www.gamblinginsider.ca

14 August 2017

ஞாயிறு உளறல் 1


பஸ் கிளம்பியது. பதிவு செய்யப்பட்ட இருக்கை என்பதால் இரு கை, கால்களையும் 75டிகிரியில் நீட்டிச் சாயும்போது ஒரு குரல். 'தம்பி ஜன்னல் சீட் பக்கம் நீங்க மாறிக்கோங்களேன்'. (பேருந்து வரலாறுகளைத் திருப்பிப் பார்த்தோமேயானால் ஜன்னல் சீட்டுக்காக எச்சில் துப்புதல், செருப்பு போட்டு சீட்டு பிடித்து வெட்டுக் குத்து நடந்த கதைகளெல்லாம் கேட்டிருக்கிறோமே.) காலம் மாறுவதற்கு ஏற்ப கால் வலிகளும் மாறி வருவதன் பரிணாம வளர்ச்சி இது. ஜன்னல் ஓரத்தில் இல்லாமல் இந்தப் பக்கம் உட்கார்ந்தால் நடைபாதையிலும் காலை நீட்டி இஷ்டத்துக்கு உறங்கலாம் என்பது அவர் கண்ட சுகமாக இருக்கலாம். அவர் வயதுக்கு மரியாதை கொடுக்கிறோமோ இல்லையோ மனம் விட்டுக் கேட்டுவிட்டார் என்பதற்காக இடம் மாறி அதே 75டிகிரியில் மறுபடி சாய்ந்தேன்.
மொபைல் நோண்டாத, திரைப்படம் போடாத பஸ் பயணம் பல நினைவுகளைக் கிளறிவிடும். வீட்டிற்கும் நான் சேரப் போகும் இடத்திற்கும் இடையே இருக்கும் பிரிவுக்குப் பாலம் அமைத்து பலமுறை பூச்செடிகள் வைத்தது பஸ் பயணங்கள் மட்டுமே. ஹாஸ்டலில் படிக்கும் காலங்களில் வீட்டிலிருந்து விடைபெறும்போது அழாமல் பஸ்க்குள் அழுததுண்டு. எதற்காக, எங்கிருந்து எங்கு பயணப்படுகிறோமோ அதனுடைய எதிர்காலம் பற்றி பஸ்ஸில் அதிகம் சிந்திப்பதுண்டு. சாதித்தே ஆக வேண்டுமென்று தனியொரு ஆண்டியாக மனதில் மடம் கட்டுவதுண்டு. பஸ்ஸில் இருந்து இறங்கும்போது, அந்தத் திரைக்கதை இறந்த காலமாகி 'ஐய்யய்யோ! வேலைக்குப் போக நேரமாகிவிட்டதே' என்கிற நிகழ்கால டைம் மிஷினில் காலடி வைத்தவுடன் இயந்திரம் ஓடத்தொடங்கிவிடும்.
'வேலை கிடைப்பதே பெரிதாக இருக்கும் இந்தக் காலத்தில் வேலைக்கேத்த கூலியை எதிர்பார்ப்பது மனசாட்சியற்ற தன்மையைக் குறிக்கும்.' என எப்படியெல்லாம் சமாதானம் ஆகி வேலை பார்க்க வேண்டுமோ அப்படிச் சுத்தமாக சம்பளம் குறித்து எண்ணாமல் வேலை பார்ப்பது நல்லது. தீர்க்கதரிசி ஸ்டாலினின் 'நமக்கு நாமே' எனும் சொல் எத்துணை தீர்க்கமானது. ஒருசிலர் சம்பளத்தை வைத்து அன்பு காட்டுவதைத் தீர்மானிக்கிறார்கள். சேலரி கிரெடிட் ஆகும்போது காட்டும் அன்பை மாசக் கடைசியில் காட்டுவதில்லை.
