www.gamblinginsider.ca

06 December 2017

முள்ளும் மலரும் - Mano Red

வலிதான் வாழ்க்கை, வாழ்க்கைதான் வலி என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கும் இந்தப் படத்தின் பெயரில் இருக்கும் இரண்டு அர்த்தங்களும் ஆழமானது.
1. முள்ளும் மலரும்: முள் மற்றும் மலர்
இதில் யார் முள், யார் மலர்?
2. முள்ளும் மலரும்: இந்த முள்ளும் என்றாவது மலரும்.
காளி என்கிற முள்ளும் ஒருநாள் மலரும்
"கெட்ட பய சார் இந்தக் காளி"ன்னு சொல்லியபடி திரியும் ரஜினியின் சுயகெளரவமும், வித்தியாசமான திமிரும் வெறித்தனமானது. ஒரு வாழைமரம் கம்பியை முழுங்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் ரஜினியின் முரட்டுத்தனமும் இளகிய மனமும் இருக்கும்.
"இப்ப என் தங்கச்சிய உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலை"ன்னு சொல்லும்போது ரஜினி சொல்ல வேண்டிய "கெட்ட பய சார் இந்தக் காளி" டயலாக்க நமக்கு சொல்லத் தோணும். அதுதான் காளி அதுதான் ரஜினி.
"ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக்கூட காளிங்குறவன் பொழச்சிக்குவான் சார். கெட்ட பய சார் அவன்"னு கண் கலங்கி உதட்ட திருகிக்கிட்டே மேல பாக்கும்போது நமக்கு நடுங்கும். அந்த மனுஷன கட்டிப் பிடிச்சு அழணும்னு தோணும். ஏன்னா... கேவலம் நாம எல்லாம் மனுஷங்கதான.
(யாராவது காளி ரஜினி மாதிரி நடிக்க ஆசைப்பட்டா போஸ் கொடுக்கலாமே தவிர நடிக்க முடியாது)
எத்தனை அண்ணன், தங்கை படம் வந்தாலும் சினிமாத்தனமில்லாத இந்த மெலோடிராமாவை மிஞ்ச முடியாது. இந்தக் காட்சியை எப்படி விவரித்து எழுதினாலும் சரியாக உணர்வுகளுக்குள் கடத்த முடியுமா தெரியாது. ஆனால், முக பாவங்கள், பின்னணி இசை கலந்த காட்சியின் ஊடாக அதைச் சரியாக நமக்குள் கடத்தியிருப்பார் இயக்குநர் மகேந்திரன்.
கை இழந்த அண்ணனை தங்கை முதன்முதலாகப் பார்க்கப் போகிறாள். அந்தக் காட்சி எப்படி இருக்கும் தெரியுமா? ஆற்றில் பானையைக் கழுவிக்கொண்டிருக்கும் தங்கை. தூரத்தில் வரும் ஜீப்பை பார்த்து ஓடி வருவாள். காளியும் வள்ளியும் பார்க்கும் தூரத்தில் நின்றபடி பார்ப்பார்கள். தனித்தனியாக முக பாவங்கள் காட்டப்படும். அவர்களது அமைதியில் பின்னணி இசை தன் வாயை மூடிக்கொள்ளும். எல்லாமாக இருந்த அண்ணனின் கை இல்லாதது கண்டு தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை சத்தங்களையும் விழுங்கி அமைதியாக தங்கை இருக்கும்போது இசை தன் சோக வாயைத் திறக்கும்.
இந்தப் படத்திலும் வசனம் இருக்கிறது. அது இசை வசனம். எல்லா வசனங்களையும் இளையராஜா ஆழமான இசையில் பேசியிருப்பார்.
பஞ்ச் டயலாக் பேசுனாதான் ரஜினி என்கிற பட்டத்தை எல்லாம் கிழித்துக் குப்பையில் கொட்ட வேண்டும் என்பது போல வார்த்தைகளின்றி ரஜினி நடித்திருப்பார். சொல்லும்போதே உடல் நடுங்குது.😍
Mano Red / 5.12.17

04 December 2017

விர்ச்சுவல் காதல் - Mano Red

#Nano_Story
-
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மொபைல் திரையை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் ரோஸி. அவளுடைய மெய்நிகர் (virtual) காதலன் ஆல்ஃப்ரெட். இன்னும் அவனிடமிருந்து எந்தப் ரிப்ளையும் வரவில்லை. கொஞ்ச நேரம் காத்திருக்க முடிவு செய்து பிறர் அனுப்பியிருந்த குட்மார்னிங், fwd தத்துவம், திருக்குறள் குறுந்தகவல்களை எல்லாம் வாசித்து முடித்தாள். பொறுமை இழந்த பிறகு ‘எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என இறுதி மெசேஜ் ஒன்றை அவனுக்கு அனுப்பிவிட்டு...
அவள் அனுப்பிய மெசேஜை படித்துக்கொண்டிருக்குபோது அவனுடைய சிஸ்டம் Fatal Error என்று கண் சிமிட்டியது. ரோஸியும் அதே Errorஐ செய்யப் போகிறாள் என கம்ப்யூட்டர் மூளை உணர்த்தியதும் ஹைபர்லூப் வேகத்தில் போர்ட்டபிள் கேபிள் வழியே அவளிருக்கும் இடம் வந்து சேர்ந்தான். இறுதி மூச்சு இருப்பதை அறிந்த ஆல்ஃப்ரெட், சூப்பர் கணினி உதவியுடன் அவளைப் பிழைக்க வைக்க முடிவு செய்தான். அவனுக்குத் தெரிந்த எல்லாத் தவறான புரோகிராம்களையும் அவள்மீது ரன் செய்தான். எந்த அசைவும் இல்லை. அப்போதுதான் அவள் முதுகில் இருந்த டைனோசர் பாதம் அளவிலான மச்சப் பதிவுகளைப் பார்த்தான். இது எக்சிமா என்கிற சரும நோய்க்கான அடையாளம் என்பதை கூகுள் அவன் காதில் சொல்லியது. குணப்படுத்த முடியாத வியாதியின் வலியால் தற்கொலை செய்துவிட்டாள் என்று ஃபேஸ்புக்கை நம்ப வைத்துவிடலாம் என்று சமாதானம் ஆனான்.
இருந்தாலும் அடுத்த முயற்சியாக ‘புரோ வைட்டமின் ஏ’ நிரம்பிய உதடுகளால் அவளுக்கு தன் மூச்சுக் காற்றைச் செலுத்தினான். ம்ஹூம்ம்ம்... காப்பாற்ற முடியாது என தலையில் கைவைத்து உட்கார்ந்தபோது ‘எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என்று அவள் அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வந்தது. உடனே சிசிடிவி கேமராவைச் சோதித்துப் பார்த்துச் சிரித்தான். தற்கொலை செய்வது ரெக்கார்ட் ஆக வேண்டும் என்பதற்காக கேமரா பொருத்தியிருக்கும் கம்பியில் தூக்குப் போட முயற்சித்து கீழே விழுந்திருக்கிறாள் என்பதை கேமரா பதிவு சொல்லியது.
தண்ணீரை செலவழிக்க விரும்பாமல் நெகட்டிவ் சல்ப்யூரிக் ஆசிடை முகத்தில் அடித்து மயக்கத்தில் இருந்து அவளை எழுப்பினான். இவன்தான் தன்னுடைய மெய்நிகர் காதலன் என்றதும் புன்னகைத்தாள். இருவருக்கும் காதல் பெருக்கெடுத்தது. இணையதள வேகத்தை மிஞ்சும் அளவுக்கு அவர்கள் இணையும் வேகம் இருந்தது. எல்லாம் முடிந்தபிறகு, அவளைக் கம்ப்ரெஸ் செய்து இமேஜ் என்கிற பேக்கேஜிங் லேபிள் ஒட்டி, அலமாரியில் 13வது வரிசையில் 26வது படமாக அவளை பத்திரப்படுத்தினான் ஆல்ஃப்ரெட்.
Mano Red /3.12.17

