www.gamblinginsider.ca

24 September 2013

நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!

அமைதியான கிராமம் 
அறிவற்ற மக்கள், 
கலப்படமில்லா காற்று, 
கர்வம் நிறைந்த மனது, 
இறைவன் வாழும் இயற்கை 
இதயமற்ற மனிதன்..!! 

தகுதியாய் வாழ நாதி இருந்தும் 
தரிசு நிலமாய் மக்கள்..!! 
அடுத்தவன் பிழைப்பில் மண் விழ 
கொண்டாடும் மக்கள் மனம்..!! 

கிராமங்கள் சூடியிருந்த 
மண் வாசனை மக்கி, 
கலாச்சார ஆடை கிழிந்து 
இயற்கை இழிவாகி நிற்கிறது..!! 

தெரு வழிப்போக்கன் தங்கி செல்ல 
தினுசாய் திண்ணை கட்டியவர்கள், 
எவரும் இன்று தங்கி விடாமல் 
எட்டி மிதிக்க வேலியிடுகின்றனர்..!! 

ஆடுபுலி ஆட்டத்துடன் 
தாயம் விளையாடியவர்கள், 
அன்பு காட்டி அடிமையாக்கி 
அடுத்தவன் குடும்பம் கலைக்க 
சூதாடி சூழ்ச்சி செய்கின்றனர்..!! 

நிதம் தேடித் தேடி 
நீதிக்கதை கேட்டவர்கள், 
தன் வாழ்க்கை தொலைய 
புரளி பேசியே இன்று 
பித்துப் பிடித்து அழிகின்றனர்..!! 

திருவிழா நாள் கண்டு 
ஊர்கூடி தேர் இழுத்து 
இன்புற களிப்புற்றவர்கள், 
பாகப்பிரிவினை கொண்டு 
பாவியாய் மாறி இன்று 
மல்லுக்கு நிற்கின்றனர்..!! 

யாதும் ஊரெனவும் 
யாவரும் கேளிராகவும் 
ஒன்றாய் வாழ்ந்தவர்கள், 
யாதும் பிரிவெனவும் 
யாவரும் எதிரியாகவும் 
எண்ணி வாழ்கின்றனர்...!! 

ஊர் மத்தியில் ஊர் கூடியும், 
பட்டு வேட்டி நாட்டாமையும், 
அருகே ஒரு செம்புடன் 
அதிசயம் செய்த தீர்ப்புகள், 
ஆலமரங்கள் அடியோடு 
என்று வெட்டப்பட்டதோ 
அன்றே அழிக்கப் பட்டுவிட்டன..!! 

இந்நிலை மாறவும், 
இக் கிராமங்களை மீட்டெடுக்கவும், 
எந்த நாட்டாமையால் 
தீர்ப்பை மாத்தி சொல்ல முடியும்.....???