுக்கக்கபட்ட வார்த்தை நீ, 
உன்னால் ஒதுக்கப்பட்ட எழுத்து நான்..!! 

அழகுற எழுதப்பட்ட கவிதை நீ, 
உன்னால் கசக்கப்பட்ட காகிதம் நான்..!!


23 March 2013

என் அப்பாவும்,நானும்....!!!!


பிறந்து,தவழ்ந்து, 
விழுந்து,நடக்கும் வரை 
என் கைபிடித்த 
முதல் நண்பன் 
என் அப்பா...!! 

திருவிழா காண, 
தன் கால் நோக, 
தோளில் தூக்கி சென்று 
என்னை ரசித்த, 
முதல் ரசிகன், 
என் அப்பா..!! 

மிதிவண்டி நான் பழக, 
தன் ரத்தம் பாழாக, 
நான் வளரும் வரை, 
என்னுடன் வளர்ந்தவர் 
என் அப்பா...!! 

நான் விளையாட 
நிலவை வாங்கி தருவார், 
நான் தூங்க 
தன்னை விழிக்க வைப்பார், 
என்னை கையில் தாங்கியவர் 
என் அப்பா...!! 

என்னை பாராட்டும் 
முதல் ரசிகனும், 
தவறினால் தண்டிக்கும் 
முதல் ஆசிரியருமாக 
என் அப்பா..!! 

என் வயது கூடினாலும், 
அப்பாவுக்கு என் வயது 
என்றும் எட்டு தான்..!! 
என் வெற்றியையும்,தோல்வியையும் 
ஒரே மாதிரி பார்ப்பவர் 
என் அப்பா..!! 

உங்களை கதாநாயகனாக்கி 
இழிவு படுத்த மாட்டேன், 
கடவுளாக்கி 
ஒதுக்கி விட மாட்டேன், 
என்றும் அப்பாவாகவே 
அண்ணாந்து பார்ப்பேன்..!!

22 March 2013

தொலைந்து நிற்கிறேன் நான்...!!!


கடிகாரமாய் நான், 
எனக்குள்ளே சுற்றுகிறேன்.. 
சுற்றிகொண்டே என்னுள், 
உன்னை தேடுகிறேன்..!! 

மின்சார பார்வையில் என்னை 
கொஞ்சம் ஒளிர செய்தாய்..!! 
பாலாடை சரிவில் என் 
நெஞ்சம் துளிர செய்தாய்..!! 
ரத்தம் கலங்கியதே, 
பித்தம் தெளிந்ததுவே, 
தொலைந்து நிற்கிறேன் நான், 
திருவிழா குழந்தை போல..!! 

கண்ணாடி சிரிப்பில் என்னை 
கொஞ்சம் உடைத்து விட்டாய்..!! 
தங்கமுலாம் பூசிய பேச்சில் என் 
நெஞ்சம் அடைத்து விட்டாய்..!! 
சற்று தெளிந்து கொண்டேன், 
விட்டு விலகி சென்றேன், 
விழி பிதுங்கி நிற்கிறேன் நான் 
வழி தெரியா ஆடு போல..!! 

இது சரியா இல்லை தவறா..?? 
காதல் வலியில், 
தென்றல் காற்று பாரமாகி, 
பூகம்பம் பூவாய் மலர்கிறது..!!


ஈழத்து ஈரக்காற்றே...!!!


ஈழத்து ஈரக்காற்றே, 
ஈழத்து ஈரக்காற்றே, 
என் இன மக்களை பார்த்தாயா..?? 
உதவி செய்ய நாதியற்று, 
அக்கறையால் நலம் விசாரிக்கிறேன்..!! 

என் மக்களை கொன்ற பாவியின் மேல், 
எச்சில் உமிழ்ந்தாலும், 
எட்டி மிதித்தாலும், 
பாவம் போல் அஞ்சி,நடித்து 
பதுங்கியவர்கள் நாங்கள்..!! 

