www.gamblinginsider.ca

30 September 2015

உடைஞ்சு போச்சு.! -Mano Red



களிமண்ணாக இருந்தாலும்
கடும் தவமிருந்தே,
குழந்தைகளின் கையால்
உடைந்து போவதற்காக
பிறக்கின்றன பொம்மைகள்.!

உடைந்த சத்தத்துக்கும்
சத்தம் கேட்டு ஓடி வரும்
பெரியவர்களின் திட்டுதலுக்கும்
இடையில் இருக்கிற - மௌனத்தின்
இடைவெளியில் அழகாக
தப்பி விடுவார்கள் குழந்தைகள்.

தப்பிக்க அவர்கள் இயற்றும்
வாக்கியங்கள் ஒவ்வொன்றும்
அத்தனை சாதாரணமல்ல,
பொம்மைக்கு கிடைக்கும்
சாப விமோசன மந்திரங்கள்.!

பொம்மைதான் குழந்தையா?
குழந்தைதான் பொம்மையா என்பது
உடைதலின் தன்மை சார்ந்தது.
பொம்மைக்கு ஆயுள் குறைவு
என்பதனால்
குழந்தையாகவே இருக்கின்றன.!

கை தவறி விழுந்திருந்தாலும்
”நான் ஒன்னும் செய்யல
அதுவா விழுந்து உடைஞ்சு போச்சு” - என்ற
குழந்தையின் குற்றச் சாட்டலில்
பொம்மை இப்போது
சொர்க்கம் சேர்ந்திருக்கும்.!


26 September 2015

ஒத்திகை வாழ்க்கை.! Mano Red



விரல் மடக்கி
குரல் திருத்தி
தலை கவிழ்த்து - நான்
யாரென்பதை நிருபிக்க,
ஒவ்வொரு முகத்திற்கும்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு முகமூடியைக்
கழற்றி எறிகிறேன்.

இருளில் விழுகிற நிழலின்
வால் பிடித்து ஓடியே
வெளிச்சத்தின் நுனி பற்றுகிறேன்.

யாராவது கேட்கலாம்
கதவுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும்
அந்தக் கருப்பு உருவம் யாரென்று?
நானும் தயங்காமல் நடித்து,
யோசிக்காமல் சொல்வேன்
அது யாரோ என்று! - நிஜமாகவே
அது யாரோவாகவே இருந்திருக்கலாம்.

விழிப்புணர்ச்சியில்லாத
விழியின் புணர்ச்சிகளை
அளந்தும் அளக்காமலும்
அடுத்தவர்களின் மனதுள் செலுத்தி
திறவுகோல் தவறிய
திருடனாய் கைகால் உதறுகிறேன்.

ஊருக்கு ஒரு நடிப்பு
உணர்வுக்கு ஒரு நடிப்பு
அழுகைக்குக்கும் அழகுக்கும்
சேர்ந்து ஒரு நடிப்பு என
புதுமுகம் பார்த்த போதெல்லாம்
பவுடர் பூசிய குழந்தையின் சிரிப்பை
ஓரளவுக்கு ஒத்திருக்கிறது -என்
ஒத்திகை வாழ்க்கை.!




24 September 2015

ஆத்ம திருப்தி...! -Mano Red



உணர்ச்சி இன்னும் இருப்பதாலென்னவோ!
தரையில் அமர்ந்து கால்களை நீட்டி
ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டு
அவளுக்கே உரிய தோரணையில்,
கிளம்புவதற்குத் தயாராகும் என்னை
வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருந்தாள் பாட்டி.
”போய்ட்டு வரேன் பாட்டி” என்று
சொல்வதற்காவது தன்னுடன் பேசமாட்டானா?
என்ற அவளின் எதிர்பார்ப்பை
நானும் புறக்கணிக்கத் தவறவில்லை.
பேசாமல் அவமதித்து வந்த காரணம்
சொத்து தகறாரோ அல்லது
செத்துப் போகாமல் இருக்கிறாளே என்ற
வெறுப்பிலோ வந்ததல்ல.
அவள் கிழவி, நான் இளைஞன்
என்பதால் வந்தது.
அவளுடனான என் மௌனங்கள்
அர்த்தமற்றே கிடந்தது!
அவளின் முதுமையை விட
என் இளமையின் ஆணவம்
இன்னும் அதிகமாகவே நரைத்திருந்தது.
சிறு வயதில், பாட்டி கதை சொல்லி
தூங்க வைத்ததாய் ஞாபகம்.
நான்தான் இன்னும்
தூக்கத்திலிருந்து எழவில்லை
என்றுணர்ந்த போது, பஸ்ஸில்
என்னருகில் நின்ற முழு மூதாட்டிக்கு
சீட் தருவதற்காக எழுந்து
ஆத்ம திருப்தியை
ஓரிரு வார்த்தைகளுக்குள் அடக்கி
கண் துடைத்து நின்றேன்.