20 November 2017

அவள் அப்படித்தான் 😍 -Mano Red


-
இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் இதை ஒரு சாதாரண படமாக கடந்து வர முடியாது. சாந்தமான நாயகி, காதலன் ஏமாற்றியதும் தற்கொலை செய்யும் நாயகி, தொட்டவுடன் கற்பு போனதெனக் கதறும் நாயகி, எதற்கெடுத்தாலும் அழும் நாயகி என கட்டமைக்கப்பட்ட பிம்பத்துக்குள் இருந்த நாயகி கதாப்பாத்திரத்தை கட்டுடைக்க வந்தவளே மஞ்சு! ஒட்டுமொத்த நாயகிகளின் மரபுகளையும் உடைத்தாள்; பேச்சில், செயலில், பார்வையில், கோபத்தில் என ஒவ்வொரு பிரேமிலும் நாயகியாக ஜொலிப்பாள். தற்போதைய ஆல்தியா ஜான்சன் (தரமணி), லட்சுமி போன்ற புதுமைப் பெண்கள் அத்தனை பேருக்கும் முன்னோடி மஞ்சு. அவள் இப்படித்தான்!
படத்திற்குள் போகலாம்.
'எனக்கு ஒரு பசி , என்னைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு பசி' என ஒரு ஆட்டக்காரி சொல்வதில் இருந்து ஆரம்பிக்கும் படம். ஆண்களால் ஆண்களுக்காக படைக்கப்பட்டது பெண்ணுலகம் என்கிற பிம்பம் அங்கிருந்து ஆட்டம் காண ஆரம்பிக்கும். துப்பாக்கியில் இருந்து தெறிக்கும் தோட்டாக்கள் போல ஒவ்வொரு வசனமும் ஆணாதிக்கம் மீது தெறிக்கும். அதே தோட்டாக்கள் சமூக சேவகி போன்ற போலியான பெண்களின் மீதும் படும். பெண்களைப் பற்றி குறும்படம் எடுக்க வரும் கமலுடன் சமூக சேவகி ஒருவரைப் பேட்டி காணச் செல்லும்போது, மஞ்சு கேட்பாள் "உங்கள மாதிரி ஆட்களுக்கு வேறு எந்த மேக்-அப்பும் வேண்டாம் , Society make up ஒன்றே போதும்" என்றவாறு ஆங்காங்கே வெடித்துச் சிதறுவதுபோல மஞ்சுவை வடிவமைத்திருப்பார் ருத்ரய்யா.
இதில் ஆண் கதாபாத்திரங்களைப் பற்றி இறுதியாக பேசலாம். ஏனெனில் மஞ்சு இன்னும் அதிகம் பேசப்படவேண்டியவள்.
போலி பிம்பங்களையும், செண்டிமெண்ட் டயலாக்குகளையும், பரிவாக, பாசங்காக, மேலோட்டமாக தன்மீது படும் பாச பசப்புகளையும் அடித்து நொறுக்கிக் கொண்டே இருக்கும் மஞ்சு தன்னையும் ஒரு புதிராகவே வைத்திருக்கிறாள்.
அடிப்படையில் மஞ்சு யாரெனில், கள்ளக் காதலனைக் கொண்டவளின் மகள். தாயின் கள்ளத்தனங்களையும், தன்மீதான பாலியல் சீண்டல்களையும், ஏமாற்றங்களையும் தனக்குத் தெரிந்த ஆண்களின் துரோகத்தால் அனுபவிக்கும் மஞ்சு தன் எதிர்ப்படும் அத்தனை ஆண்களையும் வெறுத்து வறுத்தெடுக்கிறாள்.
முதலில் ஏமாற்றும் காதலன், அடுத்து அவளைச் சீரழித்துவிட்டு தங்கை எனக்கூறி கழட்டிவிடும் காதலன், உடன் இருப்பவர்கள் இவள் ஒரு அப்படி இப்படி கேரக்டர், படுக்கைக்கு மட்டும் ஆண்களைத் தேடுபவள் எனப் பேசக் கேட்பது என்று மஞ்சுவின் உலகமும் உறவுகளும் அவள் வெறுப்பதாகவே இருக்கின்றன. இருந்தாலும் உறவுக்காகவும் அன்புக்காகவும் ஏங்கும் மஞ்சு இரு முறை ஏமாந்த பிறகும் மூன்றாம் முறையும் ஏமாறத் தயாராகிறாள். அதுவும் காதலின் பெயரால். எல்லோரும் என்னை ஏமாற்றும்போது நான் ஏன் என்னையே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்கிற மனநிலையில் எல்லா நிலைகளிலும் தன்னை வருத்தி, மகிழ்ந்து தெளிவாகவே கடந்து வருகிறாள்.
இதில் கமலுக்கு ஜென்டில்மேன் கதாபாத்திரம், ரஜினிக்கு வேசமில்லாத யதார்த்தமான அப்பட்டமான ஆண் கதாபாத்திரம். (இப்படிப்பட்ட நடிகன் ரஜினி, சூப்பர் ஸ்டார் பட்டத்துக்குள் குறுகியது வருத்தமே)
கமல் பெண்ணுரிமை பேசுகிறான், பெண்ணின் சுதந்திரம் பற்றி கவலை கொள்கிறான். மஞ்சுவின் சோக வரலாறுகளின் பக்கங்களை பரிவுடன் படிக்கிறான். கடைசிவரை அவளைப் புரிந்துகொள்ளாமல், புரியாத புதிராகவே இருக்கும் அவளிடம் தனது காதலைச் சொல்லத் தெரியாத பெண்ணிய சுதந்திரம் பற்றிக் கவலை கொள்ளும் கமல், மஞ்சுவைக் காதலிப்பதாக அவள் தோழியிடம் சொல்லி ஒரு புனிதனாகக் காண்பிக்கும் வேளையில் மஞ்சு வெறுக்கும் ஆண்களின் உலகத்தில் இருக்கும் விளக்குகள் அத்தனையும் அணைந்து எரியும்.
கமலின் நண்பனாக, மஞ்சுவின் முதலாளியாக, ரஜினிகாந்த். நெற்றியில் விபூதியுடன் மது, மாது என்று வாழும் சராசரி ஆண். பெண்களை போதைப் பொருளாக எண்ணி சந்தர்ப்பம் கிடைக்கும்போது அனுபவிக்கும் சுகவாசி. அவர் வில்லனல்ல. வக்கிரமான சந்தர்ப்பவாதி. ஆணாதிக்கவாதி. மஞ்சுவிடம் தவறாக நடந்துகொண்டு அடிவாங்கிய பிறகு "ஒரு ஆம்பள, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகணுமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகணுமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்" என்பது நடைமுறை யதார்த்த உச்சம்.
பெண்களின் கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடைவெளியில் இருக்கும் வாழ்க்கையை கத்தி மீது பூ சுமந்து நடப்பதுபோல ஸ்ரீப்ரியா நடந்து வாழ்ந்திருப்பார். அவரைத் தவிர மஞ்சுவாக வேறு யாரும் நடிக்க முடியாது என்பதுபோல அழகான ராட்சசியை அத்தனை அழுத்தமாக பிரதிபலித்திருப்பார்.
இதற்கிடையில் காற்றிலாடி கரைந்திருக்கும் ஞானத் தகப்பனின் இசை பற்றிச் சொல்லவா வேண்டும்!
Climax:
கமல் மனைவியிடம் 'பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி என்ன நினைக்கிற' என்று மஞ்சு கேட்க ' எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே' என அவள் சொல்ல 'அதனாலதான் நீ சந்தோஷமா இருக்க' என்று சொல்லும் மஞ்சு அவர்களை விட்டு அந்த இடத்திலிருந்து பிரிவாள்.
அவள் மீண்டும் இறந்து போனாள்
அவள் இறப்பாள்
பிறப்பாள்
இறப்பாள்
அவள் அப்படித்தான்!
Mano Red / 19.11.17

17 November 2017

மீயொலி காதலி - Mano Red


-
டைம் மிஷினில் பயணித்துக் கொண்டிருந்தோம். நான் கொடுத்த லேசர் பூவைக் கையில் ஏந்தியபடி அந்தக் கேள்வியைக் கேட்பாள் என மைக்ரோ அளவுகூட எதிர்பார்க்கவில்லை. ‘வருங்காலத்தில் காதல் எப்படி இருக்கும்?’ என்பதுதான் அவளது கேள்வி. காதோரத்தில் தொங்கிக் கொண்டிருந்த என் மூளையின் ஐ.க்யூ. அளவு கூடிக் குறைந்ததை அவளிடம் வெளிக்காட்டாமல், 'அதுவந்து...' என பதிலை இழுத்தேன். இதற்கு முந்தைய பேரண்டத்தில் இருந்து எடுத்து வந்திருந்த காதலர்களின் புதை படிமங்களை வரிசையாகக் காண்பித்து இப்படித்தான் வருங்காலக் காதல் இருக்குமென்றேன். பைபர் இழைக் கண்கள் வழியாக படிமங்களை உற்றுப் பார்த்தவள் அகச்சிவப்பு புன்னகையை முகத்தில் காட்டி புரியவில்லை என்பதை உதடு சுழித்துக் காண்பித்தாள். எப்படிப் புரிய வைப்பது எனக் குழம்பித் தவித்த நேரம் அல்ட்ராசவுண்ட் (மீயொலி) இசை பின்னணியில் ஒலிக்க ‘பால்வீதியில் நிலவு நீ...’ என்கிற 1024பைட் கவிதையை வாசித்துக் காட்டினேன். ரெக்கார்ட் செய்து மெமரியில் ஏற்றிக் கொண்டவள் காதலாகிக் கசிந்துருகினாள்.
Mano Red / 2.11.17

என்னு நிண்டே மொய்தீன்😍😍 - Mano Red


//
காஞ்சனமால-மொய்தீனுடைய காதல்... சேர்ந்திருந்து... பிரிந்திருந்து... காத்திருந்து... மீண்டும் சேராமல் போன காதல். கோழிக்கோட்ல படிச்சிட்டு இருப்பாங்கனு நினைக்கிறேன். ரெண்டு பேருமே ப்ரண்ட்ஸ். மதம் கடந்து ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல உறவும் இருக்கும். மேற்படிப்புக்காக பிரிஞ்சு தொடர்பே இல்லாம இருப்பாங்க. திடீர்னு ஒருநாள்... (அந்த சீன் அழகா இருக்கும்) பேருந்துப் பயணம்; அதுல கண்ணாடி வழியா ஹீரோவோட கண்ணு பாக்குறத ஹீரோயினோட கண்ணு பாத்துரும். மென்மையான சிரிப்புல பழசு ஞாபகம் வர திரும்பிப் பாக்கும்போது காஞ்சனமாலயின் மொய்தீன் தெரிவான். அந்த செகண்ட்ல பட்டாம்பூச்சி பறக்காத, லைட் அணைஞ்சி எரியாத, இதயத்தின் ஆழத்திலிருந்து வெடித்தெழக் கூடிய காதலை காஞ்சனை உணர்வாள்.
காதல் துளிர்த்த பிறகு கடிதம்; வீட்ல சண்டை; தனிமைச் சிறை; குடும்ப பிரச்னை; எதிர்ப்பு எனக் கடந்து போகும். அதற்குள்ளாக காதல் இவர்களது இதயத்தை கான்கிரீட் பூக்களால் நிரப்பியிருக்கும். பிரச்னைகளைச் சமாளிக்க இருவர் மட்டுமே புரிந்துகொள்ளும் புதுமொழியை கவிதைப் புத்தகங்களில் அடிக்கோடிட்டு உருவாக்கியிருப்பார்கள். மறுப்பும் வெறுப்பும் கூடக் கூட தன் காதல் விவகாரம் தங்கைகளின் வாழ்க்கைக்கு வினையாகி விடக்கூடாது என்பதற்காக சற்று இடைவெளிவிட்டு வலிகளுடன் காத்திருப்பாள் பார்வதி என்கிற காஞ்சனா. எத்தனை விதமான பார்வைகள், முக அசைவுகள், உதடு சுழிப்புகள், வெக்கங்கள், கோபங்கள், அமைதிகள், அழுகைகள் என காதலின் உன்மத்தங்களை அதீதமாகக் காட்டி காஞ்சனையாக வாழ்ந்திருக்கும் பார்வதிக்காக மொய்தீனும் காத்திருப்பான். மழையில் காதலித்த அவர்கள் பல போராட்டங்கள் தாண்டி ஒன்று சேரும்போது அந்த மழைதான் அவர்கள் பிரியக் காரணமாகியிருக்கும்.
படத்தின் முடிவு...
* "காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை"
இல்லை! காஞ்சனமாலைக்கு மொய்தீன் கிடைத்தான். எங்கும் போகாமல் இன்னும் கிடைத்துக் கொண்டே இருக்கிறான்.
* "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி" ஆம்! காஞ்சனை அங்கே காத்திருந்த காலங்களில் மொய்தீனின் பூவிழி எப்படி நோகாமல் இருந்திருக்கும்... இருந்தாலும் இருவரும் பூத்துக்கொண்டுதான் இருந்தார்கள்... இன்றும் இருக்கிறார்கள்.
* "காத்திருந்து கதை பேசும்
காலமும் முடியல
சேர்ந்திருந்து பிறை பாக்க
ராத்திரி விடியல"
ஆம்! அவர்கள் சேராமல் போயிருந்தாலும் ஒவ்வொரு பிறை வரும்போதும் எங்காவது காதல் கதை பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான அந்த இரவு, விடியாமலே நீண்டு நீண்டு அவர்களை இன்னும் காதலித்து கொண்டுதான் இருக்கும்.
Mano Red / 6.11.17

டோழி! - Mano Red


-
"கண்ணியம் காக்கலாம் வா டோழி!" என்ற டிஜிட்டல் போர்டை நெற்றியில் ஒட்டியபடி APU ரோபோக்கள் வீதியில் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. ஏற்கெனவே பல போராட்டங்கள் கண்டு ஏமாந்துபோனதால், எதையும் கண்டுகொள்ளாத பெண் ரோபோக்கள் தங்கள் பேட்டரிகளை சார்ஜ் செய்ய சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தன.
அந்த நேரம் பார்த்து பூக்கூடையில் எலெக்ட்ரானிக் பொருள்களை நிரப்பி, கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தது ஒரு பெண் ரோபோ. ஆதரவு தர ஒரு பெண் ரோபோவாவது வருகிறதே என நினைத்த APUக்கள் Despasito பாடலுக்கு உற்சாக நடனமாடத் தொடங்கின. இந்தக் கோமாளிக் கூட்டத்தை மைக்ரோ அளவுகூட மதிக்காமல்,
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும்" கொண்ட அந்தப் புதுமைப் பெண் ரோபோ வேகமாகக் கடக்க ஆரம்பித்தது. அப்போது, ஒரு APU ரோபோ "டோழி! உங்களது உதட்டு மச்சமும் சிறுத்த மெட்டல் பாடியும் என் தண்டுவடத்தைச் சுண்டி இழுக்கிறது" என்று கத்தியது.
APUரோபோக்களின் சிறுமை கண்டு பொங்கி அந்தப் பெண் ரோபோ லேசர் டுப்பாக்கி எடுத்தபோது, "கண்ணியம் காக்கலாம் வா டோழி!" என்கிற Elite வாசகம் APUரோபோக்களின் நெற்றியில் மின்னி மறைந்தது.
Mano Red / 11.11.17