பூப்பட்டால் கலங்கி விடும் என் மக்களை, 
கண்ணிவெடிக்கு பலி கொடுத்தும், 
துப்பாக்கி குண்டுகளில் பொட்டு வைத்தும், 
ஆடையின்றி அலங்கோலம் செய்தும், 
வேடிக்கை பார்த்த வேலி ஓணான்களை, 
கல்லெறிந்து துரத்த முடியாத 
கையாலாகதவர்கள் நாங்கள்..!! 

நாங்கள் பதுங்கியது போதும், 
ஓடி ஒழிந்தது போதும், 
அடி வாங்கியதும் போதும், 
ரத்தம் சிந்தியதும் போதும், 
மிச்சமுள்ள உயிர் காக்க, 
அச்சமின்றி வருகிறோம்..!! 
ஈழத்து ஈரக்காற்றே, 
ஈழத்து ஈரக்காற்றே, 

வீழத் தெரிந்த எங்களுக்கு, 
வீழ்த்தவும் தெரியும்..!! 
காத்திருங்கள்..!!

20 March 2013

நீ வருவாய் என...!!!!!


குறுகிய என் நினைவுகளில் 
உன் நினைவை சேமித்து வைக்க 
இடமின்றி அலைகிறேன் நானே...!! 

பொல்லாத உன் நினைவை 
பொத்தி வைக்க முடியாமல், 
பூகம்பமாய் என்னுள் பொங்கி எழ 
மகிழ்ச்சியடைகிறேன் நானே..!! 

வெட்டி எறிந்துவிட நீ ஒன்றும் சுமையல்ல, 
பட்டு தெரிந்துகொள்ள நீ ஒன்றும் வினையல்ல..!! 
சொட்டு சொட்டாக வடித்த கண்ணீர் சொல்லும், 
நேசம் என்பது பாசமா இல்லை வேசமா என்று..?? 

உனக்கு பிடித்தவாறு என்னை மாற்றினேன், 
எனக்கு பிடித்தவாறு நீ மட்டும் மாறவில்லை, 
காரணம் கேட்டால் உதாரணம் சொல்கிறாய், 
பித்து பிடித்தவனிடம் தத்துவம் பேசுகிறாய்..!! 

மரண வெளிச்சம் ஒன்று மடி மீது பரவ, 
மறைக்க நீ வருவாயென காத்திருந்தேன், 
நீ இல்லாத வெற்றிடம் கண்டு, 
என் இதய எடை இழந்திருந்தேன்...!!!


16 March 2013

இது தான் எங்கள் ரஜினி..!!


நினைவை சற்றே இழந்தாலும், 
தூக்கத்தில் துரத்தி கேட்டாலும், 
என்னை நானே மறந்தாலும், 
என்றும் சொல்வேன் 
எங்கள் ரஜினி ரஜினி தான்...!! 

வார்த்தைகளில் உடைக்க முடியா 
உணர்வுகளை ஒற்றை துளி கண்ணீர் 
ஓங்கி உடைப்பது போல, 
ரஜினி எனும் ஒற்றை வரியில் 
இதயம் படபடக்கும், 
ரத்தம் சீறிப்பாயும், 
நரம்புகள் புடைக்கும், 
மூளையில் மின்சாரம் பாயும்..!! 
இது தான் எங்கள் ரஜினி..!! 

எப்பிறவியும் தேவையில்லை, 
ரஜினி பிறந்த இப்பிறவி போதும், 
நானும் கர்வம் கொள்வேன், 
நானும் மனிதன் என்று..!!! 
வாழ்க்கையில் வலியும், 
வலிக்கான வழியையும் 
தன்னை வைத்து விளக்கி காட்டிய, 
மாபெரும் மனிதனில் மனிதன்..!! 
இது தான் எங்கள் ரஜினி..!! 

ரஜினி எனும் காந்த வரியை, 
செய்திதாளில் படித்தாலோ, 
தொலைக்காட்சியில் பார்த்தாலோ, 
வானொலி அலையில் கேட்டாலோ, 
மெய் மறந்து, 
என் பெயர் மறந்து, 
சற்று இதயம் வீங்கி, 
பின்பு தான் நான் நானாகிறேன்..!! 
இது தான் எங்கள் ரஜினி...!!

