www.gamblinginsider.ca

20 November 2017

அவள் அப்படித்தான் 😍 -Mano Red


-
இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் இதை ஒரு சாதாரண படமாக கடந்து வர முடியாது. சாந்தமான நாயகி, காதலன் ஏமாற்றியதும் தற்கொலை செய்யும் நாயகி, தொட்டவுடன் கற்பு போனதெனக் கதறும் நாயகி, எதற்கெடுத்தாலும் அழும் நாயகி என கட்டமைக்கப்பட்ட பிம்பத்துக்குள் இருந்த நாயகி கதாப்பாத்திரத்தை கட்டுடைக்க வந்தவளே மஞ்சு! ஒட்டுமொத்த நாயகிகளின் மரபுகளையும் உடைத்தாள்; பேச்சில், செயலில், பார்வையில், கோபத்தில் என ஒவ்வொரு பிரேமிலும் நாயகியாக ஜொலிப்பாள். தற்போதைய ஆல்தியா ஜான்சன் (தரமணி), லட்சுமி போன்ற புதுமைப் பெண்கள் அத்தனை பேருக்கும் முன்னோடி மஞ்சு. அவள் இப்படித்தான்!
படத்திற்குள் போகலாம்.
'எனக்கு ஒரு பசி , என்னைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு பசி' என ஒரு ஆட்டக்காரி சொல்வதில் இருந்து ஆரம்பிக்கும் படம். ஆண்களால் ஆண்களுக்காக படைக்கப்பட்டது பெண்ணுலகம் என்கிற பிம்பம் அங்கிருந்து ஆட்டம் காண ஆரம்பிக்கும். துப்பாக்கியில் இருந்து தெறிக்கும் தோட்டாக்கள் போல ஒவ்வொரு வசனமும் ஆணாதிக்கம் மீது தெறிக்கும். அதே தோட்டாக்கள் சமூக சேவகி போன்ற போலியான பெண்களின் மீதும் படும். பெண்களைப் பற்றி குறும்படம் எடுக்க வரும் கமலுடன் சமூக சேவகி ஒருவரைப் பேட்டி காணச் செல்லும்போது, மஞ்சு கேட்பாள் "உங்கள மாதிரி ஆட்களுக்கு வேறு எந்த மேக்-அப்பும் வேண்டாம் , Society make up ஒன்றே போதும்" என்றவாறு ஆங்காங்கே வெடித்துச் சிதறுவதுபோல மஞ்சுவை வடிவமைத்திருப்பார் ருத்ரய்யா.
இதில் ஆண் கதாபாத்திரங்களைப் பற்றி இறுதியாக பேசலாம். ஏனெனில் மஞ்சு இன்னும் அதிகம் பேசப்படவேண்டியவள்.
போலி பிம்பங்களையும், செண்டிமெண்ட் டயலாக்குகளையும், பரிவாக, பாசங்காக, மேலோட்டமாக தன்மீது படும் பாச பசப்புகளையும் அடித்து நொறுக்கிக் கொண்டே இருக்கும் மஞ்சு தன்னையும் ஒரு புதிராகவே வைத்திருக்கிறாள்.
அடிப்படையில் மஞ்சு யாரெனில், கள்ளக் காதலனைக் கொண்டவளின் மகள். தாயின் கள்ளத்தனங்களையும், தன்மீதான பாலியல் சீண்டல்களையும், ஏமாற்றங்களையும் தனக்குத் தெரிந்த ஆண்களின் துரோகத்தால் அனுபவிக்கும் மஞ்சு தன் எதிர்ப்படும் அத்தனை ஆண்களையும் வெறுத்து வறுத்தெடுக்கிறாள்.