15 September 2015

கல்லாய் மாறும் அகலிகைகள்.!

செவ்வாய் நோக்கிய பயணத்திற்கு
செவ்வாய் கொண்ட அழகிகள் தேவை என்ற
விளம்பரத்தை ப்ச்கொட்டாமல் ரசித்து
வேகமாய் முன்னேறிய உலகம்,
சகுனத்தடை ஏதுமின்றி
இளைப்பாற நின்றது பூமியின் விளிம்பில்.
சாக்கடையில் விழுந்தவனைச் சுற்றி
எதற்கும் ஆகாத செல்ஃபி பேய்கள்
கையை உயர்த்தியபடி ரசிக்க...
மிச்சமான எச்சில் சோற்றை
இல்லாதவனுக்குக் கொடுக்க மறுத்த
முடி(வி)யில்லா முதலாளிகள்
கும்மாளமாய்க் கூத்தடித்துச் சிரிக்க...
பெற்றெடுத்த வயிற்றில்
பெட்ரோல் ஊற்றி வழியனுப்புவது போல
முதியோர் இல்லம் சேர்த்துவிட்டு
முண்டங்களாய் பிள்ளைகள் மாறியிருக்க...
பஸ்ஸில் அலையும் ஆண்கள் சிலர்
உரசித் தேய்க்கும் போதெல்லாம்
அகலிகையாய் பெண்கள்
கல்லாக மாறத் துடிக்க...
நின்று வேடிக்கை பார்த்த உலகமோ
புதிதாக எதுவும் நடக்கவில்லை
கொஞ்சம் வழிவிடுங்கள் என்றபடியே
பண்பாட்டிற்கு புதிய விளக்கம் சொல்லி நகர்ந்தது.
------------------------------------------------------------------

இது என்னுடைய சொந்தப் படைப்பு என்பதை உறுதிப் படுத்துகிறேன். இதற்கான முழு உரிமையும் என்னைச்  சார்ந்தது மட்டுமே.
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா- 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு - தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும்”மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015” க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது.




சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்..! -Mano Red



பாதரசம் சிதறிய கண்ணாடியில்
முகம் காட்டிய பின்பே
வாசல் கடக்கிறேன்,
அழகாய் இருப்பது
ஒருபுறம் இருந்தாலும்,
அழகாய்க் காட்டுவதற்கு
கண்ணாடிக்கும் வயதில்லை.

பெருகி விடுமோ என்ற பயத்தில்
நரைத்த முடியைக் கட்டி
மலையை இழுக்க
மனசாட்சி முயன்றதில்லை,
மறைத்து சீவுவதால் என்னவோ
சீப்பின் பற்கள் மட்டும்
எப்படியோ சிரித்து விடுகின்றன.

இளமையின்
அழகான மூங்கிலில்
அசிங்கமாய் துளையிட்டு
இனிமையான ராகம் எழுப்பிட
எனக்கும் ஆசைதான் என்று
இலக்கியத்தனமாகக் கிள்ளுவதற்காகவே
பருக்களும் வந்துவிடுகின்றன.

சிவப்பாய் இருப்பவன்
பொய் சொல்ல மாட்டான் என்று
எவன் சொல்லிப் போனானோ
தெரியவில்லை,
பருவ வயது பேசும் சில உண்மைகளும்
நிறத்தினால் பொய்யாகி விடுகின்றன.

