www.gamblinginsider.ca

21 August 2013

பார்வைகள் பலவிதம்...!!!

கண்கள் ஒன்றென்றாலும் 
பார்க்கும் பார்வைகள் பலவிதம்..!! 

புரிய மறுத்து பிரிந்து சென்று, 
பிரிந்த பின் புரிந்து வந்து, 
ஒரே அலைவரிசையில் 
ஒன்றிணைவது காதல் பார்வை..!! 

ஆற்ற மொழியின்றி 
அழிவில்லா புது மொழியில் 
பார்வை பரிமாற்றி அன்புப் 
பதிவேற்றுவது பாசப் பார்வை..!! 

எட்டி நின்று எக்காளமிட்டு 
எகத்தாளமாய் எண்ணி, 
கைகொட்டி சிரித்து 
கூனிக்குறுக வைப்பது ஏளனப் பார்வை..!! 

கையருகில் தவழ்ந்த ஒன்று 
கை நழுவி போகையில், 
கடைக்கண்ணில் நீர் சுரக்க 
கவலை தருவது பிரிவுப் பார்வை..!! 

கோவச் சொற்களில் அமிலமூற்றி 
கனல் பார்வையில் சிவப்பேற்றி 
கோரமான முகத்துடன் 
கடுமை தருவது கோபப் பார்வை..!! 

தறி கெட்ட மனதுடன் 
தவறிப் பிறந்த உயிர் ஒன்று, 
கேடு கெட்ட பார்வையில் 
நோக்குவது காமப் பார்வை..!! 

துக்கம்,சோகம் 
விருப்பு,வெறுப்பு 
பாசம்,மோசம் என 
எல்லாவற்றிற்கும் (கா)ரணம் 
பாழாய்ப் போன பார்வைகள் மட்டுமே..!!