06 November 2017

பாடல் கேட்பது / கவனிப்பது - Mano Red

1. பாட்டு கேட்பது / Hearing song
எல்லாருக்கும் பாட்டு கேக்க புடிக்கும். பஸ்ல போகும்போது, நடக்கும்போது earphone/headset மாட்டிக்கிட்டு வேடிக்கை பாத்துகிட்டே வெளிய இருக்கிற இரைச்சலும் ஹார்ன் சத்தமும் கேக்காம இருக்க பஞ்சுக்கு பதிலா நீங்க ஹெட்செட் மாட்டியிருப்பீங்க. அவ்ளோதான். அதுல வெறும் சத்தம் மட்டும்தான் கேட்குமே தவிர இசையையும் வரியையும் ஒரு சொட்டுக் கூட நீங்க கவனிச்சிருக்க மாட்டிங்க. அது உங்களுக்கு தேவையும் இல்ல.
-
2. பாட்டு கவனிப்பது / Listening song
இது ஒரு தவம்; மோனநிலை; வேறு உலகத்துக்கு பயணிப்பது; மெய்மறந்து எதற்குள்ளாகவோ தொலைவது; பஸ்ல போகும்போது எந்த ஸ்டாப்ல இருக்கோம்னு கூட தெரியாம முழுக்க முழுக்க பாட்டுக்குள்ள மூழ்கிக் கிடப்பது.
#ஒருக்கா_கேட்பது : பாட்ட உள்வாங்கணும். அது சோகமா, கொண்டாட்டமா, காதலா, தத்துவமா எதுவோ அதுவா நாம மாறிடணும். கூடவே பயணிக்கணும்.
#மறுக்கா_கேட்பது : அந்தப் பாட்டு படத்துல எதுக்காக வருது, அந்தக் காட்சிகள் நினைவிருந்தால் அத மனசுக்குள்ள ஓட விடணும். வார்த்தைகள நல்லா கவனிச்சா காட்சிகள் விளங்க ஆரம்பிக்கும்.
#மறுக்கா_மறுக்கா_கேட்பது: இது இசைக்கான தருணம். என்னென்ன இசைக் கருவி இருக்குனு ஓரளவுக்கு கண்டுபிடிக்கலாம். பல்லவி முடிஞ்சு சரணம் ஆரம்பிக்கும் முன்னாடி ஒரு இசை இடைவெளி இருக்கும். அத வச்சே அடுத்த சரணம் நமக்கு பிடிபட ஆரம்பிக்கும். வீடோ, பஸ்ஸோ எங்க இருந்தாலும் தன்னால தாளம் போட ஆரம்பிச்சுருவோம். இசையில் குறைகள் கண்டுபிடிக்குமளவுக்கு முன்னேறுவதெல்லாம் போதி தர்மர் லெவல்.
அதன்பிறகு,
இசையமைப்பாளர் யாரு, பாடுனது யாரு, பாடலாசிரியர் யாரு? இதெல்லாம் பாத்து அவங்களோட வேற பாடல்களை எல்லாம் தொடர்ந்து கேட்க, inception போல கனவுக்குள்... கனவுக்குள்... கனவுக்குள்... கனவு ஒன்றை காண ஆரம்பித்து ஒரு உலகத்தில் தொடங்கி, வேறு உலகத்தில் உலா வந்து, இன்னொரு உலகத்தில் இருந்து வெளியேறுவோம். இதெல்லாம் தானாக அமையாது. எப்போதாவது ஒரு பாடலையாவது இப்படி அமைத்து பாடலைக் கேட்காமல் கவனித்துப் பாருங்கள். சொர்க்கம், நரகம் இரண்டில் சொர்க்கம் இங்கேயே நிச்சயம்.😍
Mano Red / 5.11.17

23 October 2017

ஞாயிறு உளறல் 12 - Mano Red


அது ஒரு மங்கலான மாலைப்பொழுது. அதாவது வெயில் மறைந்தும் மறையாமலும், இருள் வந்தும் வராமலும் இருக்கிற ஆஃபாயில்தனமான நேரம். பெண் ஒருத்தி (வயது முக்கியமில்லை) மெடிக்கல் ஷாப்க்கு வந்திருந்தாள். அந்தக் கடைக்கு அவர் வாடிக்கையாளர் என்பது இருவரது பார்வையிலும் தெரிந்தது. அதனால்தான் வரிசை நாகரிகம் தெரியாமல் முன்னால் காத்திருப்பவர்கள் பற்றிய கவலையின்றி வந்தவுடன் அவரும் கேட்க, கேட்ட உடன் மருந்துக் கடைக்காரரும் எடுத்துக் கொடுக்க அருகில் யாரோ பல் கடிக்கும் சத்தம் கேட்டது. (இதுவே குழாயடியாகவோ, ரேஷன் கடையாகவோ இருந்திருந்தால் நடக்கிற கதையே வேறு)
காய்ச்சல் என நினைக்கிறேன். இருமிக் கொண்டும், மூக்கை உறிஞ்சி ஒரு விரலால் மூக்கை இழுவியபடியும் மருந்து கேட்டாள். மருந்துக் கடைக்காரனும் ரொம்ப வேகமாக மாத்திரையை வெட்டி எடுத்து கவரில் போட்டு கொடுத்தான். இதற்கிடையில் அவள் தன்னுடைய எடையை மிஷினில் சரிபார்த்துக் கொண்டாள். அவளை அனுப்பி விடுவதில் ரொம்ப வேகமாக கடைக்காரன் செயல்பட்டது அனிச்சையாக இருந்தது.
போன வேகத்தில் திரும்பி வந்த அவள் "என்ன மாத்திரை இது? புதுசா எதயோ கொடுத்து என்னையக் கொல்ல பாக்குறீங்களா?" என்று ஏளனத்துடன் கத்த, மாத்திரைகளை வாங்கிப் பார்த்த கடைக்காரருக்கு என் ஞாபகம் வந்தது.
"இவ்வளவு நேரம் இவன் ஏன் அங்க சும்மா நிக்கிறான்" னு உங்களுக்கு சந்தேகம் வந்திருக்குமே? எனக்கும் வந்துச்சு. நான் கேட்ட மாத்திரைகளை தேடிக் கொண்டிருந்த இடைவெளியில் அவள் வந்ததால் என்னை ஓரம்கட்டிவிட்டார்கள். நானும் பெருந்தன்மையாக விலகிக் கொண்டேன். நடுவில் பல்லைக் கடித்த சத்தம் கேட்டிருக்குமே அது நான்தான். எனக்கான மாத்திரைகளைத்தான் அவளிடம் கொடுத்துவிட்டு திட்டு வாங்கினார். இப்போது சரியான மாத்திரைகளைக் கொடுத்து அவளை அனுப்பிவிட்டு சோகமே உருவாக எனக்கு மாத்திரைகள் கொடுத்தார்.
"யோவ்... மளிகைக் கடைக்காரன் பொறுப்பில்லாம இருக்கலாம் ஆனா மருந்துக் கடைக்காரன் பொறுப்பில்லாம இருக்கலாமா? ஏன்னா உயிர் ஒண்ணும் --- இல்ல"😎 (பெரிய Punchஆ இருக்கோ?)
Mano Red / 22.10.17

சாட்டர்டே நைட் - Mano Red


கேமராக் கண்கள் பொருத்தப்பட்ட அந்த 253 வயது இளம் ஜோடியை ஹைபிரிட் கிளப்பின் 15அடி வாட்ச்மேன் உள்ளே அனுமதிக்கவில்லை. ‘இன்று மூக்கில் பச்சை ரத்தம் ஒழுகுபவர்களுக்கு மட்டுமே அனுமதி’ என்ற டிஜிட்டல் போர்டு வாசலில் வைக்கப்பட்டு இருந்தது. (ஒவ்வொரு நாளும் மூக்கில் இருந்து ஒவ்வொரு கலரில் ரத்தம் ஒழுகும் என்பது எக்ஸ்ட்ரா தகவல்).
எப்படியாவது உள்ளே நுழைந்து சாட்டர்டை இரவைக் கொண்டாடத் துடித்த அந்த ஜோடி கிளப்பின் கொல்லைப் புறத்தில் நெடிதுயர்ந்து வளர்ந்து படர்ந்திருந்த பிளாஸ்டிக் அரச மரத்தின் மறைவில் நின்றபடி யோசித்தது. ஒரு யுகமாக அழியாமல் இருந்த பிளாஸ்டிக் போதி மரத்தின் போதை தலைக்கேறியதும் அவர்களின் மெடுலா ஆப்லகேட்டாவில் ஐடியா பிறந்தது. அவளின் முதுகெலும்பைக் கீறினால் வரும் நீல ரத்தத்தையும், அவனின் சிறுநீரகத்தைக் கீறினால் வரும் மஞ்சள் ரத்தத்தையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டால் இருவரது மூக்கிலும் பச்சை ரத்தம் ஒழுகும் என்பது உறுதியான பிறகு துள்ளிக் குதித்து முத்தமிட்டுக் கொண்டனர்.
முத்தமிட்டார்கள் என்ற பெயரில் மாறி மாறி உயிரை உறிஞ்சியதால் பசி அவர்களின் வயிற்றைக் கிள்ளியது. முன்னேற்பாடாக தூக்குவாளியில் கொண்டு வந்திருந்த புளியோதரையையும், பச்சை வெங்காயத்தையும் கடித்து இரவு டின்னரை முடித்தனர். ஆடைகளைச் சரி செய்து ஃபுல் மேக்கப்புடன் 15அடி வாட்ச்மேன் முன் பச்சை ரத்தம் ஒழுக ஒழுக நின்றபோது அந்த ஜோடியை ஏற, இறங்கப் பார்த்தார் வாட்ச்மேன். ’உள்ளே போகலாம்’ என்பதற்கான சிலிக்கான் சில்லு ஐடி ஒன்றைக் கையில் பொருத்திவிட்டு அந்த ஜோடியிடம் வாட்ச்மேன் கேட்டார் ‘உங்களுக்கும் சொந்த ஊர் தூத்துக்குடியா?’
Mano Red /21.10.17

20 October 2017

பரோட்டா சாப்பிடுதல்


-
(விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் பரோட்டாசாப்பிடும் முறையை மறந்துவிட்டு படிக்கவும்.)
2 அல்லது 3 பரோட்டாக்களையும் ஒரேயொரு ஹாஃபாயிலையும் ஆர்டர் செய்யவும். பரோட்டாக்களை நொறுங்கப் பிய்த்துவிடாமல் செம்பருத்தி இலை அளவுக்கு சிறிது சிறிதாகப் பிய்த்துக்கொள்ளவும். அதை நன்கு கிளறிவிட்டு குளிரக் குளிர சால்னாவை ஊற்றவும். சூரியன் பார்த்ததும் வெக்கத்தில் மறையும் பனித்துளி போல கொஞ்ச நேரத்தில் முதலில் ஊற்றிய சால்னா ஊறியிருக்கும். இப்போது இன்னும் கொஞ்சம் சால்னாவை ஊற்றவும். சொத சொதவெனபரோட்டா அமுதமாக மாறிக் கொண்டிருக்கும்வேளையில் ஹாஃபாயில் வந்திருக்கும். சாப்பிடத் தயாராகலாம். கொஞ்சம் பரோட்டாவையும் ஹாஃபாயிலின் ஓரத்து வெள்ளைக் கருவையும் சேர்ந்தாற்போல எடுத்து உடனே விழுங்காமல் சுவைத்துச் சாப்பிடவும். பரோட்டாவும் முட்டையும் மாறி மாறிக் குறைந்துகொண்டே வர ஒரு வாய் பரோட்டாவை இலையில் கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டு ஹாஃபாயிலின் மஞ்சள் கருவை உடையாமல் விழுங்க வேண்டும். மஞ்சள் கரு தொண்டைக்குள் மறைவதற்குள் மிச்சமிருக்கும் பரோட்டவையும் சாப்பிட்டு விட வேண்டும். மேலும் சுவைக்கு இலையை நக்கிச் சாப்பிடவும். ஏதோ பாற்கடல் அமுதம்னு ஒரு ஐட்டம் இருக்கே அதெல்லாம் இதுக்குப் பக்கத்துல நிக்க முடியாது.

