www.gamblinginsider.ca

28 August 2014

வெட்டி வேலை...!! -Mano Red

பொய்யான நாலு பேர்
வெறும் பேச்சிற்கு
பாராட்ட வேண்டாம்,
உண்மையான நாலு பேர்
பொறாமை கொண்டு
திட்டினால் அது போதும்..!!

முன் நின்று நண்பனாக
முகத்தில் அறைவது போல
பேச வேண்டாம்,
யாரோ போல பின் வந்து
முதுகில் குத்தினால்
அது போதும்...!!

எளிதில் அஞ்சி
ஏமாந்து பெறுகிற
வெற்றி என்றும் வேண்டாம்,
சூழ்ச்சி இல்லாத
சூழ்நிலையை வெல்லும்
சிறு தோல்வி போதும்...!!

எதற்கெடுத்தாலும்
முந்தி வரும்
கட்டை விரலாக வேண்டாம்,
இறுதியில் இருந்தாலும்
பொறுமையாக இருக்கும்
சுண்டு விரலாக
இருந்தால் அது போதும்..!!

அதிர்ஷ்டம் வேண்டி
உடம்பெல்லாம்
மச்சம் வேண்டாம்,
உழைப்பு போக
எதாவது கொஞ்சம்
மிச்சமிருந்தால் அது போதும்..!!

இவனால்
என்ன கிழிக்க முடியுமென்ற
இகழ்ச்சி பார்வை வேண்டாம்,
எதாவது செய்கையில்
தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிற
வஞ்சக பார்வை போதும்..!

பிடிக்காத வேலையில்
வேலைவெட்டி செய்து
உழைக்க வேண்டாம்,
பிடித்தது போல
வெட்டி வேலை செய்து
சும்மா இருந்தால் அது போதும்..!!

26 August 2014

ரகசியம்..!! -Mano Red

யாருக்கும் சொல்லாமல்
காப்பது தான்
ரகசியம் எனில்,
அது எப்படி
ரகசியமென்று
ஊருக்கு தெரிந்திருக்கும்..??

நமக்குள்ளே
வைத்துக் கொள்வது தான்
ரகசியம் எனில்,
இது தான்
ரகசியம் என்ற
வரையறை எப்படி இருக்கும்...??

ஒருவேளை
எதாவது விதிமீறலில்
யாருடனாவது
அந்த ரகசியம்
பகிரப்படுமாயின்
அதெப்படி ரகசியம் ஆகும்...??

ரகசியம் என்பது
மறைத்து வைத்து
பகிர்ந்து கொள்ளப்படும்
கேவலமான உண்மை,
வேண்டுமென்றே
விரும்பி சொல்லப்படும்
உன்னதமான பொய்மை...!!

பரிமாறலில் தான்
ரகசியம் வலுக்கிறது,
இல்லையில்லை வலுவிழக்கிறது,
யாரிடமாவது சொல்லிவிட்டு
யாரிடமும் இதை சொல்லாதே
என்ற அளவில் தான்
ரகசியம் விரிகிறது..!!

ரகசியங்களுக்கு
ரகசியம் என்று
பெயர் வைத்தவன்
ரகசியம் காக்க தவறி விட்டான்,
ரகசியம் என்பதே
ரகசியம் இல்லாமலிருக்க வேண்டும்,
இல்லை
ரகசியம் என்ற ஒன்றே
இல்லாமல் இருக்க வேண்டும்..!!

சொல்லாமல் இருப்பது
ரகசியமா..??
சொல்லி விடுவது தான்
ரகசியமா..?
அய்யய்யோ தலை சுத்துது
சத்தியமா புரியல
ரகசியம் எப்படி தான் இருக்கும்..??

24 August 2014

மாத்தியோசி...!! - Mano Red



துஷ்ட சக்திகள்
வருவது 
நாய்களுக்கு தெரியுமாம்,
சொந்தக்காரர்கள் 
வரும்போதும் 
போகும்போதும் 
நன்றாகவே குரைக்கிறது..!!

