www.gamblinginsider.ca

06 August 2014

விலங்கியல்...!!(Mano Red)

பேசிப் பேசியே
நாட்டைப் பிடிக்கும்
மனிதர்களுக்கு,
பேசத் தெரியாத
விலங்குகளிடமிருந்து
காட்டை பிடிப்பது
அத்தனை கஷ்டமல்ல..!!

காட்டிலிருந்து வந்தவன்
காட்டை விலை பேசுகிறான்,
விலங்கிலிருந்து பிறந்தவன்
விலங்கை ஓட விரட்டுகிறான்,
கடவுளாக வணங்கியவன்
கழுத்தைப் பிடிக்கிறான்..!!

மனித,
வனவிலங்கு மோதல்கள் கூட
இனத் தகராறு தான்..!!
நிலத்தை அபகரிக்க
விலங்கினத்தை அழிக்கிறான்..!!
சுய நலம் காக்க
கொலை செய்ய துடிக்கிறான்..!!

அறிவு ஐந்து என்றாலும்
அவர்களுக்கும்
உணர்ச்சி கொப்பளிக்கும்
இதயமுண்டு,
கொஞ்சி மகிழ
குடும்பமுண்டு,
பார்த்து ரசிக்க
கண்களுண்டு,
நம்மைப் போலவே ...!!

மனிதனில்லா உலகில்
விலங்குகள்
குறையின்றி வாழும்,
ஆனால்
விலங்கில்லா உலகில்
மனித வாழ்வு சாத்தியமற்றது..!!

அப்பாவியான,
யாரும் கேட்க
நாதியற்ற
விலங்குகளின் மேல்
திணிக்கப்படும்
ஒவ்வொரு வன்முறையும்
உலக வரலாற்றின் 
கறுப்பு பக்கங்கள்..!!