கண்ணதாசன் 90வது பிறந்தநாள் விழா Mano Red


-
#கர்ணன் படப் பாடல் என்றதும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப் பாடுவார்கள் என எதிர்பார்த்தபோது 'என்னுயிர் தோழி கேளொரு சேதி' பாடலைப் பாடினார்கள்.
#சிவாஜி படப் பாடல் வரும்போதெல்லாம் சிவாஜியின் 70 வயது ரசிகர்கள் அதகளம் செய்துவிட்டார்கள்.
* உள்ளம் என்பது ஆமை பாடல் வரும்போது 'சோகப் பாட்டெல்லாம் பாடாதீங்க' என்று அங்கங்கே சில குரல்கள்.
* பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடலுக்கு ஆஹா ஓஹோ அதிகம்.
* கவியரசர் பற்றிய நிறைய தகவல்களை ஒய்ஜி. மகேந்திரன் இடையிடையே சொன்னது கலகலப்பாக இருந்தது.
* இப்போதைய கவிஞர்களைக் கலாய்க்கவும் ஒய்ஜி தவறவில்லை.
* மற்ற கவிஞர்கள் உற்சவர்கள் என்றால் கண்ணதாசன்தான் மூலவர் என்று ஒய்ஜி சொன்னதும் கைதட்டல்கள் அடங்கவே இல்லை.
* இருவருக்கும் பிறந்தநாள் என்பதால் கண்ணதாசன் எழுதி#விஸ்வநாதன் பாடிய பாடல்களையும் பாடினார்கள்.
* கண்ணா கருமை நிறக் கண்ணா பாடலை பாடகி #சைந்தவிஉருக்கமாகப் பாடினார்.
* அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பாடச் சொல்லி தாத்தா ஒருவர் எழுந்து நின்று கத்தினார்.
* ஒருவழியாக உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் பாடிவிட்டார்கள்.
* சிறப்பு விருந்தினரான இளையராஜாவுக்கு பிடித்த பாடலென மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாடலைப் பாடி #கல்பனாஅசத்தினார்.
* கண்ணதாசனின் விசிட்டிங் கார்டு என்று 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு' பாடலைப் பாடிக்கொண்டிருக்கும்போது#இளையராஜா வந்துவிட்டார்.
* எல்லாப் பாடல்களும் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்களாக இருந்ததால் அதிகமான பின்னணி குரல் முனுமுனுப்புகளும் இருந்தன. 

'பிக் பாஸ்' வீடும், நம் தமிழகமும்! - Mano Red

'இரண்டாம் தர மக்களால் முதல் தரமான நாட்டை அமைக்க முடியாது' என்ற வார்த்தைகளை, எங்கோ படித்த ஞாபகம். நாட்டின் சூழலுக்கு சரியாக பொருந்தும் இந்தப் பொன்மொழியை எங்கு படித்தது, யார் சொன்னது என்பது சரியாக நினைவில் இல்லை. இப்போதைக்கு நமக்கு இரண்டு அரசியல் பிரச்னைகள்... ஒன்று, விஜய், 'டிவி'யில் வரும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இடம்பெறும் வீட்டு அரசியல், இன்னொன்று, நம் தமிழக அரசியல். இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால், கவுண்டமணி சொல்வது போல, 'அது மாம்பழம்; இது வாழப்பழம்; ஆனா, பிரச்னை எல்லாம் ஒண்ணு தான்!' துரோகம், புறம் பேசுவது, தந்திரம், சூது, வஞ்சம், பழிக்குப்பழி, அணி மாறுவது, கூட்டு சேர்வது என, இரண்டுக்கும் பொதுவான காரணங்கள் பல உண்டு.

'டீ கடை அரசியல்' என்ற ஒரு களம் உண்டு. அரசியல் நிலவரங்கள் அனைத்தையும் சூடாக விவாதிக்கும் அந்தக் களத்திலும், 'பிக் பாஸ்' அரசியல் தான் களமாடுகிறது என்றால், இதன் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

என்ன செய்தால், மக்கள், 'ட்ரிக்கர்' ஆவர் என்பதை நம்மை வைத்து அரசியல் செய்யும் தந்திரவாதிகள் புரிந்து வைத்துள்ளனர். இந்த அரசியல்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நடுவில், ஆட்டுவிக்கும் பொம்மையாக நாம் நிற்கிறோம் என்பதைப் புரிய வைக்க என்ன, 'டாஸ்க்' கொடுப்பது என்று தெரியவில்லை.
சில ஒப்பீடுகளைப் பார்க்கலாம்...

பிக் பாஸ் வீடு: சண்டையிட்டு விலகி சென்ற உறவுகள் மீண்டும் அன்பைத் தேடி, பழைய உறவைப் புதுப்பிக்க வருகின்றன. அதைக் காணும் நாம், 'பொய்யாக நடிக்காதே...' என, 'டிவி'க்கு வெளியே இருந்து கூக்குரல் எழுப்புகிறோம்.

தமிழகம்: கட்சி பிரிவு, இணைப்புக்காக சமாதானம், மீண்டும் அதே கட்சியில் ஐக்கியம் என்பன போன்ற பொய்யான உறவு, அரசியலின் போலி கூத்துகளை தொடர்ந்து பார்த்தும், நமக்குச் சம்பந்தம் இல்லாதது போல் சிரித்துக் கடக்கிறோம்.

பிக் பாஸ் வீடு:வந்த சில நாட்களிலேயே வீட்டின் ஆட்சியைக் கைப்பற்றும், 'திடீர் தலைவர்' மீது, சக குடும்ப உறுப்பினர்களுக்கு இல்லாத கோபம், நிகழ்ச்சி பார்க்கும் நமக்கு வருவதால் ஆத்திரம் கொள்கிறோம்.

தமிழகம்: வாரத்திற்கு ஒரு தலைவர், மாதத்திற்கு ஒரு முதல்வர் என, ஒரே ஒரு ஓட்டுப் போட்டு விட்டு, பல, 'திடீர்' முதல்வர்களைப் பார்த்தும், கோபம் கொள்ளவும், கேள்விகள் கேட்கவும் மறுக்கிறோம்.

பிக் பாஸ் வீடு: வீட்டிற்கு தகுதி இல்லாத ஒருவரை சரியாகத் தேர்ந்தெடுத்து வெளியேற்றுகிறோம்; நம் மக்களின் ஓட்டு, சரியாக செல்லுபடியானது இந்த நிகழ்ச்சியில் மட்டுமே!

தமிழகம்: நிஜத்திலோ, ஒரு முறை ஓட்டளித்து பல முறை ஏமாறுகிறோம். நம்மை ஏமாற்றியவர்களுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கிறோம். மறுபடியும் ஏமாறும் போது எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கப் பழகுகிறோம்.

பிக் பாஸ் வீடு:: போலியாக நடிப்பவரை கழுவி ஊற்றி விட்டு, கோபம், மன்னிப்பு, சந்தோஷம் என, எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்கும் நபரை தலையில் துாக்கி வைத்து, தலைவியாகக் கொண்டாடுகிறோம்.

தமிழகம்: மனசாட்சிக்கு நேர் எதிராக அத்தனை அரசியல்வாதிகளும் பொய்யாக நடிக்கின்றனர் என தெரிந்தும், கழுவி ஊற்றாமல், அமைதி காக்கிறோம். அதே சிம்மாசனத்தை மறுபடி வழங்குகிறோம்.

பிக் பாஸ் வீடு: வீட்டுக்குள் ஒருவருக்கு இன்னொருவர் செய்யும் துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆதங்கப்படுகிறோம்.

தமிழகம்: கவுன்சிலர், எம்.எல்.ஏ., முதல்வர் வரை அத்தனை பேரும் நமக்குத் துரோகம் இழைக்கும் போது, மிகவும் இயல்பாக இருக்கிறோம். இன்னும் பல ஒப்பீடுகளை இதனுடன் சேர்த்துச் சொல்லலாம். ஆனால், ஒப்பீடுகளால் எந்த எதிர் விளைவும் ஏற்படப் போவதில்லை. இயக்கு சக்திகளின் நிழலான நிகழ்ச்சியில் நடக்கும் அபத்தங்களையும், அநியாயங்களையும் கண்டு பொங்குவோமே தவிர, நிஜத்தைக் கண்டு பொங்க மாட்டோம்.

குழந்தைகளையும், சிறுவர்களையும் உடன் வைத்து பார்க்கும் நாம், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்... பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அத்தனை பேரும், நம் ஒவ்வொருவரையும் பிரதிபலிக்கும் பிம்பங்களே தவிர தனிப்பிறவி அல்ல. அவர்கள் செய்யும் தவறுகளைக் காட்டிலும் நாம் அதிகம் செய்கிறோம். நம்மைச் சுற்றி கேமராக்கள் இல்லை. நம் செயல்கள் யாவும் படம் பிடிக்கப்பட்டு யாருக்கும் காட்சிப்படுத்தப் போவதில்லை என்பதற்காக நாம் புனிதர்கள் ஆகி விட முடியாது.

அந்த நிகழ்ச்சி, நம் கலாசாரத்தைச் சீரழிக்கிறதா... சமூகப் பிரச்னைகளில் இருந்து நம்மைத் திசை திருப்புகிறதா... முதுகுக்குப் பின்னால் நடக்கும் அநீதிகளை மறைக்க கண் முன் மாயத் திரையிடுகிறதா... என்ற கேள்விகள் நம்மைச் சுற்றி எழுந்தாலும், தொலைக்காட்சியை விட்டு எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. இதனால், மாநிலத்தின் வளர்ச்சி கூடியதோ இல்லையோ, தொலைக்காட்சியின், டி.ஆர்.பி., எனப்படும், தொலைக்காட்சியை பார்ப்பவர் எண்ணிக்கை வளர்ச்சி கூடியுள்ளது. பல பிரபலங்கள், பல கேமராக்கள், ஒரே வீட்டில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது என்ற காரணத்துக்காக, நிகழ்ச்சியை மெய் மறந்து ரசிக்கிற அதே சமயம், பல அரசியல் பிரபலங்கள், கேமராக்களின் முன் நடித்து விட்டு, ஓடியும், ஒளிந்தும் கொண்டிருக்கின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ உரிமைகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், மீண்டும் மீண்டும், முதுகில் குத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்.நமக்கான உரிமைகளை தற்காத்து கொள்ள தயாராக இல்லாமல், இன்னொருவர் ஆட்டுவிக்கும் கைப்பாவையாக இருக்கிறோம்.

'எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை அறிந்தவர்களுக்கு ஆசிரியர்கள் தேவையில்லை' என, சொன்ன மஹாத்மாவின் வார்த்தைகளை மனதிற்குள் வாங்கி, சரியாகச் சிந்தித்துச் செயல்படும் நேரமிது.


பிக் பாஸ் வீட்டைப் பார்க்க வேண்டாமென்று சொல்லவில்லை... அதே பார்வையுடன், தமிழகத்தையும் கொஞ்சம் பார்த்தால் நன்றாக இருக்கும்.

தினமலர் / 11.9.17
http://www.dinamalar.com/news_detail.asp?id=1853111

போதைக்கு எதிராகவும் போராட வேண்டும்! Mano Red

சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு கடத்த முயன்ற 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.
செங்குன்றத்தில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; உரிமையாளர் உட்பட, 10 பேர் கைது.
தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருட்கள் விற்ற, 46 பேர் சென்னையில் கைது.