தாழ்வு மனதுடன்
தத்தளித்துச் சென்ற போது
மூடநம்பிக்கையாக இருந்தாலும்
அழகாகத் தெரிந்தது,
அலங்கரித்த தன் குழந்தை மீது
யார் கண்ணும் படக்கூடாதென்று
இறுதியாக கண்ணத்தில்
அவள் வைத்த கருப்பு மை..!

12 September 2015

குடிகாரன் பேச்சு.! -Mano Red



முச்சந்தியில் நின்று
மூக்குச் சீந்திக் கொண்டிருந்தவன்,
அடேய் குடிகாரா! என்றதும்
வேட்டியில் கையை துடைத்தபடி
ஏறிட்டுப் பார்த்தான்.

அது அவன் ஆருயிர் நண்பன்.
ஒரே கோப்பையில்
எச்சில் மதுவைப் பகிர்ந்தவர்கள்,
அரசியல் எச்சிலையும்
பகிரத் தவறவில்லை.

அரசியல் அரிசியை
அரைகுறையாக ஓரளவுக்கு
வேக வைக்கத் தெரியுமென்பதால்,
அந்த இரவுக் கூட்டத்தை
தலைமை ஏற்கக் கிளம்பினர்
தலைமயிர் இழந்த அவர்கள்.!

கரை வேட்டிக்கேத்த
முகக் கலையில்லை என்றாலும்
கறை பட்ட கை என்பதால்
அக்கரை முதல் இக்கரை வரை
செல்வாக்கு பெற்றிருந்தனர்.

மூத்த தலைவர்கள் பேச்சில்
ஆரம்பமே ரம்பமானதால்,
அடுத்ததாக
மூக்குசிந்திய நண்பர்
மதுவிலக்கு பற்றி பேசுவார் என
கேலியாகச் சொல்லி அமர்ந்தார்
எச்சில் குடிகார நண்பர்.

முன்னிரவு குடித்த மதுவே
மூக்கு சிந்தியதற்குக் காரணமென்ற
உளவியல் அறியாத
உடன் பிறவா சகோதரர்களும்
ரத்தத்தின் ரத்தங்களும்
மூக்குச் சீந்தியவனின் பரப்புரை கேட்டு
சத்தமின்றி கை தட்டிக் கொண்டிருந்தனர்.

02 September 2015

கோடித்துணி..! -Mano Red



ஆடையெல்லாம் சிறுநீர் கழித்து
நடக்க முடியாத
முதிர் பருவ நிலையில்
அவர் கிடந்தார்.

மகனின் சிறுநீரை
நெஞ்சில் சுமந்தவருக்கு
நெருஞ்சி முள்ளாய் மருமகள்.
குத்துவதற்கு மாறாக தினம்
குத்திக் குத்திக் காட்டுவாள்
மாமனார் என்பதால்.

துணி மாற்றவும்
துணைக்குப் பேசவும்
ஆளில்லாத அந்நிலையை,
சிறுநீர் நாற்றமே
சிறுகதையாய் வடித்திருக்கும்.

முயன்று தோற்றதின் வலியை
மூன்று முறை அறிந்திருந்தார்.
ஒருமுறை விசத்திலும்
மறுமுறை தீக்குளித்தும்
இறுதி முறை தள்ளாடும் வயதிலும்.

நான்காவது முயற்சியை
எவனும் எடுக்கவில்லை,
உரிமையுடன்
எமனே எடுத்துக் கொண்டான்,
முக்கல் முனகலுடன்
மூச்சு பெரிதாய் இழுத்து நிற்க
இரவிலேயே இழவு விழுந்தது.

ஊர்கூடி அடக்கிய பின்
இன்னும் அழுது தீர்க்காத மருமகள் மீதும்,
வீட்டின் மூலையில் அவருக்காக
குவித்து வைக்கப்பட்டிருந்த
கோடித்துணிகள் மீதும்
வெறும் ஈக்கள் மட்டுமே
மொய்த்துக் கொண்டிருந்தன.