மரங்கள் பற்றியும் 
மழை பற்றியும் 
பேச,எழுத நேரமிருக்கும் 
நமக்குத் தான்,
நடுவதற்கும் 
நனைவதற்கும்
நேரம் இருப்பதில்லை...!!

இறைவன் நல்லவன்,
எத்தனை வருடங்கள்
கழிந்தாலும்,
பிச்சைக்காரிகளின் 
கையில் இருக்கும் குழந்தையை
கைக்குழந்தையாகவே
வைத்திருக்கிறான்...!!

செத்துப்போன 
பட்டாம்பூச்சியை 
சுமக்கும் எறும்புகளுக்கு,
பிணத்தைச் சுமக்கும் 
கவலையில்லை,
விருந்தை சுவைக்க போகும்
கர்வமும் இருப்பதில்லை...!!

மது,புகை எல்லாம் 
தீங்கு என்பதை 
நமக்கு உணர்த்த,
சிறந்த முன்மாதிரி
யாராவது நம்மில் 
செத்துப் போக 
வேண்டியிருக்கிறது...!!

அழகான பெண்களை விட 
அழகா ...?
அழகில்லையா..??
என்று கணிக்க முடியாத 
பெண்கள் தான்
அதிக நாள் 
நினைவில் இருக்கிறார்கள்..!!

22 August 2014

அன்பென்னும் மழை...!!-Mano Red

உயிரில் பாதி
உணர்வில் மீதி
உணர்ந்து கொண்டேன்
வியந்து நின்றேன்,
தொலைவில் இருந்தும்
விழியில் கலந்தும்
பிரிந்து நடந்தேன்
அழுது சரிந்தேன்..!!

தாய் உன்னை
விட்டு வருகிறேன்
நீ தவிப்பதை
கொஞ்சம் ரசிக்கிறேன்,
வேறிடம்
போக மறுக்கிறேன்
மறுபடியும்
பிறக்க துடிக்கிறேன்..!!

எதுவுமே கூறாமல்
நானுன்னை பாராமல்
இருக்க மாட்டேன்,
உன்னிடம்
எதையும் மறைக்க மாட்டேன்,
மறைத்தாலும்
வெறுக்க மாட்டேன்,
வெறுத்தாலும்
என்றும் மறக்க மாட்டேன்..!!

பொய்யாக இல்லாமல்
மெய்யாக இருக்கிறாய்,
என் தலை கொய்தாலும்
என்னுயிர் நீ செய்கிறாய்,
எனக்கென இருக்கவே
மீண்டும் என்னுடன் பிறக்கிறாய்,
கடும் துன்பத்திலும்
தொடும் இன்பத்திலும்
அன்பு செய்தே
அடிமை ஆக்குகிறாய்...!!

அம்மா நீ
எனக்குள் இருக்கிறாய்,
அன்பென்னும்
மழையில் நனைக்கிறாய்,
அதிகமாய்
என்னை ரசிக்கிறாய்,
இன்னும் குழந்தையாய்
தினம் வளர்க்கிறாய்,
இருந்தும் என்னால்
சிரித்து அழுகிறாய்...!!

20 August 2014

பசிப் போராட்டம்..!!-Mano Red

வயிறு எங்கும்
பசி வந்து வெல்ல,
மானம் இங்கு
வாய் விட்டு துள்ள,
கோபங்கள் இனி
உயிர் பறிக்குமே
அந்த உயிரும் அதற்கு
தலை சாய்க்குமே ..!!

பாவம் ஒரு பக்கம் 
பழி மறுபக்கம் என
எல்லாம் போக வழியிருந்தும்
பசி போக வழியில்லை,
அழுகை குறைந்தாலும்
அமைதி இழந்தாலும்
கண்ணீரில் மட்டும்
உப்புக் குறையவில்லை..!!