இந்தச் செய்திகள் அனைத்தும், வார, நாளிதழ்களில் வந்தவை. போதைப் பொருள் பற்றிய இத்தகைய செய்திகளைப் படிக்கும் போது தனி மனிதனின் உடல், ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாக மட்டும் கருதி, சாதாரணமாக நம்மால் கடந்துவிட முடியாது. அடுத்த தலைமுறையினரான மாணவர்களின் பிரச்னையாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பப் பிரச்னையாகவும் பார்த்தால், இதனுடைய விபரீதம் புரியும்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்காகப் பழகி, போதைப் பழக்கத்தில் இருந்து இன்று வரை மீளமுடியாமல் வருத்தப்படும் நண்பர்களை எனக்குத் தெரியும். பழக்கத்தை விட முயற்சித்துத் தோற்றுப் போனவர்களும், ஏதாவது ஒரு பழக்கத்தை விடுவதற்கு இன்னொரு பழக்கத்திற்கு அடிமையானவர்களும், மன உளைச்சல், உடல் வலி இவற்றை மறக்கப் பயன்படுத்துபவர்களும், இந்தப் பட்டியலில் அதிகமாகி இருக்கின்றனர்.

போதைக்கு அடிமையாகும் நபர், சிறிது சிறிதாக அடிமையாகத் துவங்கி, அந்தப் பழக்கத்தை அதிகரித்துச் செல்வதும், அடிக்கடி போதை வேண்டுமென்று கேட்பதும், போதைக்கான தேவைக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவதுமாக நாளடைவில் மாறி விடுகின்றனர். மனதளவில் தன்னம்பிக்கை இழப்பதுடன், விரக்தி அடைந்து, தனிமையையும் அதிகம் விரும்ப ஆரம்பிக்கின்றனர்.

தெருவுக்குத் தெரு மதுக்கடைகளும், பள்ளிக்கூடம் அருகே போதைப் பொருள் விற்பனை நடப்பதும் இவற்றை எளிமையாகவும், பரவலாகக் கிடைக்கவும் காரணமாக இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணிகளாக, போதை மருந்தை விற்பனை செய்யும் கும்பலும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளும், போதை மருந்து கொண்டு செல்லும் வாகனங்களைப் பிடித்தால் லஞ்சம் வாங்கி, விடுவிக்கும் காவல்துறையினரும் இருக்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக ஹெராயினும், ஆப்ரிக்க நாடுகளிலிருந்து கோகைனும், இந்தியாவின் நக்ஸல் பகுதிகளில் இருந்து கஞ்சாவும் கடத்தி வரப்படுகின்றன. புகையிலை, சிகரெட், பீடி, மாவா, மூக்குப்பொடி, ஆல்கஹால், கோகைன், ஹெராயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என, பல வகையில் மக்களை போதை அடிமைப்படுத்தி வருகிறது. இந்தியாவில், 15 வயதுக்கு மேல் உள்ளவர்களில், 30 சதவீதம் பேர் - கிட்டத்தட்ட, 25 கோடி பேர் - ஏதோ ஒருவகையில் போதை உபயோகிக்கின்றனர் என்பது அதிர்ச்சியான தகவல்.
ஜனவரியில், டில்லியில் ஒரு நிகழ்வு. இளைஞர் ஒருவர் சந்தையில் கிடைக்கும் அனைத்து விதமான போதைப் பொருட்களையும் பயன்படுத்தி திருப்தி ஆகாமல், பாம்பு விஷத்தைப் போதையாகப் பயன்படுத்தி இருக்கிறார். நாளடைவில் பழக்கம் தீவிரமாகி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவரைப் பரிசோதிக்கும் போது அவரின் எச்சில் கூட நஞ்சாக மாறியிருந்தது. 'பாம்பு விஷம் என்னை, 24 முதல், 30 மணி நேரம் வரை போதையிலேயே வைத்திருந்தது' என்று அவர் மருத்துவர்களிடம் கூறியதிலும், சமூகத்திற்கான விஷயம் இருந்தது.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் கொட்டு வைக்கும் விதமாக இன்னொரு நிகழ்வைப் பார்க்கலாம். கர்நாடக மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் சார்பாக, பெங்களூரில் பள்ளி மாணவர்கள் முதல்வர் சித்தராமையாவுடன் உரையாடும் நிகழ்ச்சி, 2017 ஜூன் முதல் வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிகழ்வில், 8ம் வகுப்பு மாணவர் ஒருவர், 'எனது பள்ளிக்கு அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

போதைப் பொருட்கள் விற்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக முதல்வர் உத்தரவிட்டதால் பெங்களூரு மாநகர காவல் துறையினர் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்தனர்; பள்ளிக்கு அருகே போதைப் பொருட்கள் விற்ற, நான்கு பேரை கைது செய்தனர். சித்தராமையாவின் இந்த அதிரடி நடவடிக்கை, எல்லாரிடமும் பெரும் வரவேற்பையும் பெற்றது.

உலக நாடுகள் அனைத்தும் போதைப் பொருட்கள் பரவலுக்கு எதிராக, கடுமையான சட்டம் கொண்டு வந்தாலும், விற்பதும், கடத்துவதும் இன்றும் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. இதற்கு எதிராக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த, 2016 ஜூன் மாதம், உட்தா பஞ்சாப் என்கிற படம் ஹிந்தியில் வெளியானது. 'உட்தா பஞ்சாப்' என்றால், 'பறக்கும் பஞ்சாப்' - போதையில் மிதக்கும் பஞ்சாப் - என்று அர்த்தம். போதை மருந்துக்கு அடிமையான சமூகத்துக்கு எதிரான செய்தியைத் துணிச்சலாகப் பதிவு செய்தது.

பஞ்சாப் இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கிச் சீரழிவதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் விளக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளும் சொல்லப்பட்டிருந்தன. அந்தப் படம் சொன்னதற்கு மேலாகவே இன்றைய சமூகமும் இருக்கிறது.

மதுவுக்கு எதிராகப் போராடும் மக்கள் பான் மசாலா, புகையிலை போன்ற போதை பொருளுக்கு எதிராகவும் போராட, வீதிக்கு வர வேண்டிய நேரமிது. நாட்டு மக்களின் நலன் கருதி போதைப் பொருட்கள்
மீதான துரித நடவடிக்கையை எடுக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.


போதைக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், போதையிலிருந்து மீள வேண்டுமென்று அடிமையானவர்கள் தங்களுக்குள்ளே போராட வேண்டும். அதுவரை அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்பது கடினமே.

தினமலர்/4.7.17

நான் 12வது ஃபெயிலுங்க... Mano Red


-
‘12ம் வகுப்பு ஃபெயில்’ என என்னுடைய தேர்வு முடிவு வந்த சமயம் எங்கள் ஊரில் திருவிழா. ஊர் முழுக்க சொந்த பந்தங்கள். கெடாக்கறி விருந்துடன் அத்தனை பேரையும் சமாளிக்கும் தைரியம் எனக்கு இருந்ததால் அன்றைய பொழுதைச் சமாளித்தேன். எல்லாம் முடிந்து, 12ம் வகுப்பு முடிவை ஓரம்கட்டிவிட்டு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து டிப்ளமோ சேர்ந்து, அதன்பிறகு பொறியியல் படிப்பையும் (கணக்கில் Arrears வைத்து) முடித்தேன். இருந்தாலும், 12ம் வகுப்பில் தேறாத பாடங்களை எழுத விருப்பமில்லை. (வரலாறு பேசட்டுமென இன்னும் எழுதாமலே வைத்திருக்கிறேன்.) காரணம் கணக்குப் பாடம்.
(நான் ஃபெயில் ஆன கதை பெரிது என்பதால் கீழே இருக்கும் என் வரலாற்றை, ‘#பராசக்தி’ சிவாஜி Modulationல் படித்தால் சுவாரசியமாக இருக்கலாம்)
தேர்வுகள் விசித்திரம் நிறைந்த பல முடிவுகளைச் சந்தித்திருகின்றது
புதுமையான பல மாணவர்களையும் கண்டிருக்கிறது
ஆனால் என்னுடைய ரிசல்ட் விசித்திரமும் அல்ல
தேர்வெழுதிய நானும் புதுமையான மனிதன் அல்ல
தேர்வுக் களத்திலே சர்வ சாதாரணமாக தென்படும் மாணவன் நான்
பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் படிக்கவில்லை
விடுமுறை எடுத்து வகுப்புகளில் இருக்கவில்லை
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்
நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று
இல்லை... நிச்சயமாக இல்லை.
பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் படிக்கவில்லை
படிப்பு வேண்டாமென்பதற்காக அல்ல
கணிதப் பாடம் பிடிக்கவில்லை என்பதற்காக
வகுப்புகளில் இருந்தேன்
நான் மாணவன் என்பதற்காக அல்ல
படிக்க அனுப்பிய பெற்றோர் மனம்
புண்படக்கூடாது என்பதற்காக
'எனக்கேன் இவ்வளவு அக்கறை
வேறு யாருக்கும் இல்லாத அக்கறை'
என்று கேட்பீர்கள்
நானே பாதிக்கப்பட்டேன்
நேரடியாக பாதிக்கப்பட்டேன்
சுயநலம் என்பீர்கள்
என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது
பரீட்சையில் முன்னால் இருப்பவன் பிட் அடிக்கும்போது அவன் பேப்பரை புடுங்கி எழுதி அவனையும் காட்டிக் கொடுக்காமல் இருவரும் ஃபெயில் ஆவார்களே அவர்களைப்போல.
என்னையும் தோற்றவன் என்கிறீர்களே
இந்தத் தோற்றவனின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால்
அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்.
பாட்டொலிக்கும் ரேடியோக்கள் இல்லை என் ஹாஸ்டலில்
மிரட்டும் வார்டன்கள் இருந்திருக்கிறார்கள்
டியூசன் சென்றதில்லை நான்
பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்கச் சென்றிருக்கிறேன்
கேளுங்கள் என் கதையை
மதிப்பெண்களை பகிர்வதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்
தமிழ்நாட்டிலே இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான்
பிறக்க ஒரு ஊரு
படிக்க ஒரு ஊரு
கஷ்டமான படிப்பெனச் சொல்லப்படும் குற்றவாளி கணக்கு
உங்கள் முன்னால் நிற்கிறதே இதோ இந்தப் புத்தகம்தான்
இதன் கடின வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்
கணிதப் பிரிவில் சேர்ந்தேன்
புரியாமல் திரிந்தேன்
மெலிந்தேன்
கடைசியில் பைத்தியமாக மாறினேன்
மேல்நிலைப் பள்ளியை விட்டே ஓட நினைத்தேன்
ஆம்!
படிப்பு துறந்தவனாக.
புத்தகத்தின் பெயரோ கணிதம்
வாழைப்பழம் போல எளிமையான பெயர்
ஆனால் பாடத்திலோ எளிமை இல்லை
இருந்த படிப்பும் சீரழிந்து விட்டது
கையிலே கணிதம்
கண்ணிலே நீர்
கணக்கு துரத்தியது
கணக்கை நான் துரத்தினேன்
கணக்குக்காக கருணை காட்டினார்கள் பலர்
அவர்களிலே டாப்பர்ஸ் சிலர் எனக்காகச் சொல்லிக்கொடுத்தார்கள்
கொடூரமான வாத்தியார்களால் என் கணக்கு தள்ளிப்போனது
நான் நினைத்திருந்தால் அப்போதே கற்றுக்கொண்டிருப்பேன்
கடவுள் பக்தர்களும் கணக்கைக் காப்பாற்ற வந்தார்கள்
உபகாரமாக கோவில் சுவற்றில் தேர்வு எண்ணை எழுதச் சொல்லி.
ராமானுஜனின் பெயரால்
உலகப் புகழ் ஐன்ஸ்டீனின் அருளால்
கணித உலகத்தில் புழுவாக துடித்தபடி நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்
புரியாத பாடத்தை எடுக்கத் தூண்டியது இதோ இந்த இன்ஜினியர் சமூகம்தான்
விருப்பமானவர்களின் மீதிருக்கும் பாசத்தில் விந்தையில்லை
நம் மகன் விவசாயம் பார்க்கட்டுமென தந்தையும் விரும்பவில்லை.
உலக பணக்காரர் பில்கேட்ஸ்
டாலர் புண்ணியவான்
சில்வர்ஸ்பூன் சீலர்
அவரே பள்ளியில் படிக்கப் பிடிக்காமல் வெளியே வந்திருக்கிறார்
படிக்க கஷ்டமாக இருப்பதைச் சகிக்காமல்.
அதே முறையைத்தான் நானும் கையாள நினைத்தேன்
கையாளாகாத என்னால் அது முடியவில்லை
இது எப்படி குற்றமாகும்
ஃபெயிலான ஒரு தமிழனுக்கு வாழ்வதற்கு வழி இல்லையா?
தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு மாணவன் தோற்க உரிமையில்லையா?
நான் மட்டும் கொஞ்சம் யோசித்திருந்தால்
வேறு படிப்பைத் தேர்ந்தெடுத்து
பள்ளி நாட்களை ரசித்திருக்கலாம்
கல்லூரியையும் அனுபவித்திருக்கலாம்
இதைத்தானா இந்த மதிப்பெண் சமூகம் விரும்புகிறது
கணக்கு என் படிப்பை விரட்டியது
பயந்து ஓடினேன்
தேர்வு என்னைத் துரத்தியது
மீண்டும் ஓடினேன்
பக்தி என் நம்பிக்கையைப் பயமுறுத்தியது
ஓடினேன்.. ஓடினேன்.
இறுதித் தேர்வின் ஓரத்திற்கே ஓடினேன்
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்
வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்
இன்று மதிப்பெண் என்னவென்று கேட்போர்
செய்தார்களா?
படிக்க விட்டார்களா என்னை.
(இன்ஜினியர் சமூகம்: படிக்காமல் இருந்துவிட்டு எங்களைக் குற்றம் சொல்கிறார்.)
இல்லை யாரையும் குற்றம் சொல்லவில்லை
அதுவும் என் குற்றம்தான்
என் கணக்கில் பிழை
புரியாத படிப்பை எண்ணி ஓடுவதில் என்ன தவறு
கணக்குப் பாடத்தை எடுத்தது ஒரு குற்றம்
புரியாமல் இரண்டு வருடம் பள்ளி சென்றது ஒரு குற்றம்
கணக்கு வாத்தியாரை கண்டுகொள்ளாதது ஒரு குற்றம்
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?
யார்?
யார் காரணம்?
இன்ஜினியர் சமுதாயக் குற்றமா?
விதியின் குற்றமா?
பணம் பறிக்கும் காலேஜ் கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?
அந்தஸ்து குற்றமா? அல்லது இன்ஜினியர் வேலையில் ஆசை காட்டி பணம் புடுங்கிய வஞ்சகர்களின் குற்றமா?
தெருவுக்குத் தெரு சாமியார்கள், மணல் குவாரிக்காரர்கள், அரசியல்வாதிகள் பெயரால் காலேஜ் நடத்தும் ஆசாமிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?
கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி கல்விக்கூடங்கள் நடத்தும் கேடிகளின் குற்றமா?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை தோல்விகள் குறையப் போவதில்லை; தோற்பவர்களும் குறையப்போவதில்லை.
இதுதான் வாழ்க்கை!
வரலாற்றில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம் தோல்வி.
வாழ்க்கையில் வெற்றியின் ரகசியமும் இதுதான்.
Mano Red 💪