The Red Balloon என்கிற பிரெஞ்ச் படத்தில் ஒரு சிறுவனுக்கு சிவப்பு நிறத்தில் ஹீலியம் பலூன் கிடைக்கும். அதை ஓர் உயிராக மதித்து மழையில் நனையாமல் பத்திரமாகக் காத்து, வீடு வந்தவுடன் பறக்கவிடுவான். அவன் கையிலிருந்து விடுபடப் போகிறோம் என்றுணர்ந்து ஹீலியம் பலூன் உயிர் பெறும். அவன் எங்கு சென்றாலும் கூடவே போகும். இப்படி உயிருள்ள, உயிரற்ற என எந்தப் பொருளாக இருந்தாலும் நாம் காட்டும் அன்பு கண்மூடித்தனமாக இருந்தால் நேசிக்க வசதியாக இருக்கும். பணத்தை முன்னிறுத்தி அன்பை நிர்ணயித்தால் உயிருள்ள பொருளும் உயிரற்றதாகிவிடும். அந்த மாதிரி மனிதர்களிடம் பொறுமை காட்டினால் மட்டுமே நாம் உயிர்ப்புடன் இருக்க முடியும்.
'பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா' போன்ற பிரபல டெம்ப்ளேட் வசனங்கள் எல்லாம் நம் டெம்போவை எகிற வைத்து 'ஒவ்வொரு செயலுக்கும் உடனே எதிர்வினை ஆற்றி விடு' என்று சொல்லும்போது அமைதியாக இருக்க முடியாதுதான். காவிய மனோகரன் பக்கம் பக்கமாக வசனம் பேசி முடித்ததும் 'பொறுமையாக இரு' என்கிற ஒரே வார்த்தையில் ஒவ்வொரு அவரது தாயார் கட்டிப் போடுவார். அப்படி நம்முடன் யாருமில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் இல்லாமல் அன்றாட வாழ்க்கை இல்லையென்றானபின் பொறுமை மிகமிக அவசியம். 4G வேகத்திற்கு அருகில் நம்முடைய இன்ஸ்டன்ட் கோவமும் நிற்காது. சமூகத்தை சமூக வலைதளங்களால் திருத்த முடியும் என்று நினைத்து இதில் 24×7 கடமையாற்றினால் இறுதியில் தற்கொலை நிச்சயம். நான் கற்றுக்கொண்ட பாடங்களில் மிக முக்கியமானது ஃபேஸ்புக்கில் நம்முடைய உளறல் தனிப்பட்டதோ, பொதுப்பட்டதோ அதற்குவரும் கருத்துகளுக்கு அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது.
சார்லி சாப்ளினின் The Circus படத்தில் ஒரு காட்சி வரும். குதிரைக்குப் பயந்து தூங்கிக் கொண்டிருக்கும் சிங்க கூண்டுக்குள் நுழைந்துவிடுவார். சத்தம் போடாமல் வெளிய வர முயற்சி செய்யும்போது கூண்டிற்கு வெளியே ஒரு நாய் வந்து சத்தமாகக் குலைக்கும். 'அட நாயே! குரைக்காமல் கொஞ்ச நேரம் அமைதியாக இரு' என்று சைகை காட்டுவார். அந்த நேரத்தில் சிங்கமும் அசைந்து கொடுக்கும். என்ன செய்வதெனப் புரியாமலும் நாயின் வாயைப் பொத்த முடியாது என்பதாலும் எதற்கும் ஆகாத தனது காதைப் பொத்திக்கொள்வார் சாப்ளின்.
ஆக... சரியோ, தவறோ நமக்குப் பிடித்ததை தயங்காமல் செய்யலாம். அதைப் பார்த்து எந்த நாய் எங்கிருந்து குலைத்தாலும் நம் காதை முதலில் பொத்திக்கொள்வோம். பின்னால் வரப்போகும் சிங்க ஆபத்துகளை அப்புறம் பார்க்கலாம்.😍 #உளறல்_தொடரும்
Mano Red / 6.8.17