முதலில் ஏமாற்றும் காதலன், அடுத்து அவளைச் சீரழித்துவிட்டு தங்கை எனக்கூறி கழட்டிவிடும் காதலன், உடன் இருப்பவர்கள் இவள் ஒரு அப்படி இப்படி கேரக்டர், படுக்கைக்கு மட்டும் ஆண்களைத் தேடுபவள் எனப் பேசக் கேட்பது என்று மஞ்சுவின் உலகமும் உறவுகளும் அவள் வெறுப்பதாகவே இருக்கின்றன. இருந்தாலும் உறவுக்காகவும் அன்புக்காகவும் ஏங்கும் மஞ்சு இரு முறை ஏமாந்த பிறகும் மூன்றாம் முறையும் ஏமாறத் தயாராகிறாள். அதுவும் காதலின் பெயரால். எல்லோரும் என்னை ஏமாற்றும்போது நான் ஏன் என்னையே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்கிற மனநிலையில் எல்லா நிலைகளிலும் தன்னை வருத்தி, மகிழ்ந்து தெளிவாகவே கடந்து வருகிறாள்.
இதில் கமலுக்கு ஜென்டில்மேன் கதாபாத்திரம், ரஜினிக்கு வேசமில்லாத யதார்த்தமான அப்பட்டமான ஆண் கதாபாத்திரம். (இப்படிப்பட்ட நடிகன் ரஜினி, சூப்பர் ஸ்டார் பட்டத்துக்குள் குறுகியது வருத்தமே)
கமல் பெண்ணுரிமை பேசுகிறான், பெண்ணின் சுதந்திரம் பற்றி கவலை கொள்கிறான். மஞ்சுவின் சோக வரலாறுகளின் பக்கங்களை பரிவுடன் படிக்கிறான். கடைசிவரை அவளைப் புரிந்துகொள்ளாமல், புரியாத புதிராகவே இருக்கும் அவளிடம் தனது காதலைச் சொல்லத் தெரியாத பெண்ணிய சுதந்திரம் பற்றிக் கவலை கொள்ளும் கமல், மஞ்சுவைக் காதலிப்பதாக அவள் தோழியிடம் சொல்லி ஒரு புனிதனாகக் காண்பிக்கும் வேளையில் மஞ்சு வெறுக்கும் ஆண்களின் உலகத்தில் இருக்கும் விளக்குகள் அத்தனையும் அணைந்து எரியும்.
கமலின் நண்பனாக, மஞ்சுவின் முதலாளியாக, ரஜினிகாந்த். நெற்றியில் விபூதியுடன் மது, மாது என்று வாழும் சராசரி ஆண். பெண்களை போதைப் பொருளாக எண்ணி சந்தர்ப்பம் கிடைக்கும்போது அனுபவிக்கும் சுகவாசி. அவர் வில்லனல்ல. வக்கிரமான சந்தர்ப்பவாதி. ஆணாதிக்கவாதி. மஞ்சுவிடம் தவறாக நடந்துகொண்டு அடிவாங்கிய பிறகு "ஒரு ஆம்பள, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகணுமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகணுமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்" என்பது நடைமுறை யதார்த்த உச்சம்.
பெண்களின் கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடைவெளியில் இருக்கும் வாழ்க்கையை கத்தி மீது பூ சுமந்து நடப்பதுபோல ஸ்ரீப்ரியா நடந்து வாழ்ந்திருப்பார். அவரைத் தவிர மஞ்சுவாக வேறு யாரும் நடிக்க முடியாது என்பதுபோல அழகான ராட்சசியை அத்தனை அழுத்தமாக பிரதிபலித்திருப்பார்.
இதற்கிடையில் காற்றிலாடி கரைந்திருக்கும் ஞானத் தகப்பனின் இசை பற்றிச் சொல்லவா வேண்டும்!
Climax:
கமல் மனைவியிடம் 'பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிற' என்று மஞ்சு கேட்க ' எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே' என அவள் சொல்ல 'அதனாலதான் நீ சந்தோஷமா இருக்க' என்று சொல்லும் மஞ்சு அவர்களை விட்டு அந்த இடத்திலிருந்து பிரிவாள்.
அவள் மீண்டும் இறந்து போனாள்
அவள் இறப்பாள்
பிறப்பாள்
இறப்பாள்
அவள் அப்படித்தான்!
Mano Red / 19.11.17

