www.gamblinginsider.ca

04 October 2017

ஞாயிறு உளறல் 9


போன ஆண்டு நடந்த சம்பவம். முன் ஏற்பாடின்றி கல்லூரி நண்பனின் திருமணத்துக்காக ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. சென்னையில் இருந்து போகும்போது மதுரை மாறிச் சென்றேன். ஊரிலிருந்து வரும்போது மதுரை மாறி சென்னை பேருந்து ஏறினால் காலையில் வந்து சேர லேட் ஆகும் என்பதால் ஊரில் இறங்கி முதல்வேளையாக, எப்போதும் புக் செய்யும் டிராவல்ஸ் ஆபிஸ் சென்று மேனேஜரிடம் டிக்கெட் கேட்டேன். "இப்போ வந்து கேக்குறீங்க? முகூர்த்த நாள் தம்பி டிக்கெட் இல்ல" என்று முகத்தைப் பார்க்காமலே சொல்லிவிட்டார். "அண்ணே எப்பவும் நம்ம பஸ்லதான் போவேன். அவசரமா கெளம்புனதால டிக்கெட் சொல்ல முடியல. டிரைவர் பின்னாடிகூட உக்காந்துட்டு போறேன். ஏதாச்சும் பாத்து செய்ங்க" என்றேன். அப்போதும் அவர் என் முகத்தைப் பார்க்காமல் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். இதற்குமேல் நானும் அங்கு நிற்கவில்லை. மதுரை மாறிச் சென்றுவிடலாம் என்று நகர்ந்துவிட்டேன்.
நண்பனின் திருமணம் முடிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். வேறு ஊர்களில் இருந்து வந்த நண்பர்களும் மதுரை மாறிச் செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த டிராவல்ஸ் மேனேஜர் ஒரு கையில் வேட்டியைத் தூக்கிப் பிடித்தபடி கை கழுவ வந்தார். அவருக்கு உதவ பைப்பை திறந்துவிட்டேன். இருந்தாலும் என்னை உதாசீனப்படுத்திய காரணத்தால் குத்திக் காட்டும் விதமாக "அண்ணே தண்ணி தொறந்து விடுறதுக்கெலாம் டிக்கெட் தர வேணாம்" என்று சொன்னபோது என் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். நாம கலாய்க்கிறது தெரியாம இந்த மனுசன் இம்ப்ரெஸ் ஆகுறாரோ? (ஸ்லோமோஷன், வானத்தைப் போல RR எல்லாம் பேக்கிரவுண்டில் கேட்டது).
வரவேற்பு மேசைக்கு அருகில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். தூரத்தில் இருந்து அந்த மேனேஜர் கை அசைத்து அழைத்தார். அருகில் சென்றதும் "நீங்கதான காலைல வந்து டிக்கெட் கேட்டீங்க. நம்ம பஸ்ல போங்களேன்" என்று சொன்னபோது சென்டிமென்ட் வில்லனாகத் தெரிந்தார். "அதான் டிக்கெட் இல்லனு சொல்லி மனச ஒடச்சீட்டிங்களே" என்று நான் சொன்னதும் என் முதுகைத் தட்டியபடி மீண்டும் சிரித்தார். மனுஷன் நல்லா சிரிக்கிறாரு. "நான் இன்னைக்கு மெட்ராஸ் போற மாதிரி இருந்து கேன்சல் ஆகிடுச்சு. ஆபிஸ்ல இருக்கும்போதே உங்க ஞாபகம்தான் வந்துச்சு. நம்பர் இல்லாததால உங்களுக்கு சொல்ல முடில. நல்லவேளையா நீங்களும் இதே கல்யாணத்துக்குதான் வந்துருக்கீங்க" என்று சொல்லி முடித்தார். அதுமட்டுமில்லாம அவரோட நம்பர் கொடுத்து "இனிமே டிக்கெட் வேணும்னா எனக்கே போன் பண்ணுங்க தம்பி... பாத்து செய்வோம்" என்றபடி அவர் பெயரும் சொல்லாமல் என் பெயரும் கேட்காமல் சென்றுவிட்டார்.
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா... இந்த மனுசங்கள புரிஞ்சிக்கிறதுதான் எவ்வளவு ஈஸியாவும் கஷ்டமாவும் இருக்குதுல்ல.😍
Mano Red / 1.10.17