16 October 2017

ஞாயிறு உளறல் 11


என்பாட்டுக்கு மொபைலை நோண்டிக் கொண்டிருந்தேன். அருகில் நின்றிருந்த நடுத்தரமான அங்கிள் ஒருவர் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்ப்பதாக உள்ளுணர்வு சொல்லியது. நோக்குவர்மத்தில் வசியம் செய்ய முயற்சிக்கிறாரோ என்கிற பயத்தில் அவரைத் திரும்பிப் பார்த்தேன். உடனே வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். மூன் வாக் செய்து அவரை விட்டுக் கொஞ்சம் நகர்ந்தேன். அதே மூன் வாக் செய்து அவரும் நகர்ந்தார். கொஞ்ச நேரம் கழித்துப் புரிந்தது கடகடவென வேகமாக மொபைல் போனை நோண்டும் போதெல்லாம் என்னைப் பார்க்கிறார்.
ஏதோ புதுவித வியாதியாக இருக்கும்போல என நினைத்து என் வேலையைத் தொடர்ந்தேன். இன்னும் அருகில் அவர் வந்தபோது எனக்குப் பயமாகிவிட்டது. எந்த பஸ்ஸிலும் ஏறாமல் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். 'இன்னொரு ஸ்டெப் அவர் நகர்ந்தால் ஓடிவிடு' என எனக்குள் இருந்த உசேன் போல்ட்டும் உசுப்பேற்றினான். இப்போது சரியாக அங்கிளும் நோக்க நானும் நோக்க பதறிப் போன அவர், தன்னிடம் இருந்த மொபைலை என்னிடம் கொடுத்து 'இது என்ன ஏதுன்னு தெரியல. பாக்க உங்க போன் மாதிரியே இருக்குது. கொஞ்சம் வெவரமா நோண்டிப் பாருங்க' என்றார். (மைண்ட் வாய்ஸ்: இதுக்காடா அரை மணி நேரம் குறுகுறுன்னு பாத்த...)
அரைமணி நேரம் அனலைஸ் பண்ணி நம்மகிட்ட நம்பிக்கையா கொடுக்கிறாரே நோண்டி நொங்கெடுத்துருவோம்னு பகுமானமா மொபைல வாங்கிட்டேன். ஸ்பைடர்மேன் நூல் விடுற படத்தோட கவர் எல்லாம் போட்டு யூத்தா இருந்துச்சு ஸ்மார்ட்போன். ஆளுக்கும் போனுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி தோணும்போது பின்னாடி போஸ்டர்ல இருந்த துப்பறிவாளன் விஷால் எங்களப் பாத்துட்டாரு. 'அங்கீள்... பாஸ்வேர்டு போடுங்க, இல்லன்னா கைரேகை வைங்க'னு கேட்டா ஆதார் கார்டு எடுத்துட்டு வரலன்னு அப்பாவியா சொன்னாரு. மோடி சாதனைய நினைச்சு பெருமைப்பட்டுகிட்டே 'பாஸ்வேர்டு இருந்தாதான் உள்ள போக முடியும்' என்றேன்.
'இது யாரோடதுனு தெரியல! இங் கிடந்துச்சு ஏதாச்சும் பண்ணி போன் பேசுற மாத்திக் கொடுத்தா நான் கிளம்பிருவேன்'னு ரொம்ப அழகாக் கேட்டாரு. அந்த நேரத்தில் ஓனர் போன் செய்ய விவரத்தைச் சொல்லி அவர் வந்ததும் போனைக் கொடுத்தபோது அங்கிள் என்மீது வஞ்சகப் பார்வையை வீசினார். "செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா... கர்ணா.." இந்த ரிங்டோன உடனே டவுன்லோடு செய்ய சொல்லி மனசு கிடந்து அடிச்சது.
Mano Red / 15.10.17

13 October 2017

லவ்... லவ்... Mano Red


அவளுக்கு அன்று இதய மாற்று அறுவைச் சிகிச்சை. ஆபரேஷன் செய்து முடித்த பிறகு ஆண் ரோபோக்கள் அனைவரும் பைனரி மொழியில் பயத்துடன் கதைத்தன. ‘லப் டப்’ சத்தத்திற்குப் பதிலாக ‘லவ் லவ்’ சத்தம் கேட்டதே அதற்குக் காரணம். 
மண்டையில் சிவப்பு விளக்கு எரியும் அந்த ஆண் ரோபோ பெண் ரோபோக்களை எல்லாம் வெளியே போகச் சொன்னது. பின்பு, ஆண் ரோபோக்கள் கூடிப் பேசி சிலிக்கன் சில்லுகளை மாற்றிப் பொருத்தினால் இதயத்தில் இருக்கும் காதலை அழிக்கலாம் என முடிவு செய்தனர். உடனே, செயற்கை நுண்ணறிவைக் கூர் தீட்டி இதயத்தைத் தோண்ட ஆரம்பித்தது லவ் ஃபெயிலியர் ரோபோ. 
அப்போது இதயத்தில் இருந்து ஒரு மெசேஜ் ‘அன்பே! எங்கிருக்கிறாய்? உனக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்’. அவளது காதலன் அனுப்பிய அந்த மெசேஜை, ஒன்சைடாகக் காதலிக்கும் ரோபோ படித்துவிட்டு வயிற்றெரிச்சலில் டெலிட் செய்தது. அந்த நேரம் பார்த்து காதலன் நினைக்க, விக்கலெடுத்து விழித்துக்கொண்டாள் அவள். இதயத்தில் ஓங்கி குத்தி, நிகோடின் கொடுத்து மறுபடியும் மயங்கச் செய்தது காதலி இல்லாத ரோபோ. பொறுமை இழந்த அத்தனை ரோபோக்களும் அவளது மதர் போர்டு முழுக்க காதல் பரவியிருந்தது கண்டு வியந்து நின்றனர். 
தொடர்ந்து ஒலித்த ‘லவ் லவ்’ சத்தம் அவர்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவளுக்கு இன்னும் கூடுதலாக லவ் சென்ஸார்கள்களைப் பொருத்தினர். அப்போது இன்னொரு மெசேஜ் காதலனிடமிருந்து ‘என்னை மதிக்காமல் எவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாய்?’. உடனே அவள் இதயம் ‘லவ் லவ்’ ஒலியிலிருந்து ‘லப் டப்’ ஒலிக்கு மாறியது. அருகில் சிங்கிளாக இருந்த அந்த ரோபோ துள்ளிக் குதித்தபடி வலது பக்கத்தில் இன்னொரு இதயத்தை அவளுக்குப் பொருத்த ஆரம்பித்தது.