முக்கால்வாசி
இதயம் துடிக்க
மூச்சு முட்ட
பசி கொள்கிறேன்,
நாவின் ருசி
மறந்து போக
கதறிக் கதறி
ஆவி துறக்கிறேன்...,!!

எலும்புகள் மெலிய
ரத்தம் சுண்ட
என்னுயிர் போனாலும்
இரக்கம் கொண்ட
இறைவன் தான் அவன்..,!!
அதிகபட்ச விதியும்
அதிகபட்ச பசியும்
சேர்த்தே படைத்துவிட்டான்...!!

பாத்திரம் அறிந்து
பிச்சையிட வேண்டாம்,
பசி அறிந்து
உணவு தந்தால் போதும்
இன்னும் உயிர்கள் இங்கே
உணவோடும்
உணர்வோடும் வாழும்...!!

19 August 2014

சந்தோசக் கண்ணீரே...!!-Mano Red

தனக்குத்தானே
அழித்துக் கொண்டேன்,
தனித்து என்னை
தொலைத்து விட்டேன்,
நிலவைப் பார்த்தே
கலங்கி நின்றேன்,
நிதமும் உன்னை
மறக்க நினைத்தேன்...!!

விரல்முனை
கத்தி எறிகிறேன்,
விரும்பியே
உன்னை மறக்கிறேன்,
இது இருந்துமே
இங்கு சிரிக்கிறேன்,
கண் இரண்டிலும்
கொஞ்சம் அழுகிறேன்...!!

ஆள் யாரும் இல்லாமல்
அருவமும் தெரியாமல்
குருகிப் போனேன்,
குருதி வழிய
உறுதி குறைய
உருகிப் போனேன்
உடல் இளைத்துப் போனேன்..!!

இதயம் வலிக்க
இளமை சிரிக்க
அலைந்து அலைந்தே
அலுத்துப் போனேன்,
உலகம் வெறுக்க
உயிரும் துறக்க
இறங்கி வந்தே
இறக்கத் துணிந்தேன்...!!

அவளின் ஆசையும்
காலடி ஓசையும்
நெஞ்சில் படிகிறதே,
சந்தேகமும்
சந்தோசமும்
கண்ணீராய் வடிகிறதே...!!

17 August 2014

கதை சொல்லிகள்...!! -Mano Red



காற்றைக் கிழித்துக் கொண்டு
கதாநாயகன் வருவான்,
மழைத்துளி போல
நாயகி சிரிப்பாள்,
பூக்கள் காதலிக்கும்,
பூமி வெக்கப்படும்....

என கதைசொல்லிகள்
மனிதன் முதல்
மரம் செடி கொடி வரை
உருவக ஒப்பனை செய்தே
உதயம் செய்கிறார்கள்...!!

கதை சொல்லிகள்
கற்பனையில் மிதந்தாலும்,
வார்த்தைகளின் வழியே
கனவு நாயகர்களை
நெஞ்சுக்குள் விதைக்க
தவறுவதில்லை...!!

புராண கதை சொல்லிகளும்
வள்ளல்கள் தான்...!!
கனவுகளையும்
கற்பனைகளையும்,
அள்ளிக் கொடுத்து
புராண காலம் நோக்கி
இழுக்கிறார்கள்...!!

நிழல் மனிதர்களை
நிஜமாக்கி,
வெற்றிடங்களை
சித்திரமாக்கி
கண்முன் பெரிய
காட்சித் திரை விரிக்கிறார்கள்..!!

வாசகன் கூட
யாசகன் தான்,
கதையின்
அடுத்தகட்ட காட்சிகளை
வாசிக்க வாசிக்கவே
யாசகம் பெறுகிறான்...!!

கதைசொல்லிகள் யாரோ அல்ல
தனிமையின் நண்பர்கள்..!!
கதைகள் வெறும்
கதைகள் மட்டுமல்ல,
உணர்ச்சிகளை
உறைய வைத்து,
கதாப்பாத்திரங்களுடன்
பழகவிடும் உணர்வுகள்..!!

