www.gamblinginsider.ca

20 October 2017

போதைக்கு எதிராகவும் போராட வேண்டும்! Mano Red

சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு கடத்த முயன்ற 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.
செங்குன்றத்தில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; உரிமையாளர் உட்பட, 10 பேர் கைது.
தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருட்கள் விற்ற, 46 பேர் சென்னையில் கைது.

இந்தச் செய்திகள் அனைத்தும், வார, நாளிதழ்களில் வந்தவை. போதைப் பொருள் பற்றிய இத்தகைய செய்திகளைப் படிக்கும் போது தனி மனிதனின் உடல், ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாக மட்டும் கருதி, சாதாரணமாக நம்மால் கடந்துவிட முடியாது. அடுத்த தலைமுறையினரான மாணவர்களின் பிரச்னையாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பப் பிரச்னையாகவும் பார்த்தால், இதனுடைய விபரீதம் புரியும்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்காகப் பழகி, போதைப் பழக்கத்தில் இருந்து இன்று வரை மீளமுடியாமல் வருத்தப்படும் நண்பர்களை எனக்குத் தெரியும். பழக்கத்தை விட முயற்சித்துத் தோற்றுப் போனவர்களும், ஏதாவது ஒரு பழக்கத்தை விடுவதற்கு இன்னொரு பழக்கத்திற்கு அடிமையானவர்களும், மன உளைச்சல், உடல் வலி இவற்றை மறக்கப் பயன்படுத்துபவர்களும், இந்தப் பட்டியலில் அதிகமாகி இருக்கின்றனர்.

போதைக்கு அடிமையாகும் நபர், சிறிது சிறிதாக அடிமையாகத் துவங்கி, அந்தப் பழக்கத்தை அதிகரித்துச் செல்வதும், அடிக்கடி போதை வேண்டுமென்று கேட்பதும், போதைக்கான தேவைக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவதுமாக நாளடைவில் மாறி விடுகின்றனர். மனதளவில் தன்னம்பிக்கை இழப்பதுடன், விரக்தி அடைந்து, தனிமையையும் அதிகம் விரும்ப ஆரம்பிக்கின்றனர்.

தெருவுக்குத் தெரு மதுக்கடைகளும், பள்ளிக்கூடம் அருகே போதைப் பொருள் விற்பனை நடப்பதும் இவற்றை எளிமையாகவும், பரவலாகக் கிடைக்கவும் காரணமாக இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணிகளாக, போதை மருந்தை விற்பனை செய்யும் கும்பலும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளும், போதை மருந்து கொண்டு செல்லும் வாகனங்களைப் பிடித்தால் லஞ்சம் வாங்கி, விடுவிக்கும் காவல்துறையினரும் இருக்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக ஹெராயினும், ஆப்ரிக்க நாடுகளிலிருந்து கோகைனும், இந்தியாவின் நக்ஸல் பகுதிகளில் இருந்து கஞ்சாவும் கடத்தி வரப்படுகின்றன. புகையிலை, சிகரெட், பீடி, மாவா, மூக்குப்பொடி, ஆல்கஹால், கோகைன், ஹெராயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என, பல வகையில் மக்களை போதை அடிமைப்படுத்தி வருகிறது. இந்தியாவில், 15 வயதுக்கு மேல் உள்ளவர்களில், 30 சதவீதம் பேர் - கிட்டத்தட்ட, 25 கோடி பேர் - ஏதோ ஒருவகையில் போதை உபயோகிக்கின்றனர் என்பது அதிர்ச்சியான தகவல்.
ஜனவரியில், டில்லியில் ஒரு நிகழ்வு. இளைஞர் ஒருவர் சந்தையில் கிடைக்கும் அனைத்து விதமான போதைப் பொருட்களையும் பயன்படுத்தி திருப்தி ஆகாமல், பாம்பு விஷத்தைப் போதையாகப் பயன்படுத்தி இருக்கிறார். நாளடைவில் பழக்கம் தீவிரமாகி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவரைப் பரிசோதிக்கும் போது அவரின் எச்சில் கூட நஞ்சாக மாறியிருந்தது. 'பாம்பு விஷம் என்னை, 24 முதல், 30 மணி நேரம் வரை போதையிலேயே வைத்திருந்தது' என்று அவர் மருத்துவர்களிடம் கூறியதிலும், சமூகத்திற்கான விஷயம் இருந்தது.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் கொட்டு வைக்கும் விதமாக இன்னொரு நிகழ்வைப் பார்க்கலாம். கர்நாடக மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் சார்பாக, பெங்களூரில் பள்ளி மாணவர்கள் முதல்வர் சித்தராமையாவுடன் உரையாடும் நிகழ்ச்சி, 2017 ஜூன் முதல் வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிகழ்வில், 8ம் வகுப்பு மாணவர் ஒருவர், 'எனது பள்ளிக்கு அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

போதைப் பொருட்கள் விற்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக முதல்வர் உத்தரவிட்டதால் பெங்களூரு மாநகர காவல் துறையினர் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்தனர்; பள்ளிக்கு அருகே போதைப் பொருட்கள் விற்ற, நான்கு பேரை கைது செய்தனர். சித்தராமையாவின் இந்த அதிரடி நடவடிக்கை, எல்லாரிடமும் பெரும் வரவேற்பையும் பெற்றது.

உலக நாடுகள் அனைத்தும் போதைப் பொருட்கள் பரவலுக்கு எதிராக, கடுமையான சட்டம் கொண்டு வந்தாலும், விற்பதும், கடத்துவதும் இன்றும் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. இதற்கு எதிராக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த, 2016 ஜூன் மாதம், உட்தா பஞ்சாப் என்கிற படம் ஹிந்தியில் வெளியானது. 'உட்தா பஞ்சாப்' என்றால், 'பறக்கும் பஞ்சாப்' - போதையில் மிதக்கும் பஞ்சாப் - என்று அர்த்தம். போதை மருந்துக்கு அடிமையான சமூகத்துக்கு எதிரான செய்தியைத் துணிச்சலாகப் பதிவு செய்தது.

பஞ்சாப் இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கிச் சீரழிவதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் விளக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளும் சொல்லப்பட்டிருந்தன. அந்தப் படம் சொன்னதற்கு மேலாகவே இன்றைய சமூகமும் இருக்கிறது.

மதுவுக்கு எதிராகப் போராடும் மக்கள் பான் மசாலா, புகையிலை போன்ற போதை பொருளுக்கு எதிராகவும் போராட, வீதிக்கு வர வேண்டிய நேரமிது. நாட்டு மக்களின் நலன் கருதி போதைப் பொருட்கள்
மீதான துரித நடவடிக்கையை எடுக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.


போதைக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், போதையிலிருந்து மீள வேண்டுமென்று அடிமையானவர்கள் தங்களுக்குள்ளே போராட வேண்டும். அதுவரை அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்பது கடினமே.

தினமலர்/4.7.17