www.gamblinginsider.ca

31 March 2015

மெலிந்ததோர் யானை..!! -Mano Red

பூனையைக் கண்ட
யானை புத்திக்கு
உருவு கண்டு உருவானது
பொல்லாப் பொறாமை..!!
அந்த நொடி சபதத்தில்
அடுத்த முயற்சியாய்
ஆகிறேன் மெலிவாய் என்றே
ஆட்டமாய் ஆடியது..!!

கனவிலும் குழப்பமே
கத்தியே விழித்தது,
குடும்பத்தில் ஒருவனாய்
கொஞ்சி மகிழும்
பூனை நிலை எங்கே,
பார்த்ததும் அஞ்சி விலகும்
யானை எந்நிலை எங்கே..??

அச்சமயம் முதல்
அச்ச பயம் இல்லாமல்
வழியின்றி வலியுடன்
மெலிய தொடங்கியது,
யானை வயிறு பசித்தாலும்
பானை சோறு வெறுத்தது..!!

பூனையை நினைத்தே
சுய நினைவு தொலைத்தது,
கருமை நிறம் அகற்றவே
சுவற்றில் உடல் தேய்த்தது,
மீசை முளைக்க எண்ணியே
தந்தம் ஒடித்து நின்றது..!!

தன்னம்பிக்கை மறந்து,
தும்பிக்கை இழந்து,
பூனையாய் நடந்து,
வீணாய் போனதில்
ஆசிர்வாதம் வாங்கும் மக்களும்
வாக்குவாதம் செய்தனர்
யானையின் கிறுக்கு நிலையை..!!

பொறைமை குணத்தால்
உள்ளத்தில் மாற்றமே தவிர
உருவில் பெரிதும் மாற்றமில்லை,
உடல் மெலிந்து சுருங்கியதில்
நிற்க சக்தியின்றி
யானைக்கு அடி சறுக்கியது..!!

அப்புறம் சொன்னது யானை
அவரவர் உருவிலே
அவரவர் வழியிலே
அவரவர் தெரிந்ததை
அனுபவித்து வாழ
ஆயிரம் வழி இருக்கிறது,
அடுத்தவர் போல
ஆக எண்ணியதே என் தவறு..!!