14 August 2014

அவள் புராணம்...!!(Mano Red)

தேனாய் அவள்
ஏனோதானோ குழைகிறாள்,
ஏனோ தெரியாமல்
மானாய் வளைகிறாள்..!!

கழுகுப் பார்வை கொண்டு
மெழுகாய் உருகுகிறாள்,
விலகிப் போனாலும்
தழுவத் துடிக்கிறாள்...!!

கொஞ்சல் மொழியில்
கொஞ்சம் பேசுகிறாள்,
நெஞ்சில் புகுந்து
ஊஞ்சல் ஆட்டுகிறாள்...!!

கருவாச்சி முகத்தில்
கவர்ச்சி செய்கிறாள்,
புகழ்ச்சி கூறியே
புத்துயிர் பாய்ச்சுகிறாள்..!!

நுட்பமான செய்கையில்
வெப்பம் ஊட்டுகிறாள்,
தக்க வைக்கும் அழகில்
சொக்க வைக்கிறாள்...!!

உடன்பாடு இல்லாமல்
முரண்பாடு ஏற்கிறாள்,
கடன்பட்ட காதலுக்கு
உடன்கட்டை ஏறுகிறாள்...!!

தூரிகையில் வரைந்து
கோரிக்கை வைக்கிறாள்,
பேரழிவு கடக்கும் நேரம்
பேரழகி அவள் வருகிறாள்..!!

12 August 2014

ஆச்சரியக் குறிகள்...!!(Mano Red)

ஆ.......!
ஆச்சரியத்தை விளக்க
ஆச்சரியக் குறி போதும்..!!
ஒற்றை எழுத்திழிருந்து
ஓராயிரம் வார்த்தை கொண்ட
அதிசயங்களை வியக்க
இந்தக் ஒற்றைக் குறி போதும்..!!!

பாலினத்தோடு ஒப்பிட்டு
பாகுபாடு பிரிக்க வேண்டாம்..!!
இருந்தாலும் ஒப்பிட்டால்
ஆச்சரியக் குறி நிச்சயம்
பெண்பால் தான் ..!!
பொட்டு வைத்த 
பெண் போல தெரிகிறாள்,
புள்ளியுடன் கோடு பார்க்கும் போது...!!

நிச்சயமாக சொல்லலாம்
ஆச்சரியக் குறிகள்
துறந்த கவிதையென்பது,
நாடு வீடு துறந்த
துறவியின் வாழ்வு போல
அழகில்லாத வடிவமுடையது..!!

முற்றுப் புள்ளிகள்
நீண்டு செல்லும் போது
எழுத்துக்கள் இழுத்து
பேசப்படும்......
ஆனாலும் ஆச்சரியம்
ஆச்சரியக்குறிகள் நீண்டால்
ஆச்சரியமும் நீட்டப்படுகிறது..!!!!!!!

எழுதப் போவது
பொய்யோ இல்லை மெய்யோ
என்னவாக இருந்தாலும்,
ஆச்சரியக் குறிகள் உணர்த்தும்
ஆச்சரியமென்பது
உண்மையான வியப்பு தான்...!!

ஆக மொத்தத்தில்
ஆச்சரியக் குறிகள் ,
அதிசிறந்த வியப்புக்களின்
அதிசயங்கள் அடக்கிய
அழகி அவள்..!!
இல்லை இல்லை
பேரழகி அவள்..!!!

10 August 2014

பெண்ணடிமை..!! (Mano Red)



குடும்பமெனில் 
ஆயிரம் இருக்கும்,
குற்றம் குறை சொல்ல 
குறைந்தது 
ஐநூறாவது இருக்கும்..!!
இதில் பெண்களை வதைப்பது
கேவலமான செயல்..!!

