www.gamblinginsider.ca

20 October 2017

நான் 12வது ஃபெயிலுங்க... Mano Red


-
‘12ம் வகுப்பு ஃபெயில்’ என என்னுடைய தேர்வு முடிவு வந்த சமயம் எங்கள் ஊரில் திருவிழா. ஊர் முழுக்க சொந்த பந்தங்கள். கெடாக்கறி விருந்துடன் அத்தனை பேரையும் சமாளிக்கும் தைரியம் எனக்கு இருந்ததால் அன்றைய பொழுதைச் சமாளித்தேன். எல்லாம் முடிந்து, 12ம் வகுப்பு முடிவை ஓரம்கட்டிவிட்டு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து டிப்ளமோ சேர்ந்து, அதன்பிறகு பொறியியல் படிப்பையும் (கணக்கில் Arrears வைத்து) முடித்தேன். இருந்தாலும், 12ம் வகுப்பில் தேறாத பாடங்களை எழுத விருப்பமில்லை. (வரலாறு பேசட்டுமென இன்னும் எழுதாமலே வைத்திருக்கிறேன்.) காரணம் கணக்குப் பாடம்.
(நான் ஃபெயில் ஆன கதை பெரிது என்பதால் கீழே இருக்கும் என் வரலாற்றை, ‘#பராசக்தி’ சிவாஜி Modulationல் படித்தால் சுவாரசியமாக இருக்கலாம்)
தேர்வுகள் விசித்திரம் நிறைந்த பல முடிவுகளைச் சந்தித்திருகின்றது
புதுமையான பல மாணவர்களையும் கண்டிருக்கிறது
ஆனால் என்னுடைய ரிசல்ட் விசித்திரமும் அல்ல
தேர்வெழுதிய நானும் புதுமையான மனிதன் அல்ல
தேர்வுக் களத்திலே சர்வ சாதாரணமாக தென்படும் மாணவன் நான்
பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் படிக்கவில்லை
விடுமுறை எடுத்து வகுப்புகளில் இருக்கவில்லை
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்
நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று
இல்லை... நிச்சயமாக இல்லை.
பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் படிக்கவில்லை
படிப்பு வேண்டாமென்பதற்காக அல்ல
கணிதப் பாடம் பிடிக்கவில்லை என்பதற்காக
வகுப்புகளில் இருந்தேன்
நான் மாணவன் என்பதற்காக அல்ல
படிக்க அனுப்பிய பெற்றோர் மனம்
புண்படக்கூடாது என்பதற்காக
'எனக்கேன் இவ்வளவு அக்கறை
வேறு யாருக்கும் இல்லாத அக்கறை'
என்று கேட்பீர்கள்
நானே பாதிக்கப்பட்டேன்
நேரடியாக பாதிக்கப்பட்டேன்
சுயநலம் என்பீர்கள்
என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது
பரீட்சையில் முன்னால் இருப்பவன் பிட் அடிக்கும்போது அவன் பேப்பரை புடுங்கி எழுதி அவனையும் காட்டிக் கொடுக்காமல் இருவரும் ஃபெயில் ஆவார்களே அவர்களைப்போல.
என்னையும் தோற்றவன் என்கிறீர்களே
இந்தத் தோற்றவனின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால்
அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்.
பாட்டொலிக்கும் ரேடியோக்கள் இல்லை என் ஹாஸ்டலில்
மிரட்டும் வார்டன்கள் இருந்திருக்கிறார்கள்
டியூசன் சென்றதில்லை நான்
பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்கச் சென்றிருக்கிறேன்
கேளுங்கள் என் கதையை
மதிப்பெண்களை பகிர்வதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்
தமிழ்நாட்டிலே இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான்
பிறக்க ஒரு ஊரு
படிக்க ஒரு ஊரு
கஷ்டமான படிப்பெனச் சொல்லப்படும் குற்றவாளி கணக்கு
உங்கள் முன்னால் நிற்கிறதே இதோ இந்தப் புத்தகம்தான்
இதன் கடின வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்
கணிதப் பிரிவில் சேர்ந்தேன்
புரியாமல் திரிந்தேன்
மெலிந்தேன்
கடைசியில் பைத்தியமாக மாறினேன்
மேல்நிலைப் பள்ளியை விட்டே ஓட நினைத்தேன்
ஆம்!
படிப்பு துறந்தவனாக.
புத்தகத்தின் பெயரோ கணிதம்
வாழைப்பழம் போல எளிமையான பெயர்
ஆனால் பாடத்திலோ எளிமை இல்லை