17 November 2017

மீயொலி காதலி - Mano Red


-
டைம் மிஷினில் பயணித்துக் கொண்டிருந்தோம். நான் கொடுத்த லேசர் பூவைக் கையில் ஏந்தியபடி அந்தக் கேள்வியைக் கேட்பாள் என மைக்ரோ அளவுகூட எதிர்பார்க்கவில்லை. ‘வருங்காலத்தில் காதல் எப்படி இருக்கும்?’ என்பதுதான் அவளது கேள்வி. காதோரத்தில் தொங்கிக் கொண்டிருந்த என் மூளையின் ஐ.க்யூ. அளவு கூடிக் குறைந்ததை அவளிடம் வெளிக்காட்டாமல், 'அதுவந்து...' என பதிலை இழுத்தேன். இதற்கு முந்தைய பேரண்டத்தில் இருந்து எடுத்து வந்திருந்த காதலர்களின் புதை படிமங்களை வரிசையாகக் காண்பித்து இப்படித்தான் வருங்காலக் காதல் இருக்குமென்றேன். பைபர் இழைக் கண்கள் வழியாக படிமங்களை உற்றுப் பார்த்தவள் அகச்சிவப்பு புன்னகையை முகத்தில் காட்டி புரியவில்லை என்பதை உதடு சுழித்துக் காண்பித்தாள். எப்படிப் புரிய வைப்பது எனக் குழம்பித் தவித்த நேரம் அல்ட்ராசவுண்ட் (மீயொலி) இசை பின்னணியில் ஒலிக்க ‘பால்வீதியில் நிலவு நீ...’ என்கிற 1024பைட் கவிதையை வாசித்துக் காட்டினேன். ரெக்கார்ட் செய்து மெமரியில் ஏற்றிக் கொண்டவள் காதலாகிக் கசிந்துருகினாள்.
Mano Red / 2.11.17