15 March 2013

தயவு செய்து இப்படி பார்க்காதீர்கள்...!!


தோல்வியை இழிவாய் பார்க்காதீர்கள்...! 
வெற்றியை தூக்கி பார்க்காதீர்கள்...!! 

ஏழைகளை புழுவாய் பார்க்காதீர்கள்...! 
பணக்காரர்களை கடவுளாய் பார்க்காதீர்கள்..!! 

புகழ்ச்சியை புகழ்ந்து பார்க்காதீர்கள்.! 
இகழ்ச்சியை மறைத்து பார்க்காதீர்கள்..!! 

கூச்சத்தில் தாழ்த்தி பார்க்காதீர்கள்.! 
வெக்கத்தை மூடி பார்க்காதீர்கள்..!! 

தேவையெனில் மானம் பார்க்காதீர்கள்.! 
வேண்டாமெனில் இரக்கம் பார்க்காதீர்கள்..!! 

முடியுமெனில் ஒதுக்கி பார்க்காதீர்கள்.! 
முடியாதெனில் முயன்று பார்க்காதீர்கள்.!! 

மதித்தால் மிதித்து பார்க்காதீர்கள்..! 
பணிந்தால் பழித்து பார்க்காதீர்கள்..!! 

உதவியில் பலன் பார்க்காதீர்கள்..! 
கடமையில் உயரம் பார்க்காதீர்கள்..!! 

பாசத்தின் ஆழம் பார்க்காதீர்கள்..! 
அதிகாரத்தில் அடிமையை பார்க்காதீர்கள்..!! 

பார்வையில் குற்றம் பார்க்காதீர்கள்.! 
மொத்தத்தில் தயவு செய்து 
இப்படி பார்க்காதீர்கள்..!!!


முகமூடி அணிந்த இதயம்..!!!


யாரோ தொடங்கியதும்,
தேவை அடங்கியதும், 
குற்றமில்லா குற்றம் கண்டு 
புரியாத புதிராய் நீ சென்றாயே...!! 

கலங்காத என் ஆண்மை, 
சரியாத உன் பெண்மை, 
தொடங்கிய இடம் வந்ததுமே, 
உயிரினை பறித்து விட்டாயே..!! 

சட்டென புரியாமல், 
பட்டதும் தெரியாமல், 
பழி தீர்க்க நேரம் வந்ததும் 
வெடுக்கென ஓடி மறைந்தாயே...!! 

பாவம் என் பக்கமாக, 
பழியும் என் பக்கம் சேர, 
அக்கம் பக்கம் பாராமல் 
புரியாது பிரிந்து கொண்டாயே...!! 

காலம் பதில் சொல்லாது, 
நேரமும் பின்னால் சுற்றாது, 
உன்னால் மட்டுமே முகமூடி அணிந்த 
என் இதயத்தின் திரை கிழிக்க முடியும்...!!!


12 March 2013

காந்தமுள்ள ஓவிய காதல்...!!!


உச்சி வெயில் தலை சரிய, 
பறவைகள் இடமறிந்து படபடக்க, 
தென்றலை தேவதைகள் அழைக்க, 
பால்மழை பொழிய நிலா துடிக்கும் அந்நேரம்..!! 

மெல்லிய மாலை வேளையில், 
நொறுங்கி போன வான வெளியில், 
கொஞ்சி கொண்டிருக்கும் கடற்கரையில், 
உன்னிடம் என் காதலை நான் பதிக்க 
ஏற்றுகொண்டு தலை அசைக்கவும், 
ஏமாற்றவும் உனக்கு உரிமையுண்டு..!! 

உன் இடையினம் பார்க்க துணிந்த போது, 
மெல்லினமாய் நீ தந்த வெக்கம் போதுமே, 
வல்லினமாய் எனக்குள் புதைந்து போவேன்.. !! 

வெற்றிடமாய் இருந்த இதயத்தில், 
காந்தமுள்ள ஓவியமாய் காதலை நிரப்பி 
போகும் திசையெல்லாம் என்னையும் 
இழுத்து கொண்டு போகிறாயே...!! 

