www.gamblinginsider.ca

29 August 2013

என் பேருந்துப் பயணத்தில்...!!!

விண்வெளி ஓடத்தில் பறப்பதாய் 
பகல்நேரக் கனவு, 
நெரிசலிலும் தாயின் இடுப்பில் குழந்தை..!! 

கூடுவிட்டு கூடு பாய 
இடை தடையேதும் இல்லை, 
வெக்கத்தில் நாளைய காதலர்கள்..!! 

எந்த ஆட்சி மாறினால் என்ன 
சன்னலோர இருக்கை பெற்ற வெற்றியில், 
மிதப்புடன் வெற்றிலை தாத்தா..!! 

வேருக்கு வழிவிட்டு 
ஒதுங்கி நின்றது கிளை, 
முதியவருக்கு இருக்கை தந்த இளைஞன்..!! 

செங்கந்தால் பூவை 
சாக்கடை நனைக்கிறது, 
பெண் பின்னால் நிற்கும் பொறம்போக்கு..!! 

வட்டி கட்ட முடியாமல் 
சில்லறையாய் சிரிக்கும், 
பகுதி நேர பணக்கார நடத்துனர்..!! 

எமனுடன் போராட்டத்தில் 
மருத்துவமனையில் மனைவி, 
இருந்தும் அவசரமில்லாத ஓட்டுனர்..!! 

தொலைக்காட்சி தொடரை 
தவற விட்ட வருத்தம், 
பதட்டத்தில் குடும்பத் தலைவி..!! 

அந்நிய முதலீடுகள் அனைத்தும் 
விரைவில் பிச்சை கேட்கும், 
பாட்டியின் முறுக்கு வியாபாரம்..!! 

குப்பை உலகம் காண 
புதுவரவாய் ரோஜா செடி, 
மகிழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்..!! 

அமர இருக்கை வேண்டி 
இறைவனிடம் நீண்ட தவம், 
நேர்முகத் தேர்வில் தோற்ற இளைஞன்...!! 

இவர்களுடன், 
புதிய உலகத்தில் பயணித்து 
பயணிக்க வேண்டிய இடம் மறந்து 
மறதியில் மாறித் தவிக்கும் நான்..!!