திணறி வருகின்றன
தினம் தினம் செய்திகள்,
பெண்களை
வார்த்தைகளாலும்,
செய்கைகளாலும்
துன்புறுத்தும்
ஆதிக்கப் போக்கு..!!

குடும்ப வன்முறை என்பது,
வெறும் உடல் ரீதியாக
அடித்து துன்புறுத்துவது
மட்டுமல்ல,
அவளுடைய தேவைகள்
மறுக்கப்படுவதும்
வன்முறை தான்..!!

ஆணை விட
அதிகம் படித்தாலும்,
வரதட்சணை
கொஞ்சம் குறைந்தாலும்,
அங்கு வன்முறை
தலை விரிக்கிறது..!!

நம் கலாச்சாரத்தின்
மிகப்பெரிய கொடுமை,
அப்பாவிடம் அடி வாங்காமல்
வளரும் பெண்,
குடிகாரக் கணவனிடம்
அடி வாங்கி அழுவது
வேதனையான உண்மை...!!

பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் குறைய,
கணவர்கள் அடிப்பதில்
தவறு ஒன்றுமில்லை என்ற
பெண்களின்
அழுகிய சிந்தனைகள்
மாற வேண்டும்...!!

08 August 2014

இது தான் கவிதையா...??(Mano Red)

எதுகை மோனை
இயைபுகளுடன்,
எதற்கும் உதவாத
இயல்பு மீறிய வார்த்தைகளில்
எதைச் சொன்னாலும்
அதுதான் கவிதையா...??

ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சங்களுடன்,
கூறு கெட்ட
கருத்துக்களை சொல்லி
கவிஞரென தன்னைத் தானே
புகழ்வது தான் கவிதையா..??

வாய்க்கு வந்ததை
வரிக்கு வரி சொல்லி,
மேலும் கீழுமாக
நான்கு வார்த்தைகளை
கடித்து துப்பி
கூறுவதுதான் கவிதையா..??

அந்தமும்
சந்தமும் பார்த்து
கவிதை சொல்ல வருபவர்கள்,
சொந்த பந்த
சமூக இழிவுகளை
மறைப்பது தான் கவிதையா...??

இரட்டை கிளவி சொற்களை
புரட்டிப் போட்டு
பளபளப்பாக கவியெழுதி
புரட்சி கவியென்று
சுய விளம்பரம்
செய்வது தான் கவிதையா..??

சொற்சுவை,
பொருட்சுவையுடன்
இலக்கண விதிகள் குழைத்து
விதைக்கப்படுவது மட்டும் தான்
ஆகச் சிறந்த கவிதையா..??

இவைகள் ஏதுமின்றி
ஊமை நினைவுகளுக்கு
உருவம் கொடுக்கும்
அத்தனை எழுத்துக்களும்
கவிதை இல்லாமல் போனாலும்
கவிதை சேராத
கவிதை தான் இது..!!

06 August 2014

விலங்கியல்...!!(Mano Red)

பேசிப் பேசியே
நாட்டைப் பிடிக்கும்
மனிதர்களுக்கு,
பேசத் தெரியாத
விலங்குகளிடமிருந்து
காட்டை பிடிப்பது
அத்தனை கஷ்டமல்ல..!!

காட்டிலிருந்து வந்தவன்
காட்டை விலை பேசுகிறான்,
விலங்கிலிருந்து பிறந்தவன்
விலங்கை ஓட விரட்டுகிறான்,
கடவுளாக வணங்கியவன்
கழுத்தைப் பிடிக்கிறான்..!!

மனித,
வனவிலங்கு மோதல்கள் கூட
இனத் தகராறு தான்..!!
நிலத்தை அபகரிக்க
விலங்கினத்தை அழிக்கிறான்..!!
சுய நலம் காக்க
கொலை செய்ய துடிக்கிறான்..!!