குறுகிய நினைவில் உன்னை உட்புகுத்தி, 
மீட்க முடியா சக்தி கொண்டு, 
என்னுள் சிறை வைக்க போகிறேன், 
நீ சரியென்று சொல்லும் ஒற்றை வரியில்..!!


11 March 2013

அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!


அவள் வரும்போதெல்லாம், 
திருடன் போல் நிலா ஓடி மறைகிறது, 
எங்கே தான் திருடிய இதயம் திருப்பி 
கேட்டு விடுவாளோ என்று..!! 

அவள் சிரிக்க மறந்து யாரும் பார்த்ததில்லை, 
ஒருவேளை அவள் மறந்துவிட்டால், 
வானில் நட்சத்திரங்களின் நிலைமை 
என்ன ஆகுமோ..??? 

பூக்கள் கண்ணீர் சிந்தும் 
அதிசயம் பார்க்க வேண்டுமா.?? 
அவள் பறிக்கும் போது விட்டு சென்ற 
பூக்களை வந்து பாருங்கள்..!! 

அவள் கடற்கரைக்கு போனால், 
கடற்கரையும் அவளுடன் திரும்பி வரும், 
அள்ளி சென்ற மணலை வாங்க அல்ல, 
விட்டு சென்ற சிரிப்பை திருப்பி தர..!!


09 March 2013

மூன்று குரங்கு பொம்மைகள்...!!


உலகம் போகும் பாதை கண்ட 
மூன்று குரங்கு பொம்மைகளின், 
யாரையும் புண்படுத்த எண்ணாத 
தனிப்பட்ட எண்ணங்கள்..!! 

தீயதை கேட்காமல் இருந்த என்னை, 
வன்முறை பேச்சுகளும், 
வெடிகுண்டு சிரிப்புகளும், 
தோட்டா சத்தங்களும், 
ஆன்மாக்களின் அலறலும், 
மனிதர்களின் கதறல்களும், 
காதிலிருந்து கை எடுக்க சொல்கிறது..!! 

தீயதை பார்க்காமல் இருந்த என்னை, 
வழிந்தோடும் ரத்தங்களும் 
சிதறிய மனித உடல்களும், 
வன்முறை காட்சிகளும், 
பாலியல் கொடுமைகளும், 
வறட்சி கொலைகளும், 
கண்ணிலிருந்து கை எடுக்க சொல்கிறது..!! 

தீயதை பேசாமல் இருந்த என்னை, 
நாட்டு நடப்புகளும், 
மனித உரிமை மீறல்களும், 
ஒழுக்க இழிவுகளும், 
மோசடி நிகழ்வுகளும், 
குறுக்கு வழிகளும், 
வாயிலிருந்து கை எடுக்க சொல்கிறது..!!

பெண்மையில்லா பூமியில்...????


பெண்மையில்லா பூமிதனை, 
கற்பனையில் சுற்றி வந்தேன்..!! 
மையில்லா காகிதம் போல 
உயிரிழந்து பூமி சுழன்றது..!! 

பெண்மையில்லா பூமியில், 
அன்பின் வாசல் சுத்தமில்லை, 
வீட்டில் வெளிச்சம் இல்லை, 
பசி போக்க ஆளில்லை, 
நலம் விசாரிக்க நாதியில்லை, 
நிலத்தில் உணவில்லை, 
வானத்தில் மழையில்லை, 
மொத்தத்தில் பூமியில் ஒன்றுமில்லை..!! 

பெண்மையில்லா பூமியில், 
கற்பனைக்கு இறக்கை இல்லை, 
அழகுக்கு ஆரம்பம் இல்லை, 
காதலுக்கு காதல் இல்லை, 
அறிவுக்கு அடித்தளம் இல்லை, 
பாசத்திற்கு பெயர் இல்லை, 
ஆணுக்கு உயர்வு இல்லை, 
ஆண்மைக்கு அழகில்லை..!! 

மொத்தத்தில் பெண்மை இல்லாத பூமி, 
உயிர் இருந்தும் உணர்வில்லாத சாமி...!!!

07 March 2013

ஆயிரம் கேள்விகளும்,அம்மாவும்..!!!