12 October 2017

தீபாவளி பர்ச்சேஸ் - Mano Red


பில்லிங் செக்‌ஷன் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். முன்னால் நின்றிருந்த நாகரிக மங்கை ஒருத்தி நான்கைந்து மூளைகளையும், ஒரேயொரு விலா எலும்பையும் ஷாப்பிங் செய்திருந்தாள். ரத்தமில்லாத இரண்டு இதயத்தை மட்டும் ஷாப்பிங் செய்திருந்த என்னை முறைத்துப் பார்த்துவிட்டு பறக்கும் தட்டில் ஏறிப் போனாள். என் முறை வந்தது. இடுப்புக்குக் கீழ் சொருகி வைத்திருந்த கிரெடிட் கார்டுகளை வரிசையாக எடுத்து POS மெஷினில் திணித்தேன். ERROR என்று துப்பிக்கொண்டே இருந்தது. பொறுமை இழந்த மெஷின் சிவப்பு நிற ஒளிக் கண்ணீரை சிதற ஆரம்பித்தது. அத்தனை கார்டுகளும் லிமிட் தாண்டியிருந்தன என்று பின் மண்டையில் அடித்து ரோபோ ஒன்று சொன்னது. இன்னொரு அடியாள்ரோபோ வந்து இடுப்பில் கையை விட்டு ஒரு கிட்னியை எடுத்துக்கொண்டு பில் கொடுத்தது. எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த 256 வயதுக்காரன் அப்போதே கிட்னி, சிறுநீரகம் என எல்லாவற்றையும் உருவி பையின் உள்ளே மறைந்துக்கொண்டான். ஒருவழியாக 527ஆவது தீபாவளி பர்ச்சேஸ் முடித்து செவ்வாய் கிரகத்தில் இருந்து வெளியேறும்போது பில்லின் இறுதி வரியாக இருந்த ‘நன்றி மீண்டும் வருக’ எழுத்துகள் ஒளிர்ந்தன. மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.😎

09 October 2017

ஞாயிறு உளறல் 10


பாகுபலி 2 டிவியில் ஓடிக் கொண்டிருந்தது. விளம்பர இடைவேளைகளில் மெர்சல் படத்தின் புரோமோ வரப் போகிறது என்று தகவல் முன்னமே கிடைத்ததால் எப்போது விளம்பரம் வரும் எப்போது வேற சேனல் மாத்தலாம் என்று ரிமோட்டும் கையுமாக கங்காரு போல குத்துக்கால் போட்டு உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தேன். சொல்லி வைத்தது போல விளம்பரமும் வந்தது. விஜய்க்கும் நமக்கும் பகை இல்லை இருந்தாலும் அவரது நடிப்பைப் பார்த்து நடிக்கிறாரா, வாழ்கிறாரா என்ற குழப்பம் வரும். அதனால் நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ள செய்தி சேனல்கள் பக்கம் போய்விட்டேன்.
பாகுபலி பார்த்த பிரதிபலிப்பு நம்மூர் அரசியல் செய்திகளிலும் தெரிந்தது. தமிழ்நாடு மகிழ்மதியாக இருந்தால், தினகரன், பன்னீரு, பழனி, நாஞ்சில் சம்பத், சசிகலா, மோடி, ரஜினி, கமல், தீபா, எல்லாரும்தானே கதாப்பாத்திரங்கள்? அனுஷ்கா மற்றும் அனுஷ்காவின் தோழிகளைப் பார்த்துவிட்டு இந்த மூஞ்சிகளுடன் கற்பனை செய்தால் கற்பனை வறட்சி ஏற்பட்டுவிடும் என்பதால் நியூஸ் சேனலில் இருந்து ட்விட்டருக்கு தாவிவிட்டேன்.
ட்விட்டரில் சென்றால் ஒரு கருத்துச் சண்டை நடந்துகொண்டிருந்தது. அதாவது, பாகுபலிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் அதன் விளம்பர இடைவேளைகளில் மெர்சல் புரோமோ போட்டால் நன்றாக ரீச் ஆகும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் போடுகிறார்கள் என்று ஒரு கூட்டமும் (ஆமை என்று விஜய் ரசிகர்களால் அழைக்கப்படக்கூடிய அஜித் ரசிகர்கள்)
பாகுபலி படத்தை நன்றாக ஓட வைக்கவே மெர்சல் புரோமோ என்று இன்னொரு கூட்டமும் (அணில் என்று அஜித் ரசிகர்களால் அழைக்கப்படக்கூடிய விஜய் ரசிகர்கள்) அடித்துக் கொண்டிருந்தது.
ஏன்டா டேய் 1500 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டி ஒண்ணாரூவா எலுமிச்சம் பழத்துலயா ஓடப்போகுதுன்னு ஒரு கருத்த சொல்லிட்டு வேடிக்க பாத்தா படம் முடியிற வரைக்கும் சண்டை போடுறானுக. புரோமோக்காக படத்தையும் படத்துக்காக புரோமோவையும் சண்டை போட்டுகிட்டே பார்த்த ஒரே கரகாட்ட கோஷ்டி நாமளாதான் இருக்கும். ஒரு படத்த நிம்மதியா பாக்க விடுறானுகளா... இதுக்கு நடுவுல ஒண்ணுமே தெரியாத மாதிரி விஜய் டிவிக்காரன் கும்கி, மைனாவுக்கு ரெஸ்ட் விட்டுட்டு அமரேந்திர பாகுபலிய தூக்கி மடியில வச்சிக்கிட்டான். நீங்க என்னமோ பண்ணுங்கடா. எப்படிப் பாத்தாலும் இந்திய சினிமாவுல பாகுபலி ஒரு அசைக்க முடியாத மைல்க்கல்தான். ராஜமௌலிக்கு ஒரு நன்றியையும் விளம்பரமே இல்லாத எச்.டி. பிரிண்ட் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ் தெய்வத்துக்கு ஒரு வணக்கத்தையும் சொல்லிட்டு மொதல்ல இருந்து மொபைல்ல பாக்கப் போறேன். ரிபிட் மோடு, ஸ்லோ மோடு எல்லாம் இதுலதான் இருக்கு😍
Mano Red / 8.10.17

04 October 2017

ஞாயிறு உளறல் 9


போன ஆண்டு நடந்த சம்பவம். முன் ஏற்பாடின்றி கல்லூரி நண்பனின் திருமணத்துக்காக ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. சென்னையில் இருந்து போகும்போது மதுரை மாறிச் சென்றேன். ஊரிலிருந்து வரும்போது மதுரை மாறி சென்னை பேருந்து ஏறினால் காலையில் வந்து சேர லேட் ஆகும் என்பதால் ஊரில் இறங்கி முதல்வேளையாக, எப்போதும் புக் செய்யும் டிராவல்ஸ் ஆபிஸ் சென்று மேனேஜரிடம் டிக்கெட் கேட்டேன். "இப்போ வந்து கேக்குறீங்க? முகூர்த்த நாள் தம்பி டிக்கெட் இல்ல" என்று முகத்தைப் பார்க்காமலே சொல்லிவிட்டார். "அண்ணே எப்பவும் நம்ம பஸ்லதான் போவேன். அவசரமா கெளம்புனதால டிக்கெட் சொல்ல முடியல. டிரைவர் பின்னாடிகூட உக்காந்துட்டு போறேன். ஏதாச்சும் பாத்து செய்ங்க" என்றேன். அப்போதும் அவர் என் முகத்தைப் பார்க்காமல் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். இதற்குமேல் நானும் அங்கு நிற்கவில்லை. மதுரை மாறிச் சென்றுவிடலாம் என்று நகர்ந்துவிட்டேன்.
நண்பனின் திருமணம் முடிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். வேறு ஊர்களில் இருந்து வந்த நண்பர்களும் மதுரை மாறிச் செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த டிராவல்ஸ் மேனேஜர் ஒரு கையில் வேட்டியைத் தூக்கிப் பிடித்தபடி கை கழுவ வந்தார். அவருக்கு உதவ பைப்பை திறந்துவிட்டேன். இருந்தாலும் என்னை உதாசீனப்படுத்திய காரணத்தால் குத்திக் காட்டும் விதமாக "அண்ணே தண்ணி தொறந்து விடுறதுக்கெலாம் டிக்கெட் தர வேணாம்" என்று சொன்னபோது என் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். நாம கலாய்க்கிறது தெரியாம இந்த மனுசன் இம்ப்ரெஸ் ஆகுறாரோ? (ஸ்லோமோஷன், வானத்தைப் போல RR எல்லாம் பேக்கிரவுண்டில் கேட்டது).
வரவேற்பு மேசைக்கு அருகில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். தூரத்தில் இருந்து அந்த மேனேஜர் கை அசைத்து அழைத்தார். அருகில் சென்றதும் "நீங்கதான காலைல வந்து டிக்கெட் கேட்டீங்க. நம்ம பஸ்ல போங்களேன்" என்று சொன்னபோது சென்டிமென்ட் வில்லனாகத் தெரிந்தார். "அதான் டிக்கெட் இல்லனு சொல்லி மனச ஒடச்சீட்டிங்களே" என்று நான் சொன்னதும் என் முதுகைத் தட்டியபடி மீண்டும் சிரித்தார். மனுஷன் நல்லா சிரிக்கிறாரு. "நான் இன்னைக்கு மெட்ராஸ் போற மாதிரி இருந்து கேன்சல் ஆகிடுச்சு. ஆபிஸ்ல இருக்கும்போதே உங்க ஞாபகம்தான் வந்துச்சு. நம்பர் இல்லாததால உங்களுக்கு சொல்ல முடில. நல்லவேளையா நீங்களும் இதே கல்யாணத்துக்குதான் வந்துருக்கீங்க" என்று சொல்லி முடித்தார். அதுமட்டுமில்லாம அவரோட நம்பர் கொடுத்து "இனிமே டிக்கெட் வேணும்னா எனக்கே போன் பண்ணுங்க தம்பி... பாத்து செய்வோம்" என்றபடி அவர் பெயரும் சொல்லாமல் என் பெயரும் கேட்காமல் சென்றுவிட்டார்.
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா... இந்த மனுசங்கள புரிஞ்சிக்கிறதுதான் எவ்வளவு ஈஸியாவும் கஷ்டமாவும் இருக்குதுல்ல.😍
Mano Red / 1.10.17

26 September 2017

ஞாயிறு உளறல் 8


40 பக்க நோட்டை எடுத்து 'இந்த ஊருக்கு என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வேன்' என்று ஒவ்வொரு நாள் காலையிலும் குளித்துவிட்டு 1008 முறை எழுதவேண்டுமென்று தோன்றும். அந்த அளவுக்கு என் சுயத்தை மறைத்து ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும் ஒரு முகத்தைப் பொருத்தி எனக்குள் நானே ஒத்திகை பார்க்கிறேன். இருந்தாலும் ஒத்திகை ஒத்துழைப்பதில்லை. நல்லவனோ கெட்டவனோ எதோவொரு விதத்தில் சுயம் வெளிப்பட்டுவிடுகிறது. ஆனால், எதிரில் இருப்பவர்களால்தான் சுய முகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. நாம் எப்படிப்பட்டவர்கள் எனத் தெரியாமலே 'இப்படி இருந்த நீயா இப்படி மாறிட்டே?' என ஒவ்வொரு செயலுக்கும் பல கேள்விகளை எழுப்பி இரும்புக் கரம் கொண்டு சுயத்தை அடக்கி விடுகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளில் நான் சில நேரங்களில் மனிதனாகவும், சில நேரங்களில் மிருகமாகவும், சில நேரங்களில் நல்ல நடிகனாகவும் இருந்ததற்கு யாருக்காவது நன்றி சொல்லியாக வேண்டும். காரணம் நான் நானாக இயங்கியதை விட சுற்றி இருக்கும் உங்களால் இயக்கப்பட்டதே அதிகம். நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்று பயந்து பயந்தே நடமாடியிருக்கிறேன். என் சுயத்தின் பரம ரகசியங்களை எப்போதாவது வெளிச்சத்துக்கு கொண்டு வர நினைக்கும்போது உங்களை நினைத்துப் பயந்து மறைத்திருக்கிறேன்.
குருட்டாம் போக்காக உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். 'நிஜத்தைவிட பொய்யை ஏன் அதிகம் ரசிக்கிறீகள்?' பொய்யான முகத்தின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துவிட்டு ஒருவரின் சுயத்தை ஏன் வெறுத்து ஒதுக்குகிறீர்கள். நல்லதோ, கெட்டதோ உங்களுக்குப் பிடித்தவாறு மட்டுமே நான் இருக்க வேண்டுமெனில் என் பெயரில் ஒரு செல்லப்பிராணியை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாமே.
என்னுடைய உயிர் அடையாளத்தை என்னால் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். எனக்குப் பிடித்த அடையாளத்தை உங்களால் உருவாக்கவும் முடியாது; ஒழுங்குபடுத்தவும் முடியாது. ஃபேஸ்புக் போன்ற பொதுவெளியில் என் கருத்தால் உங்களுக்குள் உருவாகும் ரசாயன மாற்றத்தை வைத்து எனக்கு ஓர் உருவம் நீங்கள் கொடுத்தால் அந்த உருவத்தை நிச்சயமாக என்னால் பொருத்திக் கொள்ள முடியாது. அப்படி உங்கள் மனம் நோகக் கூடாதென்று பார்த்துப் பார்த்து உருவம் மாறினால் மெல்ல மெல்ல ஓர் ஒழுங்கற்ற தன்மையை நோக்கி நானும் செல்ல வேண்டியிருக்கும். அந்த முகம் அசிங்கமாக இருப்பதால் எனக்கு ஆகாது.
இக்கட்டான சூழ்நிலையில் என் குறைபாடுகளைச் சமாளித்து என் உயிரை நீட்டிக்க எனக்குத் தெரியும். என் கருத்துப் பிழையினால் எனக்குள் ஜெனட்டிக் சீரழிவும் என்னைச் சுற்றி சமுதாய சீரழிவும் ஒருவேளை ஏற்பட்டால்... அப்போது உங்களுக்குப் பிடித்தவாறு நீங்கள் தரும் முகம் பொருத்தி என்னை மாற்றிக் கொள்கிறேன். அதுவரை நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். நிற்க... (ஒரு பெருமூச்சு விட்ட பிறகு தொடர்ந்து படிக்கவும்) 'என்ன -----க்கு நாங்கள் உன்னை அப்படியே ஏற்க வேண்டும்' என யாராவது கேட்டால், அதற்கான என் பதில் நீங்கள் கேட்கப் போகும் அந்த ------ல் இருக்கிறது. #அவ்ளோதான்
Mano Red / 24.9.17