இருந்த படிப்பும் சீரழிந்து விட்டது
கையிலே கணிதம்
கண்ணிலே நீர்
கணக்கு துரத்தியது
கணக்கை நான் துரத்தினேன்
கணக்குக்காக கருணை காட்டினார்கள் பலர்
அவர்களிலே டாப்பர்ஸ் சிலர் எனக்காகச் சொல்லிக்கொடுத்தார்கள்
கொடூரமான வாத்தியார்களால் என் கணக்கு தள்ளிப்போனது
நான் நினைத்திருந்தால் அப்போதே கற்றுக்கொண்டிருப்பேன்
கடவுள் பக்தர்களும் கணக்கைக் காப்பாற்ற வந்தார்கள்
உபகாரமாக கோவில் சுவற்றில் தேர்வு எண்ணை எழுதச் சொல்லி.
ராமானுஜனின் பெயரால்
உலகப் புகழ் ஐன்ஸ்டீனின் அருளால்
கணித உலகத்தில் புழுவாக துடித்தபடி நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்
புரியாத பாடத்தை எடுக்கத் தூண்டியது இதோ இந்த இன்ஜினியர் சமூகம்தான்
விருப்பமானவர்களின் மீதிருக்கும் பாசத்தில் விந்தையில்லை
நம் மகன் விவசாயம் பார்க்கட்டுமென தந்தையும் விரும்பவில்லை.
உலக பணக்காரர் பில்கேட்ஸ்
டாலர் புண்ணியவான்
சில்வர்ஸ்பூன் சீலர்
அவரே பள்ளியில் படிக்கப் பிடிக்காமல் வெளியே வந்திருக்கிறார்
படிக்க கஷ்டமாக இருப்பதைச் சகிக்காமல்.
அதே முறையைத்தான் நானும் கையாள நினைத்தேன்
கையாளாகாத என்னால் அது முடியவில்லை
இது எப்படி குற்றமாகும்
ஃபெயிலான ஒரு தமிழனுக்கு வாழ்வதற்கு வழி இல்லையா?
தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு மாணவன் தோற்க உரிமையில்லையா?
நான் மட்டும் கொஞ்சம் யோசித்திருந்தால்
வேறு படிப்பைத் தேர்ந்தெடுத்து
பள்ளி நாட்களை ரசித்திருக்கலாம்
கல்லூரியையும் அனுபவித்திருக்கலாம்
இதைத்தானா இந்த மதிப்பெண் சமூகம் விரும்புகிறது
கணக்கு என் படிப்பை விரட்டியது
பயந்து ஓடினேன்
தேர்வு என்னைத் துரத்தியது
மீண்டும் ஓடினேன்
பக்தி என் நம்பிக்கையைப் பயமுறுத்தியது
ஓடினேன்.. ஓடினேன்.
இறுதித் தேர்வின் ஓரத்திற்கே ஓடினேன்
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்
வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்
இன்று மதிப்பெண் என்னவென்று கேட்போர்
செய்தார்களா?
படிக்க விட்டார்களா என்னை.
(இன்ஜினியர் சமூகம்: படிக்காமல் இருந்துவிட்டு எங்களைக் குற்றம் சொல்கிறார்.)
இல்லை யாரையும் குற்றம் சொல்லவில்லை
அதுவும் என் குற்றம்தான்
என் கணக்கில் பிழை
புரியாத படிப்பை எண்ணி ஓடுவதில் என்ன தவறு
கணக்குப் பாடத்தை எடுத்தது ஒரு குற்றம்
புரியாமல் இரண்டு வருடம் பள்ளி சென்றது ஒரு குற்றம்
கணக்கு வாத்தியாரை கண்டுகொள்ளாதது ஒரு குற்றம்
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?
யார்?
யார் காரணம்?
இன்ஜினியர் சமுதாயக் குற்றமா?
விதியின் குற்றமா?
பணம் பறிக்கும் காலேஜ் கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?
அந்தஸ்து குற்றமா? அல்லது இன்ஜினியர் வேலையில் ஆசை காட்டி பணம் புடுங்கிய வஞ்சகர்களின் குற்றமா?
தெருவுக்குத் தெரு சாமியார்கள், மணல் குவாரிக்காரர்கள், அரசியல்வாதிகள் பெயரால் காலேஜ் நடத்தும் ஆசாமிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?
கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி கல்விக்கூடங்கள் நடத்தும் கேடிகளின் குற்றமா?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை தோல்விகள் குறையப் போவதில்லை; தோற்பவர்களும் குறையப்போவதில்லை.
இதுதான் வாழ்க்கை!
வரலாற்றில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம் தோல்வி.
வாழ்க்கையில் வெற்றியின் ரகசியமும் இதுதான்.
Mano Red 💪