மின்மினி பூச்சிக்கு மின்சாரம் தேவையா.? 
சூரியன் காணாமல் நிலவு தேயுமா..?? 
பூக்களுக்கு பூக்களை பிடிக்குமா..?? 
கடிகார தேடலில் நேரம் வீணாகுமா..?? 
வானவில்லின் வண்ணம் தீர்ந்து விடுமா..?? 
மின்னலில் புகைப்படம் முடியுமா..?? 
மழைக்கு தாகம் எடுக்குமா..?? 
குடைக்கு யார் குடை பிடிப்பது..?? 
கேள்வி இல்லையெனில் பதில் வருமா..?? 
கண்ணில்லா கடவுளை கண்மூடி காண்பதா..?? 
இதயத்திற்காக இதயம் துடிக்கும..?? 
பணத்திற்கு பணம் தேவையா..?? 
அன்புக்கு அடிமையானால் சரியா..?? 
கடவுளின் கடவுள் யார்..?? 

என என்னுள் எழும்பிய 
ஆயிரமாயிரம் வினாக்களுக்கு, 
ஒற்றை புன்னகையில் பதில் தந்தாள் அம்மா..!! 

நான் பெற்றதோ ஒரே ஒரு பதில் 
கடவுளின் கடவுள் தாய் என்று..!!


உனக்காக அல்ல எனக்காக..!!


பெண்ணே உன்னை காணாமலே 
கண்கள் கெட்டு போனதே...!! 
உன்னை நாளும் பார்க்க 
இதயம் துடி துடிக்குதே..!! 

உளறிய உன் வார்த்தைகளையும், 
அளவில்லா உன் பொய்களையும், 
மனதில் பதிவு செய்து இன்னும் 
கேட்டு கொண்டிருக்கிறேன்..!! 

கால நேரமின்றி உன்னை வர்ணித்த 
என் வார்த்தைகள் எல்லாம், 
என்னை வஞ்சிக்க ஆரம்பித்து விட்டது..!! 

என்னுள் ஒரு சிறு தயக்கம், 
உனக்காக நான் யாரை வெறுப்பது..!! 
பார்த்த என் கண்களையா..?? 
நினைத்த என் இதயத்தையா..?? 
இல்லை என்னை நானே வெறுக்கிறேன்..!! 
உனக்காக அல்ல எனக்காக..!!

02 March 2013

பேய் கிழிக்கும் பூக்கள்(பாலியல் கொடுமை)


சிறு பூக்களை வேரோடு பிடுங்கி, 
கசக்கி கிழித்து மிதித்து துன்புறுத்தும், 
கொடிய மிருகத்தினும் கேவலமான 
பாலியல் கொடுமை தரும் பேய்களே..!!! 

யாரை நம்பி எங்கள் குழந்தை 
பள்ளி சென்று திரும்புவது, 
பசியோடு திரியும் காம பேய்களை 
என்னவென்று அடையாளம் காட்டுவது..?? 

அரக்கனே உன் உருவப்படம் ஒன்று கொடு, 
இவன் தான் குழந்தை தின்னும் பேய் என, 
என் பிள்ளைக்கு நான் காட்டிவிடுகிறேன்..!! 

மனித தலை கொண்ட மிருகமே, 
குழந்தையில் தெய்வம் நீ பார்த்ததில்லையா, 
இறைவன் வாழும் புன்னகையை 
இழிவு கொண்ட உன் கரம் அழித்துவிட்டதே..!! 

நீயும் மனித வழியில் வந்தவன் தானே, 
உன் உடம்பிலும் ரத்தமுள்ள இதயம் தானே, 
இச்சை பசி கொண்ட உனக்கும், 
பிணம் தின்னும் கழுகுக்கும், 
வித்தியாசம் ஒன்றுமில்லை..!! 

உன்னை பெற்றது பாவமென 
உன் தாய் நினைத்திருப்பாள்...!! 
உன்னை அழிக்காமல் இன்னும் 
தன் மடியில் சுமந்து கொண்டிருக்கும் 
என் பூமித்தாயோ கண்ணீர் சிந்துகிறாள்..!!