18 September 2017

ஞாயிறு உளறல் 7

அதைப் பற்றி பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருக்கலாம். அதுதான் இன்றைக்கு எல்லோருக்குமான பேசுபொருள். அதை சாதாரணமான ஒன்றாக கடக்கவும் கூடாது. தினமும் நமக்கு அது வேண்டும். அது இல்லாமல் வாழ்க்கை இல்லையென்கிற போதை நிலையும் உருவாகிவிட்டது. பெரியவர்களுக்கு மட்டுமே அது தேவைப்படும் என்பது மாறி சிறுவர்களுக்கும் அது தேவைப்படுகிறது. அது தவறானதா, சரியானதா தெரியவில்லை. அது பற்றிய விழிப்புணர்வும் அவ்வளவாக இல்லை. வயது வித்தியாசம் இன்றி அது தேவைப்படுகிறது. வயசுக்கு மீறிய விஷயங்களையும் அது தருகிறது. 'அது ஒரு இது' என்று சொல்லுமளவுக்கு அதன் மீது ஆசையும் வெறுப்பும் இருக்கிறது.
இப்படித்தான் அன்று அது இல்லாமல் இருந்த என்னை வேற்றுகிரகவாசி போல மற்றவர்கள் பார்ப்பதை உணர முடிந்தது. எதிரில் வரும் எல்லோரிடமும் அது இருந்தது. அது இல்லாமல் அவர்கள் யாரும் வெளியேறுவதில்லை. அதனுடன் வெளியேற அவர்கள் பழகிக்கொண்டார்கள். என்னைப்போல யாராவது அது இல்லாமல் வருகிறார்களா என்று தெரிந்துகொள்ள எல்லோரையும் நெருக்கமாகக் கடந்தேன். அப்படி யாரும் அது இல்லாமல் இருப்பதாகத் தெரியவில்லை. அது இல்லாமல் உலவுவது விசித்திரமாகவே இருந்தது. இறுதியாக அது இல்லாமல் இருந்த இன்னொருவரைக் காண முடிந்தது. அவரிடம் நேராகச் சென்று 'அது இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்கும் ஆவல் இல்லையென்றாலும் அது இல்லாத அவரைப் பார்த்ததில் சந்தோசம் கிடைத்தது. அந்தச் சந்தோசம் அது தொடர்பான அந்த விஷயத்தில் இன்னொருவர் என்னைப்போல் இருக்கிறார் என்பதால் கிடைத்தது.
அது இல்லாத போது புரிந்தது, அது முழுதாக என்னை இயக்கி இருந்திருக்கிறது. அது தன்னுடைய கட்டுப்பாட்டில் என்னை வைத்திருந்திருக்கிறது. அது இல்லாததால் அன்றைய நாளின் முழு சிந்தனையும் அது பற்றியே இருந்தது. நமக்கான அதுவை யார் தொட்டாலும் கோவம் வரும். அந்த அளவுக்கு அது உறவாடிப் பழகிவிட்டது. தனிமையில் அது உடன் இருந்திருக்கிறது. அது இல்லாத தனிமை வெறுமையாக இருந்திருக்கிறது. அதனுடன் ஒட்டவும் முடியாமல் வெட்டவும் முடியாமல்தான் குடும்பம் நடத்த முடிகிறது.
அசிங்கத்தையும் அழகையும் ஒரே பார்வையில்தான் அது பார்க்கிறது. தகுதிக்கேற்ப அது ஒவ்வொருவரிடமும் ஒரு மாதிரி இருக்கிறது. ஒருசிலரிடம் அது உறைக்குள் இருக்கிறது; ஒருசிலரிடம் அது நிர்வாணமாக இருக்கிறது; ஒருசிலரிடம் அது உயர்ந்ததாக இருக்கிறது; ஒருசிலரிடம் அது போனால் போகிறதென்று இருக்கிறது; ஒருசிலர் அதை வியாபராமாகக் கருதுகிறார்கள்; ஒருசிலர் அதை தொல்லையாகக் கருதுகிறார்கள்; ஒருசிலர் அதை எல்லாமுமாகக் கருதுகிறார்கள்; ஒருசிலர் அது இல்லாமலும் இருக்கிறார்கள்; ஒருசிலர் அது தேவையில்லை என்றும் சொல்கிறார்கள். ஒருசிலர் அதைக் கொடுங்கள் பார்க்கிறேன் என்று கேட்கிறாகள்; ஒருசிலர் அது என்னுடையது என்கிறார்கள்; இன்னும் சிலர் 'தொட்டுப்பார்' என்று கைகளில் கொடுக்கிறார்கள். யார் கைகளில் எப்படி இருந்தாலும் அது அதுவாகவே இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு சுற்றும் நாம்தான் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம். அந்த #அது = செல்போன்.
Mano Red / 17.9.17

13 September 2017

ஞாயிறு உளறல் 6


சனி பிடித்தால் கூட ஏழரை ஆண்டுகளைச் சமாளித்துவிடலாம். இந்த சளிப் பிடித்தால் சீரியல் அழுமூஞ்சி ஆர்டிஸ்ட் போல மூக்கு சீந்தியே ஒருவாரத்தில் மூக்கு சிவந்துவிடும். ஏன் சளி, எதற்காக சளி, எப்படி சளி என்கிற வரலாற்றுக்காக முந்தைய நாட்களை ரீவைண்ட் செய்து, ஐஸ்கிரீம் சாப்பிட்டது, தயிர், லஸ்ஸி குடித்தது, மழையில் நனைந்தது என ஒவ்வொன்றாக ஆராய்ந்ததில் மழையில் நனைந்ததுதான் காரணமென சுய ஆராய்ச்சி முடிவு சொல்லியது.
1. கரகரப்பு படலம்
சளி பிடிக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாக மூக்குக்கும் தொண்டைக்கும் இடையில் ஓர் உருளை உருளக் காண முடிந்தது. விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் கரகரப்பான உறுத்தல் ஒன்று மேல்மாடி முழுக்க 'கிச்கிச்' மூட்டியது. போர் அறிவித்த பிறகு உலைக்களம் தேடும் போர்வீரன் போல சளியின் அறிகுறிகள் தெரிந்த பிறகு கைக்குட்டைகளைத் தேடித் துவைத்து தயார் நிலையில் இருந்தேன்.
2. காறித் துப்பும் படலம்
விடிந்து எழும்போது சளி தனது உறுதித்தன்மையை அறிவித்தது. காலையில் எழுந்து முகம் கழுவும்போதே போர் ஆரம்பித்தது. ஒரு மூக்கை அடைத்து மறுமூக்கில் புல்லட் வேகம் கொடுத்து சீறிச் சீந்தினேன். சளியுடன் இறுமலும் கை கோர்த்ததால் 'கர்ர்ர்...' என்ற காறித் துப்பல் அங்கேயே ஆரம்பித்தது. பாத்ரூமில் 'கர்ர்ர்...', ரோட்டில் 'கர்ர்ர்...', பஸ்ஸில் 'கர்ர்ர்...' ஆபிஸ்ல 'கர்ர்ர்...', டாய்லெட்ல 'கர்ர்ர்...'. இத்தனை 'கர்ர்ர்...' களுக்கு நடுவில் சளி வரவில்லை என்றாலும் வெறுமையான காறித் துப்பல் மட்டும் அனிச்சையாக நடந்தது. இந்தப் பனிப்போரை வெல்ல சுடுதண்ணீர் நேசக்கரம் நீட்டியது.
3. துயர படலம்
கைக்குட்டை, இன்ஹேலர் துணையுடன் பஸ்ஸில் ஏறினாலும் என்நிலை மீறி ஒரு மூக்கு உறிஞ்சலில் சளி வாயில் இறங்கி ஊஞ்சலாடியது. பஸ்ஸிலிருந்து வெளியே துப்பினால் யார் மண்டையிலாவது ஹாஃபாயில் போடுவது நிச்சயம். அதுவுமில்லாமல் ஒரு சமூக போராளி அப்படித் துப்பமாட்டான் என்று சுய வைராக்கியம் வேறு வாயைப் புடுங்கியது. உம்மென்று வாய்க்குள்ளேயே வைத்து, பத்திரமாகத் துப்பும் வாய்ப்புக்காக காத்திருந்தபோது சரியாக மணி கேட்கும் மணிகண்டன்களின் கண்டத்திலிருந்து தப்பிக்க மண்டை ஆட்டி 'ம்ம்ம்' பதில் சொல்லும் துயரமும் இருந்தது.
4. மணம், சுவை, திடம் படலம்
மூக்கிலிருந்து சுதந்திரம் கேட்கும் வெள்ளையர்களுடனான போராட்டத்தில் எந்த மணத்தையும் அறிய முடியாது. வாழைப்பழத்தின் மணத்தைக் கூட அறிய முடியாத இந்த மூக்கிடம் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் வயர் எறிவதை மூக்கில் சூடு வைத்துதான் சொல்ல முடியும். சாம்பார் சட்டியில் ரசம் என்று எழுதி ஒட்டியிருந்தால் பாழாய்ப்போன மூக்கு ரசமென்றே நம்பிக் குடித்துவிடும். அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்த சளியுடன் நாக்கும் சேர்ந்து கூட்டுச் சதி செய்து ருசியை மறக்கடித்தது. இதில் மன திடத்திற்கெல்லாம் வேலையே இல்லை.
5. துடைத்தல் படலம்
எல்லாம் போக கையால் மூக்கை சீந்தி பேருந்து சீட்டில் துடைப்பது, போஸ்ட் கம்பியில் துடைப்பது, ரோட்டில் எங்காவது செடி இருந்தால் துடைப்பது போன்ற பல துடைத்தல்களும் இருக்கின்றன. கைக்குட்டையில் துடைத்தால் முகம் துடைக்க முடியாது என்பன போன்ற வேறு பல அரசியல் காரணங்களும் இருக்கின்றன. இந்த ஒருவாரத்துப் போரில் மூக்கு புண்ணாகி உடையும் லெவலுக்கு வந்துவிட்டது. இதற்கு நடுவில் சுயமாகாப் பரீட்சித்த சித்த வைத்திய குறிப்புகள் சாசனங்களாக்கப்பட்டு ரகசியமாக இருப்பதால் யாரும் படிப்பதற்கில்லை. 'கர்ர்ர்'....
Mano Red / 10.9.17