என்னு நிண்டே மொய்தீன்😍😍 - Mano Red


//
காஞ்சனமால-மொய்தீனுடைய காதல்... சேர்ந்திருந்து... பிரிந்திருந்து... காத்திருந்து... மீண்டும் சேராமல் போன காதல். கோழிக்கோட்ல படிச்சிட்டு இருப்பாங்கனு நினைக்கிறேன். ரெண்டு பேருமே ப்ரண்ட்ஸ். மதம் கடந்து ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல உறவும் இருக்கும். மேற்படிப்புக்காக பிரிஞ்சு தொடர்பே இல்லாம இருப்பாங்க. திடீர்னு ஒருநாள்... (அந்த சீன் அழகா இருக்கும்) பேருந்துப் பயணம்; அதுல கண்ணாடி வழியா ஹீரோவோட கண்ணு பாக்குறத ஹீரோயினோட கண்ணு பாத்துரும். மென்மையான சிரிப்புல பழசு ஞாபகம் வர திரும்பிப் பாக்கும்போது காஞ்சனமாலயின் மொய்தீன் தெரிவான். அந்த செகண்ட்ல பட்டாம்பூச்சி பறக்காத, லைட் அணைஞ்சி எரியாத, இதயத்தின் ஆழத்திலிருந்து வெடித்தெழக் கூடிய காதலை காஞ்சனை உணர்வாள்.
காதல் துளிர்த்த பிறகு கடிதம்; வீட்ல சண்டை; தனிமைச் சிறை; குடும்ப பிரச்னை; எதிர்ப்பு எனக் கடந்து போகும். அதற்குள்ளாக காதல் இவர்களது இதயத்தை கான்கிரீட் பூக்களால் நிரப்பியிருக்கும். பிரச்னைகளைச் சமாளிக்க இருவர் மட்டுமே புரிந்துகொள்ளும் புதுமொழியை கவிதைப் புத்தகங்களில் அடிக்கோடிட்டு உருவாக்கியிருப்பார்கள். மறுப்பும் வெறுப்பும் கூடக் கூட தன் காதல் விவகாரம் தங்கைகளின் வாழ்க்கைக்கு வினையாகி விடக்கூடாது என்பதற்காக சற்று இடைவெளிவிட்டு வலிகளுடன் காத்திருப்பாள் பார்வதி என்கிற காஞ்சனா. எத்தனை விதமான பார்வைகள், முக அசைவுகள், உதடு சுழிப்புகள், வெக்கங்கள், கோபங்கள், அமைதிகள், அழுகைகள் என காதலின் உன்மத்தங்களை அதீதமாகக் காட்டி காஞ்சனையாக வாழ்ந்திருக்கும் பார்வதிக்காக மொய்தீனும் காத்திருப்பான். மழையில் காதலித்த அவர்கள் பல போராட்டங்கள் தாண்டி ஒன்று சேரும்போது அந்த மழைதான் அவர்கள் பிரியக் காரணமாகியிருக்கும்.
படத்தின் முடிவு...
* "காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை"
இல்லை! காஞ்சனமாலைக்கு மொய்தீன் கிடைத்தான். எங்கும் போகாமல் இன்னும் கிடைத்துக் கொண்டே இருக்கிறான்.
* "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி" ஆம்! காஞ்சனை அங்கே காத்திருந்த காலங்களில் மொய்தீனின் பூவிழி எப்படி நோகாமல் இருந்திருக்கும்... இருந்தாலும் இருவரும் பூத்துக்கொண்டுதான் இருந்தார்கள்... இன்றும் இருக்கிறார்கள்.
* "காத்திருந்து கதை பேசும்
காலமும் முடியல
சேர்ந்திருந்து பிறை பாக்க
ராத்திரி விடியல"
ஆம்! அவர்கள் சேராமல் போயிருந்தாலும் ஒவ்வொரு பிறை வரும்போதும் எங்காவது காதல் கதை பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான அந்த இரவு, விடியாமலே நீண்டு நீண்டு அவர்களை இன்னும் காதலித்து கொண்டுதான் இருக்கும்.
Mano Red / 6.11.17

டோழி! - Mano Red


-
"கண்ணியம் காக்கலாம் வா டோழி!" என்ற டிஜிட்டல் போர்டை நெற்றியில் ஒட்டியபடி APU ரோபோக்கள் வீதியில் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. ஏற்கெனவே பல போராட்டங்கள் கண்டு ஏமாந்துபோனதால், எதையும் கண்டுகொள்ளாத பெண் ரோபோக்கள் தங்கள் பேட்டரிகளை சார்ஜ் செய்ய சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தன.
அந்த நேரம் பார்த்து பூக்கூடையில் எலெக்ட்ரானிக் பொருள்களை நிரப்பி, கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தது ஒரு பெண் ரோபோ. ஆதரவு தர ஒரு பெண் ரோபோவாவது வருகிறதே என நினைத்த APUக்கள் Despasito பாடலுக்கு உற்சாக நடனமாடத் தொடங்கின. இந்தக் கோமாளிக் கூட்டத்தை மைக்ரோ அளவுகூட மதிக்காமல்,
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும்" கொண்ட அந்தப் புதுமைப் பெண் ரோபோ வேகமாகக் கடக்க ஆரம்பித்தது. அப்போது, ஒரு APU ரோபோ "டோழி! உங்களது உதட்டு மச்சமும் சிறுத்த மெட்டல் பாடியும் என் தண்டுவடத்தைச் சுண்டி இழுக்கிறது" என்று கத்தியது.
APUரோபோக்களின் சிறுமை கண்டு பொங்கி அந்தப் பெண் ரோபோ லேசர் டுப்பாக்கி எடுத்தபோது, "கண்ணியம் காக்கலாம் வா டோழி!" என்கிற Elite வாசகம் APUரோபோக்களின் நெற்றியில் மின்னி மறைந்தது.
Mano Red / 11.11.17