அறிவு ஐந்து என்றாலும்
அவர்களுக்கும்
உணர்ச்சி கொப்பளிக்கும்
இதயமுண்டு,
கொஞ்சி மகிழ
குடும்பமுண்டு,
பார்த்து ரசிக்க
கண்களுண்டு,
நம்மைப் போலவே ...!!

மனிதனில்லா உலகில்
விலங்குகள்
குறையின்றி வாழும்,
ஆனால்
விலங்கில்லா உலகில்
மனித வாழ்வு சாத்தியமற்றது..!!

அப்பாவியான,
யாரும் கேட்க
நாதியற்ற
விலங்குகளின் மேல்
திணிக்கப்படும்
ஒவ்வொரு வன்முறையும்
உலக வரலாற்றின் 
கறுப்பு பக்கங்கள்..!!

03 August 2014

கடவுள் யார் பக்கம்..?? (Mano Red)



வழக்கமாக 
எப்போதும் பார்க்கிற 
கோவில்,
அன்று மட்டும் கொஞ்சம் 
அதிக வேண்டுதல்களோடும்,
காணிக்கைகளோடும்
பரபரப்பாகவே இருந்தது...!!

ஒவ்வொரு
சனிப்பெயர்ச்சிக்கும்,
குருப் பெயர்ச்சிக்கும்,
இறைவனை விட
அதிக மகிழ்ச்சியடைபவர்
கோவில் பூசாரியாகத்தான்
இருக்கிறார்...!!

தட்டில் விழும்
துட்டுகள் பார்த்து
யாருக்கும் புரியாமல்
ராசியும்
நட்சத்திரமும் சொல்லி
அர்ச்சனை செய்தால்
ஆண்டவனுக்கு எப்படி புரியும்..??

அரசு அலுவலகமும்
ஆண்டவன் கோவிலும்
மக்களுக்கு ஒன்று தான்,
பணம் கொடுத்தால்
எல்லாம் நடக்குமென்ற
நம்பிக்கை அவர்களுக்கு...!!

இப்படியே போனால்
வனவாசம் போல
பணவாசம் கூட
இறைவனுக்கும் பிடித்துவிடும்..!!

எல்லோரையும் காக்க
இறைவன் போதும்,
ஆனால்
இறைவனைக் காக்க
பூட்டுக்கள் பூட்டிய
கோவில் வேண்டியிருக்கிறது..!!

இத்தனையும் பார்த்து
அமைதி காக்கும் அந்த
கடவுள் யார் பக்கமோ...??
கடவுளுக்காக ஏமாறும்
மக்கள் பக்கமா. .??
இல்லை
கடவுளை வைத்து ஏமாற்றும்
கயவர்கள் பக்கமா..??



01 August 2014

எல்லாத்துக்கும் மேல....??(Mano Red)

இருந்தானோ ..??
இருக்கிறானோ ..??
இல்லை
இருக்கப் போகிறானோ..??

இதற்கு முன்னால் அவன்
இருந்திருந்தாலும்,
இனிமேல்
இருக்கமாட்டான்,
இவர்கள்
இருக்கவும் விடமாட்டார்கள்..!!

இல்லவே இல்லாத
இருந்தும் இல்லாத
ஒருவன்
இருந்தால் என்ன ,
இல்லாவிட்டால் என்ன ...??
அவனை
இருந்தபோது பார்க்கவில்லை,
இருக்கும் போது தேடவில்லை,
இருக்கப் போகும் போதும்
இருக்க விடப் போவதில்லை..!!

இல்லாத ஒருவனை
இருப்பது போல
இருக்க வைக்கவும்,
இருந்த ஒருவனை
இல்லாதது ஆக்கவும்
இங்கு மட்டும் சாத்தியமே...!!

யார் இருந்தாலும்
இல்லாமல் போனாலும்,
எல்லோரும் சொல்வது போல
எல்லாத்துக்கும் மேல
ஒருவேளை
அவன் இருப்பானோ...??