06 November 2017

பாடல் கேட்பது / கவனிப்பது - Mano Red

1. பாட்டு கேட்பது / Hearing song
எல்லாருக்கும் பாட்டு கேக்க புடிக்கும். பஸ்ல போகும்போது, நடக்கும்போது earphone/headset மாட்டிக்கிட்டு வேடிக்கை பாத்துகிட்டே வெளிய இருக்கிற இரைச்சலும் ஹார்ன் சத்தமும் கேக்காம இருக்க பஞ்சுக்கு பதிலா நீங்க ஹெட்செட் மாட்டியிருப்பீங்க. அவ்ளோதான். அதுல வெறும் சத்தம் மட்டும்தான் கேட்குமே தவிர இசையையும் வரியையும் ஒரு சொட்டுக் கூட நீங்க கவனிச்சிருக்க மாட்டிங்க. அது உங்களுக்கு தேவையும் இல்ல.
-
2. பாட்டு கவனிப்பது / Listening song
இது ஒரு தவம்; மோனநிலை; வேறு உலகத்துக்கு பயணிப்பது; மெய்மறந்து எதற்குள்ளாகவோ தொலைவது; பஸ்ல போகும்போது எந்த ஸ்டாப்ல இருக்கோம்னு கூட தெரியாம முழுக்க முழுக்க பாட்டுக்குள்ள மூழ்கிக் கிடப்பது.
#ஒருக்கா_கேட்பது : பாட்ட உள்வாங்கணும். அது சோகமா, கொண்டாட்டமா, காதலா, தத்துவமா எதுவோ அதுவா நாம மாறிடணும். கூடவே பயணிக்கணும்.
#மறுக்கா_கேட்பது : அந்தப் பாட்டு படத்துல எதுக்காக வருது, அந்தக் காட்சிகள் நினைவிருந்தால் அத மனசுக்குள்ள ஓட விடணும். வார்த்தைகள நல்லா கவனிச்சா காட்சிகள் விளங்க ஆரம்பிக்கும்.
#மறுக்கா_மறுக்கா_கேட்பது: இது இசைக்கான தருணம். என்னென்ன இசைக் கருவி இருக்குனு ஓரளவுக்கு கண்டுபிடிக்கலாம். பல்லவி முடிஞ்சு சரணம் ஆரம்பிக்கும் முன்னாடி ஒரு இசை இடைவெளி இருக்கும். அத வச்சே அடுத்த சரணம் நமக்கு பிடிபட ஆரம்பிக்கும். வீடோ, பஸ்ஸோ எங்க இருந்தாலும் தன்னால தாளம் போட ஆரம்பிச்சுருவோம். இசையில் குறைகள் கண்டுபிடிக்குமளவுக்கு முன்னேறுவதெல்லாம் போதி தர்மர் லெவல்.
அதன்பிறகு,
இசையமைப்பாளர் யாரு, பாடுனது யாரு, பாடலாசிரியர் யாரு? இதெல்லாம் பாத்து அவங்களோட வேற பாடல்களை எல்லாம் தொடர்ந்து கேட்க, inception போல கனவுக்குள்... கனவுக்குள்... கனவுக்குள்... கனவு ஒன்றை காண ஆரம்பித்து ஒரு உலகத்தில் தொடங்கி, வேறு உலகத்தில் உலா வந்து, இன்னொரு உலகத்தில் இருந்து வெளியேறுவோம். இதெல்லாம் தானாக அமையாது. எப்போதாவது ஒரு பாடலையாவது இப்படி அமைத்து பாடலைக் கேட்காமல் கவனித்துப் பாருங்கள். சொர்க்கம், நரகம் இரண்டில் சொர்க்கம் இங்கேயே நிச்சயம்.😍
Mano Red / 5.11.17